மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை மகிழ்வித்து வருபவர்.
அனைத்தையும் மீறி, அவர் முகத்தில் தெரியும் அப்பாவித்தனம் அப்பாத்திரங்களின் ஒரு அம்சமாக அமைந்திருக்கும்.
அதையே கதைக்கருவின் மையமாக்கி, அவரை வில்லத்தனமாகக் காட்டியது ஜேசி நிதின் இயக்கியுள்ள ‘சூக்ஷ்ம தர்ஷினி’ படத்தின் ட்ரெய்லர்.
சூக்ஷ்ம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என்று அர்த்தமாம். அந்த டைட்டிலே இப்படம் ஒரு த்ரில்லர் என்பதைச் சொல்லிவிடும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் நாயகியாக நஸ்ரியா நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ஆக, மேற்சொன்ன தகவல்களே ‘சூக்ஷ்ம தர்ஷினி’ படம் குறித்த எதிர்பார்ப்புகளைக் கூட்டியிருக்கும். தியேட்டரில் படம் பார்த்து முடித்தபிறகு, அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகினவா?
மீண்டும் சொந்த ஊரில்..!
ஆண்டனி – பிரியதர்ஷினி (தீபக் பரம்போல், நஸ்ரியா) தம்பதி தங்களது ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பணிக்குச் செல்லத் தீர்மானிக்கிறார் நஸ்ரியா.
அதற்காக, தான் மைக்ரோபயாலஜிஸ்ட் ஆக வேலை பார்த்த நிறுவனத்திற்குச் சென்று பணி அனுபவச் சான்றிதழைப் பெறுகிறார்.
அதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக ‘நான்கு ஆண்டுகள்’ என்று பொய்யாக ஒரு தகவலைச் சேர்க்கிறார்.
பிரியா வசிக்கும் தெருவில் வாழ்பவர் ஸ்டெபி (மெரின் பிலிப்). கணவர் இல்லாமல் தனியாகத் தனது குழந்தையை வளர்த்து வருகிறார்.
அதே தெருவில் அஸ்மா (பூஜா மோகன்ராஜ்), சுலு (அகிலா பார்கவன்) என்று மேலும் சில பெண்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், பிரியா வசிக்கும் வீட்டின் அருகே மேனுவல் (பசில் ஜோசப்) குடும்பம் இடம்பெயர்கிறது. ஏற்கனவே அவர்கள் அந்தப் பகுதியில் வசித்தவர்கள் தான். நகரத்திற்குச் சென்றவர்கள், சில ஆண்டுகள் கழித்து அந்தக் கிராமப் பகுதிக்குத் திரும்பியிருக்கின்றனர்.
மேனுவல் உடன் அவரது தாய் கிரேஸி மட்டுமே இருக்கிறார். அவர் அக்கம்பக்கத்தினர் உடன் பேசுவதில்லை.
ஸ்டெபி உடன் வலிய வந்து பழக ஆரம்பிக்கிறார் மேனுவல். அவரைத் தனது பேக்கரிக்கு அழைத்துச் செல்கிறார். அவர்களது உறவு இறுக்கமானதாக மாறுவதாக உணர்கிறார் ஸ்டெபி.
இந்த நிலையில் உறவினர் ராய், அவரது மகன் டாக்டர் ஜான் (சித்தார்த் பரதன்) உடன் இணைந்து ரகசியத் திட்டமொன்றில் இறங்குகிறார் மேனுவல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது வெளி நபர்கள் எவருக்கும் தெரிவதில்லை.
ஒருநாள் இரவு, ஆண்டனி – பிரியா தம்பதியினர் தங்களது நான்காவது திருமணநாளைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் வீட்டில் தெருவினர் அனைவரும் கூடியிருக்கின்றனர். மேனுவலும் அங்கு வருகிறார்.
அதற்கு முன்னதாக, வீட்டில் இஸ்திரி பெட்டியை ‘ஆன்’ செய்து அறை முழுக்கச் சில துணிமணிகளைப் பரப்பி வைத்துவிட்டு வந்திருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில், மேனுவல் வீட்டில் தீ பற்றுவதை அனைவரும் காண்கின்றனர். போலீசுக்கு தகவல் சொல்லப்படுகிறது.
அடுத்த சில மணி நேரங்களில், இன்னொரு இடத்தில் கிரேஸி இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.
அதன்பிறகு, தனது தாய் கிரேஸிக்கு ‘அல்சைமர்ஸ்’ எனும் மறதி நோய் இருப்பதாகத் தெருவில் இருப்பவர்களிடம் கூறுகிறார் மேனுவல். ஆனால், பிரியா மட்டும் அதனை நம்புவதாக இல்லை.
மேனுவலின் சிரிப்பு, உடல்மொழி எல்லாவற்றிலும் பொய் நிறைந்திருப்பதாக உணர்கிறார் பிரியா.
அவர் நினைத்தது போலவே, அதற்கடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கிரேஸி காணாமல் போகிறார்.
அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான், அந்த வீட்டுக்கு பிரியா சென்று வந்திருக்கிறார்.
மேனுவலின் வீட்டில் இருந்த ஸ்டெபி, கிரேஸி காணாமல் போன நேரத்தில் மயக்கத்தில் இருந்திருக்கிறார்.
கிரேஸி காணாமல் போன தகவல் அறிந்ததும், நியூசிலாந்தில் வாழும் அவரது மகள் டயானா (அபர்ணா ராம்) ஊர் திரும்புகிறார். அங்கிருக்கும் சொத்துகளை விற்க விரும்புவதாகச் சொல்லும் அவர், அதற்கடுத்த நாளே மீண்டும் நியூசிலாந்து செல்வதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
அன்றிரவு, திடீரென்று கண் விழிக்கிறார் பிரியா. ஜன்னல் வழியே ஏதோ வெளிச்சம் தெரிந்ததாக உணர்கிறார்.
அதற்கடுத்த சில நிமிடங்களில், மேனுவலின் வீட்டு மாடி ஜன்னலில் கிரேஸியின் உருவம் தென்படுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்.
அந்த நேரத்தில், அங்கு வரும் கணவன் ஆண்டனியிடம் அதனைச் சொல்கிறார். ஆனால், அவர் நம்பத் தயாராக இல்லை.
அதன்பிறகு, மேனுவல் வீட்டில் ஏதோ ஒரு குற்றம் நிகழ்வதாக உணர்கிறார் பிரியா. அதனைத் தானே சென்று அறிய முடிவெடுக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? மேனுவலின் தாய் கிரேஸி என்ன ஆனார்? அப்படியென்ன குற்றம் அந்த வீட்டில் நடக்கிறது? இந்த கேள்விகளுக்குப் பதிலளித்து நிறைவுறுகிறது ‘சூக்ஷ்ம தர்ஷினி’.
மீண்டும் மேனுவல் குடும்பம் சொந்த ஊருக்குத் திரும்புவதில் இருந்து படம் தொடங்கினாலும், பிரியா எனும் பெண் சக மனிதர்களை விட எந்தளவுக்குப் புத்திக்கூர்மையுடன் திகழ்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறது திரைக்கதை.
அதனால், படத்தின் கதையோடு எளிதாகப் பார்வையாளர்களால் ஒன்றிவிட முடியும்.
பொய்யாகும் யூகங்கள்!
சூக்ஷ்ம தர்ஷினி படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை அதுல் ராமச்சந்திரன், லிபின் இருவரும் கையாண்டிருக்கின்றனர். அவர்களோடு இயக்குநர் எம்.சி.ஜிதினும் எழுத்தாக்கத்தில் பங்கேற்றிருக்கிறார்.
த்ரில்லர் சினிமா ரசிகர் எளிதாக யூகிக்கக்கூடிய காட்சிகள் படத்தில் உண்டு என்றபோதும், கிளைமேக்ஸில் வரும் திருப்பங்கள் நிச்சயம் அதற்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
நமது யூகங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில், சில வேளைகளில் அதற்கு இடமே தராத அளவுக்குப் பரபரவென்று நகர்கின்றன பின்பாதிக் காட்சிகள். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
தொடக்கக் காட்சியையும் இறுதிக் காட்சியையும் இணைத்துக் காட்டியிருப்பது, கூடுதல் ‘கூஸ்ம்பம்ஸ்’ மொமண்டுக்கு வழி வகுக்கிறது.
சரண் வேலாயுதன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்.
நகரத்தை விட்டு விலகி நிற்கிற ஒரு கிராமமாக, நவீனத்தைக் கைக்கொண்டிருக்கிற வசிப்பிடமாக அமைந்துள்ள கதைக்களத்தை அழகுறக் காட்டியிருக்கிறார்.
சமான் சாக்கோவின் படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்சியையும் அளவெடுத்து வைத்தாற்போல ‘கட்’ செய்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், ‘அடுத்தது என்ன’ என்ற எதிர்பார்ப்பை ஊட்டும் வகையில் கதையோட்டத்தைத் திரையில் ஏற்படுத்தியிருக்கிறது.
வினோத் ரவீந்திரனின் கலை வடிவமைப்பு, விஷ்ணு கோவிந்தின் ஆடியோகிராஃபி, பிசி ஸ்டண்ட்ஸின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, மஹ்சார் ஹம்சாவின் ஆடை வடிவமைப்பு என்று தொழில்நுட்ப அம்சங்கள் கூடக் கதையோட்டத்தை ‘நுணுக்கமாக’ பார்வையாளர்களுக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விஎஃப்எக்ஸ், டிஐ நுட்பங்களும் கூடத் திரையில் காட்சிகளின் உருவாக்கத்தில் பெரிய ஏற்ற இறக்கங்களை உணராத வண்ணம் ஒரு ‘சீர்மை’யை ஏற்படுத்தியிருக்கின்றன.
இசைஅய்மைப்பாளர் கிறிஸ்டோ சேவியர், ‘மிஸ்டரி த்ரில்லர்’ வகைமையில் அமைந்த திரைக்கதைக்கு நியாயம் செய்யும்விதமாகக் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் கோர்வைகளைத் தந்திருக்கிறார்.
பின்பாதியில் காட்சிகளில் நிறைந்திருக்கும் வேகத்தைக் கூட்டுவதில் பின்னணி இசை மும்முரமாகச் செயல்பட்டிருக்கிறது.
நஸ்ரியாவுக்கு இது மீண்டும் ஒரு ‘இன்னிங்ஸ்’. அதே குறும்புத்தனத்தோடு, அப்பாவித்தனத்தோடு, கொஞ்சம் புத்திசாலித்தனமும் தென்படும் வகையிலான பாத்திரத்தை எளிதாக ‘ஹேண்டில்’ செய்திருக்கிறார்.
‘நரித்தனம்’ கலந்த மனிதனாக, எந்நேரமும் வெள்ளந்தி சிரிப்பை உதிர்ப்பவராகத் தோன்றியிருக்கிறார் பசில் ஜோசப். கிளைமேக்ஸில் தனது வில்லத்தனத்தின் உயரத்தை அவர் கூட்டுகிறபோது ஆச்சர்யம் பன்மடங்காகிறது.
மனோகரி ஜாய் இதில் கிரேஸி அம்மச்சியாக வருகிறார். ‘வெளிர்ந்த முகத்தோடு’ அவர் வருகிற காட்சிகள் படத்தின் அடிநாதமாக இருக்கின்றன.
கதை நஸ்ரியாவையே சுற்றி வருவதால், அவரது கணவராக வரும் தீபக் பரம்போலுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும், மனிதர் ஐந்தாறு காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ‘பிரேமலு’ அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், கோட்டயம் ரமேஷ், அபர்ணா ராம், சரஸ்வதி என்று பலர் இதிலுண்டு.
அனைவரையும் தாண்டி, ‘அங்கிள் இந்த கேம்ல 7வது லெவல்லதான் இருக்காரு, நான் 77வது லெவல்’ என்று கலாய்க்கும் குழந்தை நட்சத்திரம் ஹெஸ்ஸா மேகாக் நம்மை வசீகரிக்கிறார்.
தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைக் கவர்ந்திழுக்கிற ஒரு த்ரில்லர் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் எம்.சி.ஜிதின்.
கதாபாத்திரங்களின் கனகச்சிதமான வார்ப்பு மூலம் அடுத்தடுத்த காட்சிகளில் அவை எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதற்கான நியாயத்தையும் காட்சிகளில் முன்னரே சொல்லிவிடுகிறார்.
இக்கதையில் கிரேஸி அம்மையார் எப்படி எவர் கண்களுக்கும் புலப்படாமல் காணாமல் போனார் என்பது மிகப்பெரிய கேள்வி.
இது போன்ற லாஜிக் மீறல்கள் இக்கதையில் உண்டு என்றபோதும், அதனை நாம் பொருட்படுத்தாத அளவுக்குப் பரபரவென்று காட்சிகள் நகர்கின்றன.
மொத்தத்தில், த்ரில்லர் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தினைத் தந்திருக்கிறது ‘சூக்ஷ்ம தர்ஷினி’ படக்குழு. பாத்திரங்கள், கதைக்கரு மற்றும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப இந்த டைட்டிலை இட்டதற்கே தனியாகப் பாராட்ட வேண்டும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்