அண்ணாவைப் பேரறிஞராக மாற்றிய குடும்பச் சூழல்!

கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார்.

ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.

“தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை. “

பதறிப் போய், ” ஏன்… ஏன்… துரை! இப்படிச் சொல்றே? ” என்று தொத்தா கேட்டார்.

“பின்னே என்ன?… நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம். “

“அப்படிச் சொல்லாதேப்பா, நகை இருக்கும், போகும். நீ படிச்சுச் சம்பாதிக்கிறபோது தானாக வரும். எங்களுக்கு என்ன சொத்து இனி வேணும்? நீயும் உன் படிப்பும்தான் எங்க சொத்து. எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று தெரிஞ்சுக்கிட்டு நீ படிச்சா போதுமப்பா” என்று தொத்தா பேசியதைக் கேட்டு அண்ணா கண் கலங்கினார். அன்றிலிருந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினார்.

கல்லூரி வாலிபர்கள் பொழுதுபோக்கிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பார்த்துச் சபலமேற்படுகிறபோதெல்லாம் தொத்தாவின் நகைகள் அடமானத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் வெறுங்கழுத்தோடு தொத்தா இருக்கிற காட்சியையும் நினைத்துக் கொள்வார் அண்ணா.

  • நன்றி: முகநூல் பதிவு
You might also like