ஜாலியோ ஜிம்கானா – இன்னொரு ‘மகளிர் மட்டும்’?!

தமிழ் திரையுலகில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கதாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இயங்கி வருபவர் சக்தி சிதம்பரம். அவர் இயக்கிய ‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘மகா நடிகன்’, ‘இங்கிலீஷ்காரன்’ போன்ற படங்கள் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்தக் கூடியவை.

‘இனிது இனிது காதல் இனிது’, ‘காதல் கிறுக்கன்’ போன்ற அவரது தோல்விப் படங்கள் கூட சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டிருக்கும்.

ஆனால், அதன்பிறகான படங்களில் அப்படிப்பட்ட திரைக்கதையாக்கத்தைக் காண முடியவில்லை.

இந்த நிலையிலேயே, படம் முழுக்கப் பிரபுதேவா பிணமாக வருவதாகக் காண்பிக்கப்பட்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ பட ட்ரெய்லர் ‘இது இன்னொரு மகளிர் மட்டும் ஆக இருக்குமா’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

சக்தி சிதம்பரம் இயக்கிய இப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

மடோனா செபாஸ்டியன், அபிராமி, மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், யோகிபாபு, சாய் தீனா, நாஞ்சில் சம்பத், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் தரும் காட்சியனுபவம் எப்படியிருக்கிறது?

ஒரு புள்ளியைச் சுற்றி..!

தென்காசியில் தாத்தா (ஒய்.ஜி.மகேந்திரன்), தாய் செல்லம்மா (அபிராமி), இரண்டு சகோதரிகளோடு வாழ்ந்து வருகிறார் பவானி (மடோனா செபாஸ்டியன்).

ஒரு தேவாலயத்திற்குச் சென்று, அங்கிருக்கும் பாதிரியார் மார்ட்டின் லூதர் கிங்கிடம் (யோகிபாபு) அவர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களைச் சொல்வதில் இருந்து இப்படத்தின் திரைக்கதை தொடங்குகிறது.

தென்காசியில் ‘வெள்ளைக்காரன் பிரியாணி’ என்ற பெயரில் ஒரு உணவகத்தை நடத்தியவர் பவானியின் தாத்தா.

‘பைபாஸ்’ சாலை காரணமாக போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட, அந்த ஹோட்டலை மூட வேண்டியதாகிறது.

அது தாத்தாவைக் கவலையில் தள்ளுகிறது.

குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டியும், தாத்தாவின் மனநலத்தைக் காக்க வேண்டியும், மீண்டும் அதே பெயரில் ஹோட்டல் தொடங்க முடிவெடுக்கிறார் பவானி. அதற்காக, கந்துவட்டிக்கு ஒருவரிடம் (சுரேஷ் சக்கரவர்த்தி) கடன் வாங்குகிறார்.

நினைத்தவாறே ‘வெள்ளைக்காரன் பிரியாணி’யைத் தொடங்குகிறார்.

ஒருநாள், அவரிடம் விருந்துக்கு ‘ஆர்டர்’ தருகின்றனர் எம்.எல்.ஏ. அடைக்கலராஜின் (மதுசூதனன் ராவ்) ஆட்கள். தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தால், அவர் கட்சிக்காரர்களுக்கு தரும் விருந்து அது.

தடபுடலாக இருக்க வேண்டும் என்று அந்த விருந்துக்காகக் கடன் வாங்கிச் சமைக்கிறார் பவானியின் தாத்தா. ஆனால், அந்தக் காசைத் தர மறுக்கிறார் அடைக்கலராஜ்.

தாத்தா அவரிடம் ஆத்திரப்பட, அடைக்கலராஜின் ஆட்கள் பவானியின் குடும்பத்தினரைத் தாக்குகின்றனர். கடையை அடித்து நொறுக்கி, அவர்களது சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.

படுகாயமடைந்த தாத்தாவை மருத்துவமனையில் சேர்க்கிறார் பவானி. உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய 25 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

அதையடுத்து, அதே கந்துவட்டி நபரிடம் கடன் கேட்கிறார் பவானி.

அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் வந்த தகவல் கிடைக்கிறது.

உடனடியாக, அந்தப் பணத்தை மருத்துவமனையில் கட்டுகிறார். அதன்பிறகே, அந்தப் பணத்தை அனுப்பியது அடைக்கலராஜின் ஆட்கள் என்று தெரிய வருகிறது.

தவறுதலாக வேறொரு பவானிக்கு அனுப்ப வேண்டிய தொகை, அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

அதனைத் திருப்பித் தருமாறு அடைக்கலராஜின் ஆட்கள் மிரட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது பவானியின் குடும்பம்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கண் விழிக்கும் தாத்தா, ‘உடனடியாகச் சென்று வழக்கறிஞர் பூங்குன்றனைப் பாருங்கள்’ என்கிறார். தங்களுக்கு விடிவுகாலம் அவர் மூலமாகக் கிடைக்கும் என்று அவர்களனைவரும் நம்புகின்றனர்.

பூங்குன்றன் (பிரபுதேவா) தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்கின்றனர். அறைக்கு அவர்கள் சென்றபோது, அவரது பிணத்தையே காண நேர்கிறது.

அதன்பிறகு என்னவானது? பூங்குன்றனைக் கொன்றது யார்? பவானியின் குடும்பம் பூங்குன்றன் பிணத்தை என்ன செய்தனர் என்று விரிகிறது மீதி திரைக்கதை.

மொத்தக் கதையும் பூங்குன்றன் எனும் ஒரு புள்ளியைச் சுற்றி மட்டுமே பின்னப்பட்டுள்ளது. அதனால், அவரிடத்தில் இருந்து திரைக்கதை தொடங்குவதாகக் காட்டப்படுகிறது.

அதனைத் தவிர்த்திருந்தால், இன்னும் சுவாரஸ்யமானதாக இப்படம் அமைந்திருக்கும்.

அசத்தும் பிரபுதேவா!

மீண்டும் நாயகன் ஆனபிறகு பிரபுதேவாவிடம் இருந்து சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அவர்களது ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது.

பிணமாக வந்து அவர் சண்டையிடும், கலாட்டா செய்யும் காட்சிகள் அப்படியே ‘மகளிர் மட்டும்’ நாகேஷை நினைவூட்டுகின்றன.

அதனுடன் ஒப்பிட முடியாது என்றபோதும், குறை சொல்லும்விதமாக இல்லாததே பிரபுதேவாவின் நடிப்புக்கான பாராட்டு.

சாய் தீனா, ரோபோ சங்கர், வினோத் கூட்டணி ‘சீரியசாக’ பேசி நம்மைச் சிரிப்பலையில் தள்ளுகிறது.

மதுசூதனன் ராவ், நாஞ்சில் சம்பத், கேபிஒய் கோதண்டம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கூட ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக்கின்றன.

இது போதாதென்று ஜான் விஜய், ஆதித்யா கதிர், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கிச்சுகிச்சு மூட்டுகின்றன.

பவானியாக வரும் மடோனா செபாஸ்டியன், அவரது அம்மாவாக வரும் அபிராமி மற்றும் இரண்டு தங்கைகளாக நடித்தவர்களைக் கொண்டு இன்னும் கொஞ்சம் சிரிக்க வைக்கும் காட்சிகளை இணைத்திருக்கலாம்.

அதற்கான ‘இடத்தை’ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர்.

இவர்கள் தவிர்த்து ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பூஜிதா பொன்னடா, ‘சூப்பர் டீலக்ஸ்’ குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் என்று பலர் இதில் உண்டு.

சக்தி சிதம்பரம், சாம்ஸ் வரும் இரண்டொரு காட்சிகள் முழுமையற்றதாகத் தெரிகின்றன.

ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் சந்திரா, கலை இயக்குனர் ஜனார்த்தனன் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பினால், வழமையான கமர்ஷியல் படம் பார்த்த உணர்வு திரையில் காணக் கிடைக்கிறது.

நடிப்புக் கலைஞர்களின் ‘காமெடி டைமிங்’கை ரசிகர்கள் உணர்ந்து சிரிக்க இடம் தந்திருக்கிறது ராமர் மற்றும் நிரஞ்சன் ஆண்டனியின் படத்தொகுப்பு.

சில ஷாட்களில் அவர்களது ‘எபெக்ட்’கள் சட்டென்று கதையை நகர்த்த உதவியிருக்கின்றன. சில இடங்களில் அவை ‘அலங்காரங்களாக’ தெரிகின்றன.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘போலீஸ்காரனை கட்டிகிட்டா’ பாடல் நிறையவே ஆபாசத்தை தாங்கி நிற்கிறது, காட்சியமைப்பிலும் கூட. போலவே, பிரபுதேவா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆடும் ‘ஊசி ரோசி’ பாடல் இந்தப் படத்திற்குத் தேவையற்ற ஆணி தான்.

ஆனாலும், பிரபுதேவா ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் படம் பார்க்க வந்தவர்களைக் கடுப்பேற்றியிருக்கிறது படக்குழு.

அதேநேரத்தில், நகைச்சுவையூட்டும் பின்னணி இசையால் கலகலப்பூட்டியிருக்கிறார் அஸ்வின் விநாயகமூர்த்தி.

படத்தின் தொடக்கத்திலேயே, ‘இதில் லாஜிக் குறைபாடுகளைப் பொருட்படுத்தாதீர்கள்’ என்று சொல்லிவிடுகிறார் இயக்குனர். கூடவே, டைட்டில் உடன் ‘நான்ஸ்டாப் நான்சென்ஸ்’ எனும் டேக்லைனையும் சேர்த்திருக்கிறார்.

கொஞ்சம் முயன்றிருந்தால், நான்கு பெண்கள் உடன் ஒரு பிணம் எனும் மையக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஆட்டம் போட்டிருக்கலாம்.

அதற்குப் பதிலாக, அண்டாவில் நிறைந்திருக்கும் உணவை ஸ்பூன் கொண்டு சாப்பிடுவது போன்று திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

‘எதனைக் கொண்டு சாப்பிட்டால் என்ன, கொஞ்சமாய் சாப்பிட்டாலும் போதுமே’ என்பவர்களுக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ பிடிக்கும். அதற்குத் தகுந்தவாறு படத்தில் சிரிப்பதற்கான இடங்கள் இருக்கின்றன.

‘அது எப்படிப் போதும்’ என்று முகத்தை அஷ்டகோணலாக்கி கொள்பவர்களை இப்படம் திருப்திப்படுத்துவது கடினம்.

படம் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களில், நீங்கள் எந்த ரகம் என்று கண்டுபிடித்துவிடலாம் என்பது ‘ஜாலியோ ஜிம்கானா’வின் இன்னொரு சிறப்பு.

– உதயசங்கரன் பாடகலிங்கம்.

You might also like