கொண்டாட்டமாக மாறிய ‘மகள் இருந்த வீடு’ வெளியீட்டு விழா!

பத்திரிகையாளர் பொன் மூர்த்தியின் அனுபவம்

சென்னை மியூசிக் அகாடமியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதி குமுதத்தில் தொடராக இடம்பெற்ற ‘மகள் இருந்த வீடு’ நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொடைமனச் செம்மல் இராம.சிவகுமார், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ், ஹைக்கூ கவிஞர், தயாரிப்பாளர், இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் இயக்குநர் சீனு ராமசாமி, கவிஞர் ஆசிரியர் இளம்பிறை, பேராசிரியர் இரா.பச்சியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் பேசிய தொழிலதிபர் சிவக்குமார், திரைப்படங்களில் காட்சியின் பின்புறத்தில் கவிதை வரிகளைக் காட்டினால் என்ன? ஒரு கவிஞன் முன்னேறுவான் அல்லவா? என்று கேள்வியை எழுப்பியதோடு ஜெயபாஸ்கரனின் கவிதை வரிகளைச் சொல்லி மகிழ்ந்தார். லிங்குசாமி தலைமையில் நடந்த ஹைக்கூ கவிதைப் போட்டியில் நிதி வழங்கியவர் இவர்தான்.

அடுத்து பேசிய பச்சியப்பன், அழகு தமிழ்ச் சொல்லெடுத்து பல்கலைக்கழக விழாவாக சற்று நேரத்தை மாற்றி அமைத்தார்.

அதற்கடுத்து சீனு ராமசாமி நகைச்சுவை அரங்காக மாற்றிக் காட்டினார். கவிதை குறித்தான பொது மேடை இதுதான் எனக்கு முதல் மேடை என்றவர், கவிஞர் ஒரு உயிர், இன்னொரு உயிரைப் படைக்கிறார் என்றார் முத்தாய்ப்பாக.

புத்தகம் வெளியிடுவது எவ்வளவு கடினம். அதைப் பற்றிச் சொன்னால் மற்றவர்கள் செய்யும் உபதேசம் குறித்து வாய், பல் ஒப்புமை காட்டி மிகவும் கோவையாகப் பேசினார்.

அடுத்து வந்த லிங்குசாமி, பாக்யராஜைதான் குருவாக ஏற்றுக்கொண்டாடியதைச் சுட்டிக்காட்டி அவரவருக்கான அடையாளம் அவர்களது மாஸ்டர்பீஸ்தான். எனக்கு ஆனந்தம் படம் அடையாளம் என்றார்.

சீனு ராமசாமி பேசும்போது, இவர் எவ்வளவு நகைச்சுவையாகப் பேசுகிறார். ஆனால் படங்களை ஏன் சீரியசாக எடுக்கிறார் என்கிற கேள்வியை எழுப்பி அனைவரையும் வியக்க வைத்தார்.

அடுத்து வந்த பாக்யராஜ், திரைப்படத்தில் தான் பெண்கள் சார்ந்த காட்சிகளை அமைத்ததற்கான காரணங்களை மிக அழகாகச் சொன்ன விதம் சிரிப்பலையை எழுப்பியதோடு சிந்திக்கவும் வைத்தது.

இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே உள்ள ஜெயபாஸ்கரன், ‘மகள் இருந்த வீடு’ என்று எழுதியிருக்கிறார். ஆச்சரியம் என்றார்.

அடுத்து நன்றியுரையில் பேசிய ஜெயபாஸ்கரன், இதற்கு பதில் சொல்வார் என எதிர்பார்த்த வேளையில் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அவர்களது சிறப்புகளைச் சொல்லி அவர்களது கவிதை வரிகளைச் சொல்லி, தன் கவிதை சார்ந்த வாழ்க்கை குறித்தும் பேசி மிக அருமையாக அனைவரையும் பாராட்டினார்.

மொத்தத்தில் அந்தச் சிற்றரங்கம் பெரிய அரங்கைப் போல கம்பீரமாக அமைந்திருந்தது. இந்த விழாவில் இன்னொரு சிறப்பு, வந்திருந்த பங்கேற்பாளர்களில் பெரும்பான்மையோர் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.

நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரை யாரும் அப்படி இப்படி அசையவில்லை. ஆற்றொழுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொகுப்பாளர் பேரா. ஏகா ராஜசேகர் சிறப்பாக நடத்தினார். அன்றைய பொழுது சிறப்பான பொழுதாக நிறைவாக அமைந்திருந்தது.

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like