குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் மக்களின் வலி!

நூல் அறிமுகம்: கல்மரம்!

திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

என் உரை என்று ‘கல்மரம்’  நூலில் அவர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பெரும் கட்டிடங்களையும் உருவாக்கிவிட்டு நகரங்களில் பிளாட்பாரத்தில் குடிசை போட்டு அங்கேயே உண்டு, உறங்கி பல குடும்பங்கள் வாழ்வதை பலமுறை பார்க்க நேர்ந்திருக்கிறது .

கட்டிடத் தொழிலாளர்களின் அந்த நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கலானேன். அவ்வப்போது கட்டட வேலை நடக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களோடு பேசினேன். அவர்களது வாழ்வை கேட்டு மனம் தளர்ந்தேன்.

ராயபுரம் வண்ணாரப்பேட்டை குடிசைப் பகுதிகளில் வாழும் பல கட்டிட தொழிலாளர் குடும்பங்களுக்கு நேரில் சென்று அவர்களோடு டீ குடித்து பேசி பழகினேன்.

பலமுறை சென்று அவர்களது வாழ்க்கையில் சோகத்திற்கான காரணங்களில் அறியாமையும் குடியும் பிரதான பங்கு வகிப்பதை அறிந்துகொண்டேன்

அவர்கள் வாழ்வில் ஒளி மிக்கதாக ஒளிர என்னால் இயன்ற சிறு அகல் விளக்கு ஏற்றும் பணியே இந்த கல்மரம் நாவல்,” என்கிறார் திலகவதி.

கல் மரம் என்ற இந்த நாவல் கட்டிடத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை ஆராய்ந்து எழுதி இருக்கும் புதினம்.

புதிய புதிய கட்டிடங்களை உருவாக்கிவிட்டு மழையில் நனைந்து வெயிலில் காயும் தொழிலாளர்களின் வேதனைக் உணர்வை வெளிப்படுத்துகிறது. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதிலட்சுமி, காவேரி, கன்னியம்மா, ரஞ்சனி, சுசிலா, ராகினி என்ற பெண் பாத்திரங்களின் மூலம் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வின் இன்னல்களையும் வாழும் நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

யதார்த்தமாக கணவன் கட்டிட விபத்தில் இறந்ததால் பையனை அதே தொழிலுக்குப் போக விடாமல் தடுக்க நினைக்கும் தாயுள்ளம், சைக்கிள் வாங்க முடியாத நிலை, அன்றாட உணவுக்கும் வேலைக்கும் தேடல் என தொடங்கும் உழைப்பாளர் குடும்பத்தின் கதைகள், சென்னை மாநகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதில் உள்ள நிலைமைகள் அனைத்தையும் படம் பிடித்து காட்டுகிறது இந்த நாவல் .

வேலையின்றி அலையும் பையனுக்கு பெண் பார்த்து திருமணம் முடிப்பதால் பையன் பொறுப்பு மிக்கவனாகி விடுவான் என நினைக்கும் தாயார் ஆதி லட்சுமி, தனது பெண்ணிடம் ஆண்பிள்ளை குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வரலாமா என்று கூறுகின்ற பழமை ஒருபுறம்; பொம்பள கொத்தனாராக போகிறேன் என்று துணிவாக பேசும் மகள் காவேரி மறுபுறம் என நாவல் மலர்கிறது.

இட்டிலி கடை வைத்திருக்கும் சின்னத்தாயி அன்புத் தாயாக இருப்பதோடு அல்லாமல் அறிவுபூர்வமாக அங்கே குடிசைப்பகுதி இளைஞர்களுக்கு நல்ல ஞானத் தாயாக விளங்குகிறார்.

குடிசைப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக வந்து தங்கும் சுசிலா தனது சேவை மூலம் மாற்றம் செய்ய முடியும் என்பதை நம்பிக்கையோடு, உணர்வையும் உரிமை உணர்வு ஊட்டுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

சுசிலாவுடன் சேர்ந்து இளம்பெண் காவிரியும் விவரத்தை கற்றுக் கொள்கிறாள்; சங்கம் திங்கள் போல முழுமையாக முழுநிலவாக மாறப் பாடுபடுகிறாள்.

ஆதிலட்சுமியின் மகன் காசி, காவேரியின் அண்ணன் காசி வேலையில் இருப்பதாக பொய் சொல்லி திருமணம் புரிவது ராகினியின் கனவுகள் கரைந்து, கணவனுக்கு வாட்ச்மேன் வேலை பெற்று பிளாட் கட்டும் இடத்தில் தங்குமிடம் ஏற்படுத்த தானும் கணக்குப் பிள்ளையாக வேலை செய்கிறாள்.

முதலாளிக்கு விசுவாசமாக இருந்து அவர் தொழிலாளிகளை கசக்கிப் பிழிவது கண்டு மனம் வெதும்பினாள்

வேலை வாங்குவதற்கு கற்கண்டாய் பேசும் முதலாளி விபத்து ஏற்படும் போதெல்லாம் சிடுசிடுப்புடன் மனிதத்தன்மையற்ற அரக்க குணத்தை காணும் போது தான் புரிகிறது அனுபவத்தின் வழி சங்க உணர்வு பெறுகிறாள் ராகினி.

அடுக்குமாடி கட்டிடம் வளர்வது போல இந்த கதை நாவல் வளர்கிறது. அடுக்குமாடி கட்டிடம் வளரும்போதே பிரச்சினைகள் சம்பவங்களால் வெளிப்படுகின்றன.

முதலில் கருந்தேள் கொட்டியபோது தொழிலாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற கன்னியம்மாவை முதலாளி கோபித்தது; காசியை முதலாளி கை நீட்டி அடித்தது; கன்னியம்மா எதிர்த்தவுடன், உடன் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையை நிறுத்துவது பிறகு முதலாளி வருத்தப்படுவது போல பேசியது என இயல்பான காட்சிகள் புத்தகம் முழுவதையும் கட்டிடம் வளர்வது போல காணலாம்.

கம்சலை என்ற பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு இரண்டு விரல்கள் துண்டிக்கப்படும் போது உடன் பணியாற்றும் தொழிலாளிகள் பதறுவதும் பின் முதலாளி வந்ததும் வேலை நிற்பதை பற்றி கவலைப்படுவதும் மனிதத்தன்மையற்ற முதலாளி தொழிலாளி திருப்திப்படுத்தவே பண உதவி செய்கிறார் என்பதையும் உண்மைச் சம்பவமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

வெளியூரிலிருந்து ஆள் கொண்டு வந்து கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடியமர்த்துவது; குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் குடும்பங்கள் – நோய்வாய்ப்படும் போதும்; மழைக்காலத்தில் பட்டினி கிடக்கும்போதும் முதலாளியின் பார்வைக்கு தெரிவதில்லை என்பதும் கதையில் சுட்டிக் காட்டப்படுகிறது.

தொழிலாளர் சங்கம் அமைத்து வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என உணரும் கட்டிடத் தொழிலாளர்களின் உணர்ச்சிப் பெருக்கையும் உணர வைக்கிறார் ஆசிரியர்.

கல்மரம் உத்வேகம் தரும் உண்மை கதை. இந்த நாவல் தாமரையில் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது.

***********

நூல்: கல் மரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 
ஆசிரியர்: எழுத்தாளர் கோ. திகலவதி
ருத்ரா பதிப்பகம்
பக்கங்கள்: 192
விலை: ரூ.80.00/-

You might also like