தொலைக்காட்சியை இப்படியும் பயன்படுத்த முடியும்!

நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போது தொலைக்காட்சி இங்கு அறிமுகமானதோ அதிலிருந்து துவங்கிப் படிப்படியான அதன் தாக்கம் பூதாகரமாக வளர்ந்திருக்கிறது.

செல்போன்களில் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பவர்களும் செய்திகளைப் பார்ப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். 

குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் தொலைக்காட்சி சீரியல்கள் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை மாறிவரும் குடும்ப மதிப்பீடுகளையோ, செண்டிமெண்டான காட்சியமைப்புகளையோ அல்லது பரபரப்பானதாகக் கருதப்படும் செய்திகளையோ டி.ஆர்.பி ரேட்டிங்காக கட்டமைக்கக் கூடிய ஒன்றாக மாற்றப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மொழியிலும் ஏறத்தாழ 30-லிருந்து 50 வரை பல்வேறு சேனல்கள் வெளிவந்திருக்கின்றன.

இதன்மூலம் அச்சு ஊடகத்தின் பரப்பளவு குறைந்திருக்கிறது. அச்சு ஊடகத்தின் வாசகர்களின் எண்ணிக்கைக் குறைந்து, தொலைக்காட்சி ஊடகத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

தொலைக்காட்சிகளுக்கு அதிகபட்சமான விளம்பரங்கள் வந்து கூடுதல் வருவாயைக் கொடுத்து கொண்டிருக்கின்றன. 

நகைக்கடைகள், நகை அடகுக் கடைகள் இன்னும் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கான விளம்பரங்களின் மூலம் ஒவ்வொரு தொலைக்காட்சிச் சேனலுக்கும் கிடைக்கக்கூடிய ஓராண்டு வருவாய் பலகோடிகளைத் தாண்டும் அளவிற்கு வியாபித்திருக்கிறது. 

இந்த நிலையில், “இந்த ஊடகங்களை சரியான அளவில் நாம் பயன்படுத்தியிருக்கிறோமா?” என்கின்ற கேள்வி பலருக்கும் எழலாம். 

என்னுடைய நேரடிய அனுபவத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளுக்குப் பல தொடர்களை இயக்கியிருக்கிறேன். பல தொடர்களுக்கு இன்புட் எடிட்டராகவும் இருந்திருக்கிறேன். பத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை எடுத்திருக்கிறேன். 

இது தொடர்பான நேரடியான அனுபவத்தை இங்கு பகிர விரும்புகிறேன்.

நமக்கு முன்னால் இருக்கிற தொலைக்காட்சி என்கின்ற மக்கள் தொடர்பு சாதனத்தை எந்தளவுக்கு வீரியத்துடன் பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணத்தைப் போலிருக்கிறது இந்த நேரடி அனுபவம்.

மதுரை மாவட்டத்தில் அப்போது உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நேரம். ஆனால், அந்த மாவட்டத்தில் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி என்கின்ற கிராமங்கள் மட்டும் அடிக்கடி ஊடகங்களில் அடிபட்டப் பெயராக இருந்தது.

அந்த கிராமங்களில் ஜனநாயக ரீதியாக அரசு தருகிற உரிமையைக் கூட தர மறுத்து தேர்தல் நடத்த விடாமல் செய்தது ஆதிக்க சாதி மனப்பான்மை.

தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது அந்த கிராமத்திலுள்ள ஊராட்சித் தலைவர் பொறுப்பு.

ஆனால், தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஊராட்சித் தலைவரை அந்த கிராமத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஊராட்சி அலுவலகத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரால் நுழைய முடியவில்லை. ஆக, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஜனநாயக நெறிமுறையை கேள்விக்குள்ளாக்கப்பட்டது அந்த கிராமத்தில். 

தேர்தல் ஆணையம் தலையிட்டும் அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த கட்சித் தலையிட்டும் அங்கு அந்த கிராமத்தில் நிலவிய பதவி தொடர்பான தீண்டாமையை நீக்கமுடியவில்லை. அங்குள்ளவர்கள் மத்தியில் அந்த அளவுக்கு சகிப்புத் தன்மை குறைந்திருந்தது. 

இந்த நிலையில், விஜய் டிவியில் அப்போது நான் இன்புட் எடிட்டராக பணியாற்றிவந்த நிலையில், ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கின்ற தொடருக்காக கேமராக் குழுவோடு அந்தக் கிராமத்துக்கு நேரடியாகச் சென்றிருந்தேன்.

மதுரையில் காவல்துறை பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் எங்களுக்குப் பாதுகாப்பாக ஒரு காவல்துறை ஜீப்பையும் அனுப்பியிருந்தார்.

அந்த போலீஸ் குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் எங்களைப் பின்தொடர்ந்த நிலையில் நாங்கள் அந்த கிராமத்திற்குள் நுழைந்தோம். 

கிராமத்துக்குள் நுழைந்ததுமே சட்டென்று ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது. நேரடியாக ஒலிப்பதிவு செய்வதைத் தடுக்க பலதரப்பட்ட முயற்சிகள் நடந்தன. கேமராவுக்கு முன்னால் மண் வீசி எறியப்பட்டது. கடுமையான வசை மொழிகள் ஆக்ரோசமாக விழுந்தன. 

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் எங்களை எதிர்த்தவர்களை சற்றே சாந்தப்படுத்திப் பேட்டியை ஒலிப்பதிவு செய்வதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது. கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியபடி அமைந்தன பேட்டிகள்.

இன்னொரு தரப்பு மக்களைப் பதவியில் அமர்த்துவதை முழுக்க நிரகாரித்த மனநிலையே அவர்களிடம் தீவிரம் பெற்றிருந்தது.

அவர்களிடம் ஒருவழியாக காட்சி ஒலிப்பதிவை எடுத்துவிட்டு, அதே கிராமத்தில் இருந்த இன்னொரு பாதிக்கப்பட்ட சமூகத்தினரைப் பார்க்கச் சென்றபோது, அதற்கும் தடை விதிக்கிற நிலையில், எங்களை மறிப்பது நடந்தது.

“கண்டிப்பாக அந்தப் பகுதிக்குப் போய் நீங்கள் விசாரிக்கக் கூடாது” என்கின்ற கண்டிப்பை எல்லாம் மீறி அந்தப்பகுதிக்குள் கேமராவுடன் உள்ளே நுழைந்தபோது பலதரப்பட்ட வசவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

இதற்கிடையில், எளிய குடிசைப் பகுதிகளில் இருந்த பாதிக்கப்பட்ட சமூகத்தினரைச் சந்தித்தபோது, மிகவும் உருக்கமான குரலில் தங்கள் மீதான புறக்கணிப்பு தொடர்ந்து நடந்துவருவதை அவர்கள் வெளிப்படுத்தி, மெல்லியக் குரலில் அவர்கள் அழுதபோது மிகவும் சங்கடமாக இருந்தது. 

“அரசு கொடுக்கிற ஒரு ஜனநாயக உரிமையைக் கூட, ஏன் இங்கு தர மறுக்கிறார்கள்” என்று அந்த மக்கள் தங்களுக்கான எளிய மொழியில் சொன்னதையெல்லாம் ஒலிப்பதிவு செய்துவிட்டு அந்த கிராமத்தைவிட்டு வெளிவருவதற்குள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

நல்லவேளையாக எங்களுக்குப் பாதுகாப்பாக வந்திருந்த போலிஸ் ஜீப் கிராமத்துக்கு முன்பு இருந்தநிலையில், அவர்கள் கிராமத்திற்குள் நுழையவில்லை. 

அந்த கிராமத்தில் பதற்றமான நிலையில், ஒரு அரை நாள் கழிந்தபிறகு மதுரைக்குத் திரும்பி இரு சமூகத்திலும் சம்மந்தப்பட்ட தலைவர்களை சந்தித்துப் பேட்டி எடுத்து மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து அவர்கள் தரப்பிலான கருத்துக்களையும் இணைத்தபடி அந்த காட்சித் தொகுப்பு விஜய் டிவியில் ஒலிபரப்பான போது அந்த தொகுப்புக்குப் பரவலான வரைவேற்பு கிடைத்தது. 

மத, சாதிய சார்புகளற்ற நிலையை விரும்புகிறவர்கள் பலர், அதை வெகுவாக வரவேற்றார்கள்.

அப்போது, இன்னொரு தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பிலிருந்த செய்தி ஆசிரியர் இந்தக் காட்சித் தொகுப்பைப் பார்த்துவிட்டு, “தொலைக்காட்சியை எந்த அளவிற்கு வலுவாகப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பண்ணி இருக்கிறீர்கள்”  என்றார்.

தொலைக்காட்சியின் வலுவான வீரியத்தை உணர்ந்த நாள் அது.

அதை இன்றைய உலகத் தொலைக்காட்சி நாளில் பகிர்வது காலப் பொருத்தமாக இருக்கிறது.

– மணா

#உலகத்_தொலைக்காட்சி நாள் #செல்போன் #சீரியல் #செய்தி #உள்ளாட்சித்_தேர்தல் #மக்கள்_தொடர்பு_சாதனம் #மதுரை #ஊராட்சி #ஊராட்சித்_தலைவர் #panchayat #panchayat_leader #world_tv_day #tv #television #cellphone #serial #news #panchayat_election #மனித_உரிமை_ஆர்வலர்

You might also like