ஒளிப்பதிவுக் கலையை நேசிப்போருக்காக…!

நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி!

ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற ‘புகைப்படம்’, ‘மாத்தியோசி’ முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங்.

அழகு குட்டிச் செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல படங்களில் இவரது ஒளிப்பயணம் நீள்கிறது.

அன்றாடம் மாறிவரும் நவீன தொழில் நுட்பத்தின் மாற்றங்களை உற்று நோக்கிவருபவர். தனது அனுபவம், வாசிப்பிலிருந்து சினிமா ஒளிப்பதிவு பற்றிய ஒரு தொழில் நுட்பப் பயணத்தை இந்நூலில் நிகழ்த்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் திரு.ஆம்ஸ்ட் ராங் விளக்குகிறார்.

ஒளி எனும் மொழியின் நூலாசிரியர்  விஜய் ஆம்ஸ்ட்ராங் தரும் முன்னுரை:

தமிழில், கலாப்பூர்வமாக சினிமாவை அணுகும், ஆராயும் சிறப்பான புத்தகங்கள் ஏராளமாக உண்டெனினும், தொழில்நுட்பப் பகிர்வுகள் என்று பார்த்தால் நம்மிடம் பதிலில்லைதான். ஆங்கிலப் புத்தகங்களையும், இணைய உதவியினையும், அதுவும் தேர்ந்த ஆங்கிலப் புலமை கொண்டோர்தான் அணுகமுடியும்.

அவ்வாறான புத்தகங்கள் தமிழில் காணக்கிடைப்பது இன்னும் அரிதாகவே இருக்கிறது. ஆக, அவ்வாறான தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் எழுதிக் குவித்து, தமிழின் மீதிருக்கும் பெரும்கறையைத் துடைத்தெறிவதுதான் என் நோக்கம் என யாரும் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!

ஒரு சினிமா ஆர்வலனாக, தொழில்நுட்ப வல்லுனராக, ஒளிப்பதிவாளனாக என் வாசிப்பிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் நான் தெரிந்துகொண்ட செய்திகளின் ஒரு சிறிய அறிமுகப்பகிர்வுதான் இந்த நூல்!

பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இந்நூல் முயன்றாலும் முதன்மையான நோக்கம் என்பது ஒளிப்பதிவு மட்டுமே!

ஃபிலிம் நுட்பத்துக்கும், டிஜிடல் நுட்பத்துக்குமான வேறுபாடுகள், சாதக பாதகங்கள், கருவிகள், அவை இயங்கும் முறைகள், ஒளிப்பதிவு நுட்பங்கள் எனப் பல விஷயங்களை இக்கட்டுரைகளில் பேச முயன்றிருக்கிறேன்.

இந்த நூல் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியவை:

“ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விஜய் ஆம்ஸ்ட்ராங் விளக்குகிறார்.

இந்த விதிகள் மரத்தின் வேர்களைப் போன்றது. இந்த அடிப்படை விதிகளின் அறிவை நாம் உள் வாங்கிக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் திரைப்படங்கள் அழகாகவும் எளிமையாகவும் அமையும்.”

*****

நூல்: ஒளி எனும் மொழி!
ஆசிரியர்: விஜய் ஆம்ஸ்ட்ராங்
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ. 250/-

You might also like