தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது.
குறிப்பாக, இளையராஜா தனக்கான எல்லையைச் சுருக்கிக் கொண்ட காலத்தில் தனக்கான ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டவர் தேவா.
அவரது மெல்லிசை பலருக்கும் பிடிக்கும் என்றாலும் கிழக்கு கரை, ஆசை, கண்ணெதிரே தோன்றினாள், கண்ணோடு காண்பதெல்லாம், ஆனந்தமழை, நேருக்கு நேர், அப்பு, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்ட சில ஆல்பங்களே ‘ஆல் டைம் ஹிட்’ என்று அந்த காலகட்டத்தில் தோன்றியிருக்கிறது.
அந்த எண்ணத்தில் ஒரு பிசிறும் இல்லை என்று இப்போதும் உணர்த்துகிறது ‘உன்னுடன்’ படப் பாடல்கள்.
‘காதல் கோட்டை’ தேசிய விருதுகளைக் குவித்த காலகட்டத்தில், அந்த கதை என்னுடையது என்று சொல்லியிருந்தார் இயக்குநர் ஆர்.பாலு. சென்னை கவின்கலைக் கல்லூரி பேராசிரியராக இருந்த ஓவியர் சந்ருவின் மாணவர் இவர்.
பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாவதோடு அந்த பரபரப்பு அடங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், அதே போன்று ‘பார்க்காமலே காதல்’ விஷயத்தை வைத்துக்கொண்டு ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படைத்தார் பாலு. அதில் பாடல்கள், நகைச்சுவை எல்லாமே ரசிகர்களைப் பற்றிக்கொள்ள படம் சூப்பர் ஹிட் ஆனது.
அந்த படத்தில் நடித்த முரளி, கவுசல்யாவை வைத்து பாலு இயக்கிய இரண்டாவது திரைப்படம் ‘உன்னுடன்’. இந்தப் படத்தை பார்த்தது திருநெல்வேலி கணேஷ் தியேட்டரா, பார்வதி தியேட்டரா என்பது மறந்துவிட்டது. என்னுடன் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை குறைவென்பது மட்டும் நினைவில் இருக்கிறது. ஆனாலும், படமும் பாடல்களும் என் மனதில் பச்செக்கென்று ஒட்டிக்கொண்டது.
இதே போல படம் ரிலீஸாகி ஐந்தாவது அல்லது ஆறாவது நாளில் மிகக்குறைவான பார்வையாளர்களுடன் பார்த்த திரைப்படம் ‘சேது’. அப்போது, நண்பன் எல்.எஸ்.கே என்னுடன் வந்திருந்தான். ரத்னா தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை செல்வம் தியேட்டரில் திரையிடப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் ‘சேது’ படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் போகுமளவுக்கு கூட்டம் பிய்த்துக்கொண்டது வேறு கதை.
‘உன்னுடன்’ படம் இப்போது லேசுபாசாகத்தான் நினைவடுக்குகளில் பதிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ‘இதயம்’ டைப்பில் நட்புடன் பழகும் ஆண், பெண்ணுக்குள் முகிழ்க்கும் காதலே படத்தின் மையம்.
தங்கர்பச்சானின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும் தேவாவின் இசையும் இப்படத்தின் ஆகப்பெரிய சிறப்புகள்.
தேவாவின் முந்தைய ஆல்பங்கள் பலவற்றை நினைவூட்டினாலும் கூட, ‘உன்னுடன்’ பட பாடல்கள் அனைத்தும் அற்புதமெனும் எல்லையைத் தொட்டவை.
‘புல்புல்தாரா’ பாடலின் தொடக்கமே வட இந்தியாவைச் சேர்ந்த நிலப்பகுதியின் கொண்டாட்டத்தை உணர்த்திவிடும். அனுராதா ஸ்ரீராமின் ‘கணீர்’ குரல் வாத்தியங்களை மீறி ஒலிக்க, அவரோடு போட்டியிடும் விதமாக மனோ இடையில் புகுவது ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கும்.
‘நேருக்கு நேர்’ படத்திற்கு பிறகு குறிப்பிட்ட வகையில் அமைந்த சில பாடல்களுக்கு ஹரிஹரனையும் உன்னிகிருஷ்ணனையும் பயன்படுத்தத் தொடங்கினார் தேவா.
இம்மி பிசகாமல் அதனைக் கண்டறியும் வகையில் ‘கொச்சின் மாடப்புறா..’ பாடலை இசைத்திருப்பார். இப்பாடலில் உன்னிகிருஷ்ணனின் குழைவான குரலோடு மேலாகப் பொருந்தும் வகையில் ஸ்வர்ணலதாவின் குரல் ஒலிக்கும்.
‘கோபமா என்மேல் கோபமா’ பாடலும் சரி, ‘வானம் தரையில் வந்து நின்றதே’ பாடலும் சரி.. ஹரிஹரனை மனதில் வைத்தே பாடல் எழுதப்பட்டதோ என்று எண்ண வைக்கும். கோபமா பாடலின் தொடக்கத்தில் கம்பிக் கருவிகள் ஒலிப்போடு பாடகிகளின் கோரஸ் ஒன்றிணைந்திருப்பது ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கும்.
‘வானம் தரையில் வந்து நின்றதே’ பாடலின் தொடக்கத்தில் ‘பச்சை மாமலை போல் மேனி’ பாடலைப் பாடுபவரின் குரல் பி.சுசீலா போன்றே இருக்கும். அவரது பெயரை எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. குரலை வைத்து ஆளை கண்டுபிடிக்கும் அளவுக்கு திரையிசை ஞானமும் இல்லை.
‘கண்டுபிடி அவனைக் கண்டுபிடி’ பாடல் எஸ்.பி.பி.க்கு ஜுஜுபி விஷயம் என்றாலும், அதன் தொடக்கத்தில் வரும் கோரஸும் ஹரிணியின் ஹம்மிங்கும் சிறப்பாக அமைந்திருக்கும்.
‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடலுக்கு சட்டை போன்று சபேஷின் குரலில் ஒலிக்கும் ‘பாலாறு இவ பதினாறு’ பாடல் கேட்கும்போது வழக்கமான டப்பாங்குத்து பாடல் போன்று இருக்காது.
இயக்குநர் எதை விரும்புகிறாரோ அதைத் தருபவர்களில் ஒருவராகவே தேவா அறியப்படுகிறார். அந்த வகையில், ஆர்.பாலுவின் காட்சி நோக்கத்தை மிகக்கச்சிதமாக மொழிபெயர்த்தவாறு தேவாவின் இசை அமைந்திருக்கும்.
இதன் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளில் இருந்தே இந்த வித்தியாசத்தை அறிய முடியும். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.
தேவாவின் ‘தேவ’ கானங்களில் ஒன்றாக நான் கருதுகிற ‘உன்னுடன்’ படப் பாடல்களை மிக அரிதாகவே தொலைக்காட்சியிலும் பண்பலைகளிலும் எதிர்கொள்ள நேர்வது வருத்தமான விஷயம்தான்..!
அதே நேரத்தில், உன்னுடன் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் என்றும் சொல்ல முடியாது. கேட்கக் கேட்கப் பிடித்துப்போய் நிரந்தரமாகத் தங்கிவிடுகிற வகையில் அடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
– உதய் பாடகலிங்கம்