எம்.கே.ராதா – தமிழ் சினிமாவின் ’அழகு நாயகன்’!

திரையுலகைப் பொறுத்தவரை, அழகுக்கான இலக்கணம் காலம்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதில் புகழையும் பணத்தையும் ஈட்டுவதற்கான வரையறைகள் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.

அந்த எல்லைக்கோடுகளைத் தாண்டி என்றென்றைக்குமான பெயரோடும் புகழோடும் விளங்கக்கூடியவர்களாக மிகச்சிலரே விளங்குகின்றனர். அப்படியொரு நட்சத்திரங்களில் ஒருவராக, தமிழ் சினிமாவின் அழகு நாயகர்களின் முதன்மையானவராக விளங்கியவர் எம்.கே.ராதா.

திரைத்துறையில் எம்.ஜி.ஆருக்கு குருவாக விளங்கியவர்களில் ஒருவர் என்று இவரைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பு இருந்ததாக, எம்.கே.ராதாவின் வாரிசுகளான ராதா விஜயன், எம்.ஆர்.ராஜா போன்றோர் சில மேடைகளில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட எம்.கே.ராதாவின் 114ஆவது பிறந்ததினம் இன்று  (நவம்பர்-20) கொண்டாடப்படுகிறது.

தொடர் வெற்றிகள்!

எம்.கே.ராதா என்பதன் விரிவாக்கம் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்பதாகும். சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்தவர். நாடக ஆசிரியராகவும் இருந்த அவரது வழிகாட்டுதலோடு, 7 வயதில் மேடை ஏறியவர் எம்.கே.ராதா.

அந்த அனுபவங்களே தெளிவான தமிழில், உரத்த குரலில் வசனங்களைச் சிங்கத்தின் கர்ஜனை போல முழங்கும் ஆற்றலைத் தந்தது.

வாலிப வயதில் மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியில் பயின்ற எம்.கே.ராதா, அங்கு ஆங்கில நாடகங்களிலும் பங்கேற்றார். கல்லூரியில் பயில்வதே பெரும் அந்தஸ்தாக கருதப்பட்ட காலத்தில், அவரது நாடக ஆர்வம் அந்நாட்களில் நட்சத்திரமாக அவரைப் பிறர் உணரச் செய்தது.

மேடை நாடகங்களில் அவருக்கு மக்கள் தந்த வரவேற்பு, திரைப்படங்களின் பக்கம் அவரது கவனத்தைத் திசை திருப்பியது. அப்படித்தான் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’ படத்தில் நாயகன் ஆனார் எம்.கே.ராதா.

அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அதில் லீலாவதியாக நடித்தவர் எம்.ஆர்.ஞானாம்பாள். பின்னாட்களில் அவர் ராதாவின் மனைவி ஆனார்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையாவோடு சிறு வேடத்தில் எம்.ஜி.ஆரும் அறிமுகமான படம் அது. அந்த பாத்திரம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் ராதாவின் தந்தை கந்தசாமி என்று பல்வேறு காலகட்டங்களில் தன்னைச் சார்ந்தவர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

சதிலீலாவதிக்குப் பிறகு சந்திரமோகனா அல்லது சமூகத் தொண்டு, அனாதைப் பெண், மாயா மச்சீந்திரா, சதி முரளி, பிரேம பந்தன், வனமோகினி, தாசி அபரஞ்சி என்று தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தார் எம்.கே.ராதா.

அந்த காலகட்டத்தில் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுபவராகப் பணியில் சேர்ந்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்றவர்களுக்கு இணையாகப் பல வெற்றிப் படங்கள் தந்தபோதும் கூட, தனது நிலையில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

இத்தனைக்கும் ஞானசௌந்தரி தவிர்த்து ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ’சம்சாரம்’, ‘மூன்று பிள்ளைகள்’, ‘அவ்வையார்’ என்று ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

இடையிடையே நல்ல காலம், சௌதாமினி, கண்ணின் மணிகள், பாச வலை போன்ற படங்களிலும் இடம்பிடித்தார்.

1957இல் வெளியான ‘அம்பிகாபதி’யில் சிவாஜி கணேசனின் தந்தையாக, கம்பர் பாத்திரத்தில் தோன்றினார் எம்.கே.ராதா.

தொடர்ந்து புதையல், நீலமலைத் திருஇடன், வணங்காமுடி, உத்தமபுத்திரன் என்று பல படங்களில் தந்தை பாத்திரங்களில் நடித்தார்.

அந்த வகையில் சுமார் 20 ஆண்டு காலம் அவரது நாயக அவதாரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அந்த அழகு நாயகன் விட்டுச் சென்ற திரைப்படப் பதிவுகளை இன்று காண்போரும் உணரலாம், அவரது நடிப்பு பாணி எத்தனை நுணுக்கமானது என்று..!

ராதாவின் தனித்துவம்!

‘உத்தமபுத்திரன்’ படத்தில் பி.யூ.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்தபோதும், எம்.கே.ராதாவின் ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்த அப்படத்தில் அவர் இரண்டு பாத்திரங்களில் ஒருசேரத் திரையில் வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்தனர்.

உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்த அந்நாளைய நடிகர்களில் எம்.கே.ராதாவும் ஒருவர். நாயகனாக நடித்த காலகட்டத்தில் தினமும் மெரினா கடற்கரைக்குச் சென்று குதிரைப் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

அதேபோல, ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கத்திச் சண்டையில் பயிற்சி மேற்கொள்வாராம்.

ஒரு திரைப்படப் படப்பிடிப்பில், நெல் மூட்டையைத் தூக்குவதாகக் காட்சியில் எம்.கே.ராதா நடிக்க நேர்ந்திருக்கிறது.

அதற்காக, மூட்டையில் பஞ்சை நிரப்ப முயன்றிருக்கிறது படக்குழு.

அதனை மறுத்து, உண்மையான நெல்லை நிரப்பச் செய்து, அந்த மூட்டையை கேமிரா முன் சுமந்திருக்கிறார்.

இது போன்ற செயல்களே அவரைச் சக நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது.

அறுபதுகளில் திரைத்துறையில் உச்சம் பெற்றிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, நம்பியார் போன்றோர் எம்.கே.ராதாவின் வீட்டிற்கு வந்து சென்றிருக்கின்றனர்.

அவர்களை அவரது பிள்ளைகள் சித்தப்பா, மாமா என்றே அழைத்திருக்கின்றனர்.

இந்த உறவைத் தான் மறையும் வரை ராதா பேணியதாகச் சொல்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெருவெற்றி பெற்று, எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பதவி ஏற்கவிருந்த நேரம். அப்போது, அவரைச் சந்திக்க விரும்பியிருக்கிறார் எம்.கே.ராதா.

அதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு போன் செய்து, எம்ஜிஆரைச் சந்திக்க ‘அப்பாய்ண்ட்மெண்ட்’ கேட்டிருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

அன்றிரவே, காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து ராதாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

’நாளை காலையில் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னதாக உங்கள் வீட்டுக்கு எம்ஜிஆர் வருகை தருகிறார்’ என்று எதிர்முனையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சொன்னது போலவே, அடுத்த நாள் காலை 8.16 மணிக்கு ராதாவை நேரில் வந்து சந்தித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார்.

‘சதிலீலாவதி’யில் தொடங்கிய நட்பும் மரியாதையும் எம்ஜிஆர் கோட்டைக்குச் செல்லும்போதும் தொடர்ந்திருக்கிறது என்றால், எம்.கே.ராதாவின் தனித்துவத்தை என்னவென்று சொல்வது? அனைவரையும் அரவணைத்துச் சென்ற அவரது குணாதிசயத்தை எவ்வாறு வியப்பது?

– உதய் பாடகலிங்கம்

You might also like