முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ அறிவுரைகள் குறித்து முதியோர் நல மருத்துவ நிபுணர் மருத்துவர் பரூக் அப்துல்லா குறித்த கட்டுரை தாய் இதழில் வெளியிடப்பட்டது சிறப்பு.

முதுமை நலன், அதைப் பேணுவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி எழுதிய எனது கட்டுரை தாய் இதழில் வெளி வந்துள்ளது. இது குறித்த மேலும் ஒரு சமூக பார்வை இக்கட்டுரை.

முதுமையை வெல்வது என்பது இயலாது என்பது அறிவியல் உண்மை. ஆனாலும் அதை எதிர்கொள்வதில் உள்ள உடல் இயக்கம் மற்றும் சமூக பொருளாதாரம் சார்ந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கம் இன்றியமையாதது.

முதுமையில் உடல் ரீதியான பிரச்சினைகள், வயது மற்றும் தனி மனித உடலமைப்பு, இளமையில் உடலைப் பேணிய முறை மற்றும் மரபு ரீதியான பல காரணிகள் பொறுத்து மாறுபடும். இதன் தொடர் விளைவுகளின் தாக்கம் வீரியமாகும் போது உடலும் உள்ளமும் பலவீனமடைவது தவிர்க்க இயலாது.

பொதுவாக முதுமை என்ற நிலை மாறுபட்டில் உயிரியல் வளர்சிதை மாற்றங்களை ஏற்று கொண்டு அதில் எச்சரிக்கையுடன் வாழ்வியல் மாற்றங்களை கடைபிடிப்பது அவசியம்.

அறிவியல் மாற்றம் பல விந்தைகளை உருவாக்கி உள்ளது. உடல் நிலை குறித்த மருத்துவ அளவீட்டு குறியீட்டு தரவுகளை (Clinical parameters) கூறும் மருத்துவ உபகரணங்கள் ஏற்புடைய விலையில் கிடைக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்த ராக்கெட் அறிவியல் தேவை இல்லை. தொலைபேசியை இலகுவாக இயக்கும் மக்கள் இதை புரிந்துகொள்ளுதல் அவசியம். அதைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவ்வப்போது அவசியம் கருதி மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதும் நலம் பயக்கும்.

இதை தவிர்த்து பல்வேறு உபாதைகளை எதிர்கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கும் சில கருவிகளைப் பயன்படுத்துவதும் நலம்.

இதில் மற்றவர்கள் கருத்து குறித்தோ அல்லது அது ஒரு தாழ்வான பார்வையை உருவாக்கும் என்பது போன்ற தேவையற்ற தயக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக முதுகு வலிக்கான Lumbo Sacral belt, Walker Walking stick என்ற ஊன்றுகோல் போன்ற பயன்பாட்டு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கழிவறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

முறையான அறிவியல் பரிசோதனைகள் அடிப்படையில் கூறும் சரியான அறிவியல் கூற்றுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இனி எல்லாம் அளவுகளின் அடிப்படையில் மட்டுமே வாழ்தல் சாத்தியமாகும்.

குறிப்பாக அதீத சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை குறைபாடுகள். அவை நோய் உருவாக காரணிகளாக அமைந்துள்ளது.

முதுமையில் உருவாகும் தசை நார்கள் இயக்க குறைவு, எலும்புகள் தேய்மானம் மற்றும் உள்ளம் சார்ந்த மன அழுத்தம் போன்றவைகள் நடைமுறை வாழ்க்கையில் இடர்பாடுகளை உருவாக்கும்.

தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

இதை கையாள்வதில் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் அல்லது அவர்களோடு இணைந்த உறவுகளோ அவர்தம் வாரிசுகளான மகன் மகள், பேரன் பேத்திகள் போன்ற உறவு நிலைகளில் இருப்பவர்கள் அனைவரும் அன்புடன் உதவுவார்கள் என்ற எதிர்பார்க்க தவிர்ப்பது நலம். அவர்கள் அன்புடன் உதவினாலும் நலமே என்று ஏற்று கொள்ளலாம்.

இன்றைய பொருள் சார்ந்த நடைமுறை வாழ்வியல் முறைகளில், பொதுவாகவே முதியோரிடம் பொருளாதாரம் இருந்தால் அதை எவ்வாறு பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்பதில் இருக்கும் மனநிலை முதியோர்களை பராமரிப்பதில் இருக்காது.

இவர்கள் பெரு நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக மாறி வரும் இந்த சமூக அமைப்பின் நவீன வார்ப்புகள். இதுவே பெரும்பாலான குடும்பங்களில் உள்ள வாழ்வியல் எதார்த்தம். விதி விலக்குகள் இருக்கலாம்.

இணைய வெளியில் உலா வரும் மக்கள் உண்மையான உறவு வெளியை விரும்புவதில்லை.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் உறவுகள் தளர்ச்சியில் அல்லவா தள்ளாடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணி புலம்புவது முற்றிலும் வீண். இது பற்றி எவரும் அக்கறையோ கவலையோ கொள்ளப் போவதில்லை.

உடல் உபாதை, நோயின் வேதனை, உடலின் வலி, உள்ளத்தின் தளர்வு போன்றவற்றை யாருக்கும் மாற்றவும் முடியாது அதை ஏற்கவும் மாட்டார்கள். அதைபோல இன்னொருவர் வலியை நாமும் வாங்கிக்கொள்ள முடியாது.

அனுதாபம் கழிவிரக்கம் கருணை போன்றவைகளால் மற்றவர்களுக்கு ஓரளவு உதவிக்கரம் நீட்ட இயலுமே தவிர அவர்களது வேதனையை பங்கு போட்டுக்கொள்ள இயலாது.

உதவுதல் என்பதில் பண உதவி தவிர ஏனைய சேவைகளில் உதவி செய்வதற்கு கூட தயார் மனநிலையில் உள்ள இளைய சமூகம் இன்று மிகவும் அரிதாகி விட்டது.

அந்த இளைய சமூகம் பொருளாதார தன்னிறைவு அடைந்திருந்தால் முதியோர் சேவைக்கு ஊதியம் வழங்கி அவர்களை பராமரிக்க முயற்சி எடுப்பார்கள்.

அதற்கு அவர்கள் உருவாக்கிய குடும்பத்தினரிடம் இருந்து குறிப்பாக மனைவியோ, கணவனோ இதில் யார் பொருளாதார பலம் அதிகமாக உள்ளவராக இருக்கிறார்களோ அவர்களிடம் உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த அனுமதி கூட முழுமையான ஒப்புதலோடு வழங்கப்படுவதில்லை. பணம் குறித்த எந்த பரிமாற்றமும் முழு மனதோடு நடைபெறாது என்பதே உண்மை.

முடிந்த வரை குடும்ப உறவுகளில் கணவன் மனைவி தவிர வேறு உறவுகளுடன் வசிப்பதை தவிர்ப்பது முற்றிலும் நலன்.

சிறந்த பாதுகாப்பான சேவைகளை வழங்கும் முதியோர் இல்லங்களில் வசிப்பதை ஓய்வுதியம் பெறுபவர்கள் தேர்ந்தெடுப்பதே நலமான செயல்.

முதியோர் நல சேவைகள் மற்றும் அதன் அவசியங்கள் பராமரிப்பு உரிய கட்டணங்கள் அவற்றை கண்காணிக்கும் அரசு முறை விதிகள் இன்னும் மேம்படுத்துதல் மிகவும் நல்லது.

மிகவும் வேதனையில் அன்றாட வாழ்வியல் துன்பங்களை துயருடன் எதிர்கொள்வதைவிட இலகுவாக இறப்பதறகான உரிமை என்பது அவசியம். அதற்கான வயது மற்றும் உடல் நிலை தகுதிகள் குறித்த விதிகள் உருவாக்க வேண்டும்.

இதில் முறைகேடுகள் உருவாத வழியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த இயலும். வடக்கிருந்து உயிர் துறத்தல் முதுமக்கள் தாழி போன்றவைகள் பழங்கால தமிழ் சமூகத்தில் மட்டுமன்றி அந்தந்த பண்பாட்டு தளங்களில் இருந்தவை.

அதை நவீன மீட்டுருவாக்கம் செய்வதற்கு அறிவியல் மற்றும் சட்டம் சார்ந்த ஒரு புதிய கொள்கை உருவாக்க வேண்டும். அதை ஏற்கும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Euthanasia என்பது கருணைக் கொலை என்று கூறப்படுகிறது. உண்மையில் அது கருணை மரணம்.

வன்முறையற்ற மரணம் தழுவதல் எனபதே சரியான பொருள். Suicide என்பது தற்கொலை என்று கூறப்படுகிறது. தானாக முன்வந்து வன்முறை மூலம் உருவாக்கும் மரணத்தை தற்கொலை என்ற பொருள் கொள்ளலாம்.

விருப்ப மரணம் குறித்த சட்டபூர்வ பாதுகாப்பு இல்லை என்பதால் வெளியில் தெரியாத பல முதியோர் கொலைகள் கிராமங்களில் பரவலாக உள்ளது. அதிகமாக உரிய பராமரிப்பு இன்றியும் உணவு இல்லாமல் மரணிக்கும் முதியோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

வறுமையும் வாழ்வியல் சூழலும் பல முதியோர்கள் புறக்கணிக்ப்பட்ட நிலையில் ரகசியமாக குப்பையை போல் மருத்துவமனை வளாகங்களில் வீசப்பட்டு செல்கின்றனர். அதை எதிர்கொள்வதில் காவல்துறை மற்றும் மருத்துவத்துறை பல இடர்பாடுகளை மேற்கொள்கிறது.

எனவே, பணியில் உள்ள ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதை போல ஒரு மனிதன் சரியான காரணங்களுக்காக வன்முறையற்ற முறையில் மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்வது அவர்களது உரிமையாக்கப்பட வேண்டும்.

இன்றைய அதீத அறிவியல் முன்னேற்றம் மூலம் மரணத்தை தழுவும் முறைகளை மிகவும் எளிதாக மாற்ற முடியும்.

ஸ்விட்சர்லாந்து இதற்கு முன்னோடி நாடாக திகழ்கிறது. அந்த நாட்டு குடிமக்கள் வாழ்வியல் எதார்த்தத்தின் ஆழமான உண்மையை உணர்ந்தவர்கள். போற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் உரிய அறிவார்ந்த பெருமக்கள்.

உயிர் என்பதை துறக்க எந்த மனிதனும் எந்த வயதிலும் தயாராக இருக்க மாட்டான் எனபது உயிரியல் மற்றும் உளவியல் உணர்த்தும் உண்மை.

ஒரு மனிதன் தனது வேதனையை வலியை உணரும் போது அதறகான நிவாரணம் இல்லை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பின்பு விரைவு உயிர் துறப்பு என்பது அவனது உரிமை.

தொடர்வண்டிப் பயணத்தில் முன்பதிவு போல உறுதி செய்யப்பட்ட இடம், மற்றும் RAC என்ற இடம் உறுதி படுக்கை வசதி இடம்.

காலியானால் மட்டுமே மற்றும் Waiting list என்ற காத்திருப்புப் பட்டியல் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை பயணிகளுக்கு உண்டு.

அதே நேரத்தில் தவிர்க்க இயலாத மருத்துவ காரணங்கள், அரசு முறை பயணங்கள் போன்ற பல காரணங்களுக்காக Emergency Quota என்ற பயணத்தின் அவசியம் காரணமாக அவசர ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதற்கான ஒரு முன்னுரிமை சார்ந்த நெறிமுறைகள் (List of protocol) ரயில்வே துறையில் உள்ளது.

மனித வாழ்க்கையும் தொடர்வண்டி பயண ஒப்பீடு சரியானதுதானா என்ற வினா எழுப்பப்படலாம்.

இது ஒரு எடுத்துக்காட்டுக்காக கூறப்பட்டுள்ளது.

உண்மையில் தொடர் வண்டி பயணம் போலவே வாழ்க்கை பயணமும் தொடர்கிறது

கவிஞர் கண்ணதாசன் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைபட பாடல் வரிகளை நினைவு கூற வேண்டி உள்ளது.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

இதில் தெய்வம் என்ற வார்த்தை பிரயோகம் தனிநபர் நம்பிக்கை சார்ந்த்து. அந்த பாடல் முழுவதும் வாழ்வியல் எதார்த்தம் சார்ந்த உண்மையின் பல்வேறு கூறுகளாகும்.

உறவு நிலையில் பந்தங்களோ பாசங்களோ தேவையற்றது என்ற பற்றறுத்த நிலை என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. வள்ளுவர் கூறிய வாழ்வியல் அறத்தில் இல்லறம் குறித்த பொருள் பொதிந்த குறள்கள் பல உண்டு.

எதுவுமே நிச்சயமற்ற உலகில் திடமான நம்பிக்கை மன உறுதி மிகவும் அவசியமானது. பிறப்பதே இறப்பதற்கு என்று உலகே மாயம் என்ற மாயாவாதம் பேசி கொண்டிருந்தால் உலகின் இயக்கம் சுணங்கி விடும்.

மனித சமூகத்தின் அசைவுகளும் இயக்கங்களும் மானுடம் வளர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத பகுத்தறியும் தன்மை மூலம் உற்பத்தித் திறன் மற்றும் அது சார்ந்த அறிவியலை மேம்படுத்தியது. அது பற்றிய பொருளாதார ஏற்றத் தாழ்விற்கான காரணங்கள் வேறு.

எனினும் எல்லாவற்றையும் சாதக பாதகங்களை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல் அடிப்படையில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தனிமனித உரிமைகளைக் கருத்தில் கொண்டு வன்முறையற்ற மரணம் தழுவும் நடைமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் வலுப்பெற வேண்டும் எனபதே இந்த பதிவின் முதல் நோக்கம்.

Sentiment என்ற உணர்வு நிலை குறித்த உளவியலில் constructive sentiment என்ற உருவாக்கும் உணர்வு வேறு. Stupid Sentiment என்ற முட்டாள்தனமான உணர்வு வேறு.

ரமணா திரைபடத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் ஒரு சீக்கியர் The people of Tamilnadu are sentimental idiots என்று கூறுவார்.

தமிழக மக்கள் முட்டாள்தனமான உணர்வுள்ளவர்கள் என அந்த கதாபாத்திரத்தின் கதை அமைப்பு குறித்த ஒரு சொல்லாடல். ஆனால் இந்த Sentimental idiocy உலகம் முழுவதும் நாடுகளின் தன்மைக்கேற்ப, இன மொழி பண்பாட்டிற்கு ஏற்ப வெவ்வேறுவிதமான நிலைகளில் உள்ளது. இது மானுட உளவியல் அமைப்பு

ஆகவே பந்தம் பாசம் உறவுகளின் பிரிதல் ஏறபடுத்தும் வேதனை போன்றவைகளுக்கான எல்லைக்கோடுகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அடுத்து முதியோர் நலன் பேணுவதில் அரசுக்கு உரிய பங்களிப்பு உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதன் முன்னுரிமை குறித்து இன்னும் மேம்பட்ட திருத்தங்கள் அவசியம்.

குழந்தைகள் நலன் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் பாதுகாப்பு, முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு போன்றவை ஒரு சமூகத்தின் முன்னுரிமை குறித்த பிரச்சினைகள் ஆகும்.

அமுலில் உள்ள சட்டங்களும் விதிகளும் செயல்பாட்டு அளவில் இன்னும் சீராக அமைவதற்கு உரிய செயல் திட்டம் கண்காணிப்பு அவசியம்.

அதீத பொருளாதார இடைவெளி உள்ள ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூக அமைப்பில் வெறும் முதியோர் மருத்துவக் காப்பீடு திட்டம் மட்டும் முழுமையான பலனளிக்க போவதில்லை.

முதியோர் பராமரிப்பு இல்லங்கள் வசதியற்ற மூத்த குடிமகன்களுக்கு அடிப்படை சுற்று சூழல் தூய குடிநீர் ஊட்ட சத்து உணவுகள் போன்றவை மக்கள் நல திட்டங்களில் இடம் பெற வேண்டும். இதற்கான தனித்துறை மாநில ஒன்றிய அரசுகள் நிறுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு சத்துணவு போல ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவசமாக இவை வழங்கப்பட வேண்டும்.

முதியோர் ஓய்வூதியம் இளையோர்களால் பறிமுதல் செய்யப்படுகிறது என்பது நடைமுறை உண்மை.

Elders Helpline என்ற முதியோர் உதவி கரங்கள் சேவை இன்னும் மேம்படுத்த வேண்டும். தேர்ந்தெடுத்த தன்னார்வ குழுக்களின் பங்களிப்பு மற்றும் Corporate Social Responsibility என்ற நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு அளிப்பதற்கும் வழி வகை செய்தல் வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு வசதி உள்ள முதியோர்கள் இல்லங்களை தனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றை உரிய கண்காணிப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும்.

உறவுகளின் பாசங்களை மனதில் சுமந்து கொண்டு அதீத எதிர் பார்ப்புகளில் வாழும் பலர் அதறகான உரிய உறவு பரிமாற்றங்கள் இல்லாத போது விரக்தி வேதனையில் உழல்வதை விடவும் தங்களுது விருப்பத்துடன் சுதந்திரமாக வாழவதும் முடியாத போது மரணத்தை தழுவும் உரிமையை கொள்வதும் நல்லது.

இதை தீர்மானிப்பது அவரவர் வாழ்நிலை சூழல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த தனிமனித உரிமையாகும்.

பந்தம் பாசம் வாழ்க்கை எல்லாமே நிரந்தரமற்றது தற்காலிகமானது என்பது தத்துவமோ அல்லது வேதாந்தமோ அல்ல.

அவரவர் காலங்களில் பலரால் பல்வேறு கோணங்களில் கூறப்பட்ட கருத்துகள் இதில் கர்மா, இப்பிறவி, முற்பிறவி, ஏழு பிறவி எட்டு பிறவி, நரகம் மோட்சம் இம்மை மறுமை போன்ற பலவித ஆன்மிக மசலாக்கள் கலந்து சுவை பட மக்களுக்கு பன்னெடுங்காலமாக கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்பதும் மறுப்பதும் தனி நபர் உரிமை சார்ந்தது என்றாலும் சமூகத்தின் பொது நலன் கருதி மானுடம் காக்க ப்பட வேண்டும்.அதில் முதியோர் நலன் என்பது மிகவும் இன்றியமையாத ஓர் அங்கமாகும்.

இந்தியாவில் சட்டங்களில் உள்ள உரிமைகள் நடைமுறையில் செயலாக்கத்தில் எந்த அளவிற்கு அமுலாக்கபடுகிறது என்பதை இந்திய குடி மக்கள் நன்கு அறிவார்கள்.

எனினும் சட்டம் சார்ந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த ஒரு சிந்தனை பகிர்தலே இந்தக் கட்டுரை.

– தமிழ் பாலன்

You might also like