தமிழர்களின் நம்பிக்கையை இழந்த ‘தமிழர்’ கட்சிகள்!

நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், மீதமுள்ள 29 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிபர் அனுராவின் என்பிபி கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 40 இடங்கள் கிடைத்தன.

முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், மற்றொரு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் மட்டுமே கிடைத்தன. இலங்கை தமிழ் அரசு கட்சி 8 இடங்களில் வென்றுள்ளது.

இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களைத் தமிழ் கட்சிகளே கைப்பற்றி வந்துள்ளன.

ஆனால், இந்தத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் என்பிபி கூட்டணி அதிக இடங்களைப் பிடித்துள்ளது. மட்டக்களப்பில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது.

தமிழர்கள் பெருமளவில் வாழும் யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அனுரா கட்சிக்கு அங்கு 80 ஆயிரம் ஓட்டுகளும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 63 ஆயிரம் ஓட்டுகளும் கிடைத்தன. அங்கு சிங்களக் கட்சி வெற்றி பெற்றுள்ளது, இதுவே முதல் முறை.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நுவரெலியா, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள், தமிழர் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தமிழர் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால், தேசியக் கட்சி எளிதாக வெற்றி பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழர் கட்சிகளிடம், தமிழர்களுக்கு நம்பிக்கை குறைந்ததும், அனுரா கட்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணம்.

தேர்தலில் என்பிபி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளதால், ஆளும் கட்சி எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்றலாம். தேர்தல் முடிந்துள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடுகிறது.

– மு.மாடக்கண்ணு

You might also like