மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் கத்தியை எடுப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில், டாக்டர் ஒருவர் 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ‘ஆபரேஷன்’, தமிழகம் முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகேயுள்ள புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் விக்னேஷ், இந்த பயங்கர நிகழ்வை அரங்கேற்றி உள்ளார்.
அவரது தந்தை 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். தாயார் பிரேமாவுக்கு புற்றுநோய். 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு குணம் அடைந்ததால் அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பி விட்டனர்.
வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்துள்ளார்.
இதை பார்த்து விக்னேஷ் கதறினார். கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி, சரியாக சிகிச்சை அளிக்காததே, தனது தாயின் நிலைக்குக் காரணம் என கருதிய விக்னேஷ். அவரை பழி வாங்கத் திட்டமிட்டார்.
நேற்று காலையில் மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, பாலாஜியின் அறைக்குச் சென்றார்.
அறையின் கதவை சாத்திய விக்னேஷ், “எனது தாயாருக்கு ஏன் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே அரை மணி நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது.
டாக்டர் பாலாஜியின் பதிலில் அவருக்கு திருப்தி இல்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியின் தலை, கழுத்து, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்தம் சொட்டச் சொட்ட அலறியவாறு பாலாஜி சரிந்து விழுந்தார். அதனை பொருட்படுத்தாத விக்னேஷ் பதற்றம் ஏதும் இல்லாமல், கத்தியை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிச் செல்ல முயன்றார்.
பணியாளர்கள் அவரை மடக்கிப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தலை சிறந்த புற்றுநோய் நிபுணர்களில் ஒருவரான பாலாஜி, இதயநோயாளி ஆவார். இதற்காக ஆபரேஷனும் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது, இதுவே முதன்முறை.
இந்த நிகழ்வு டாக்டர்கள் மத்தியில் பதற்றத்தையும், பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதினிடையே, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், இந்த சம்பவத்தை ஆளும்கட்சிக்கு எதிரான மற்றுமோர் ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர்.
‘’தமிழகத்தில் அரசாங்க டாக்டருக்கே பாதுகாப்பு இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் முருகன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் ஒரே குரலில் ஒலித்துள்ளார்கள்.
இதனிடையே, இந்த நிகழ்வு நடந்த கிண்டி மருத்துவமனையில், மருத்துவர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர். அரசுத் தரப்பிலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிண்டி சிறப்பு மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
– மு.மாடக்கண்ணு.