சர்வதேச விருதுபெற வேண்டியவர் ஷோபா சக்தி!

பேராசிரியர் அ. ராமசாமி

தன்னறம் விருது பெற்றதற்காக எழுத்தாளர் ஷோபா சக்திக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அவர் சர்வதேச விருதுபெற வேண்டிய தமிழ் எழுத்தாளர். உலகக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு கவிதையை மட்டும் பரிந்துரை செய்ய முடியாமல் தவித்ததை முன்பு சொல்லியிருக்கிறேன்.

அதேபோலத் தமிழிலிருந்து சர்வதேச விருதொன்றுக்கு ஒரு பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்று கேட்டாலும் தவிப்பே ஏற்படும்.

கவிதை, நாடகம், புனைவெழுத்து, திறனாய்வு என இலக்கியத்தின் துறைகள் ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் வந்து நிற்கும் தன்மையுடையது சமகாலத் தமிழ் இலக்கியம்.

வேறு வழியே இல்லாமல் ஒரு பெயர்தான் சொல்லவேண்டுமென்றால் நான் சொல்லும் பெயர் ஷோபா சக்திதான்.

சிறுகதைகள் உருவாக்கும் பிரமிப்புகள் அளவுக்கு அவரது நாவல்களின் வெளிப்பாட்டுத்தன்மை இருந்ததில்லை.

அதனால் அவரது எல்லா நாவல்களையும் வாசித்தே ஆகவேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் அவரது சிறுகதைகளை அப்படித் தாண்டுவதில்லை.

புனைவுகளைச் சொல்வதற்காக அவர் தெரிவுசெய்யும் சொல்முறைகளும், புனைவுவெளிகளாக நிலத்தையும் புலத்தையும் தொடர்புபடுத்தும் விதமும், இருவேறு காலப் பின்னணியில் வாழ நேரும்போது பாத்திரங்கள் அடையும் முரண்பட்ட வாழ்க்கையைத் தாண்டமுடியாமல் தவிக்கும் தவிப்புகளும் என அவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன்.

சிறுகதைகளை வாசித்துக் குறிப்புகள் வைத்துள்ளேன். அவ்வப்போது சில கதைகளைக் குறித்து எழுதவும் செய்துள்ளேன்.

விரைவில் அவரது முழுத்தொகுப்பைக் கறுப்புப் பிரதிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். அல்லது தேர்வுசெய்யப்பட்ட சிறுகதைகளையாவது வெளியிடவேண்டும்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like