கமல் மகள் எனும் அடையாளத்தை விரும்பவில்லை!

மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

நட்சத்திர தம்பதியினரான கமல்ஹாசன் – சரிகாவின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ‛லாபம்’ படத்தில் நடித்திருந்தார்.

பிரபாஸ் ஜோடியாக அவர் நடித்த ‘சலார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ‘சலார்-2’ படத்திலும், தமிழில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்திலும் அவர் பிசியாக இருக்கிறார்.

சமூக வலைத் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அண்மையில் ஸ்ருதி, யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

‘கமல் – சரிகாவின் மகள் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு – ஆனால், அதை மட்டுமே பெருமையாகக் கருதவில்லை – பார்க்கும் இடத்தில் எல்லாம் என்னை ‘இவள் கமல் மகள்’ என்றே சொன்னதை சுமையாக உணர்ந்தேன் – எனக்கென்று தனி அடையாளத்தைப் பெற விரும்பினேன்’ என சொல்லிய ஸ்ருதி, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘கமல் மகள் என அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை – ஒரு கால கட்டத்தில் சென்னையில் இருந்த நாட்களில், நான் யார்? என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தேன் – நீங்கள் யார்? என யாராவது கேட்டால், நான் டாக்டர் ராமச்சந்திரன் மகள்’ என சொல்லி விடுவேன்.

ராமச்சந்திரன் எங்கள் குடும்பத்து பல் டாக்டர் – எனக்கும் ஒரு புதியப் பெயரை சூட்டிக்கொண்டேன் – என்ன பெயர் தெரியுமா? பூஜா ராமச்சந்திரன் – எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதன் முதல் புள்ளி அந்தப் பெயர்.

எங்கள் பெற்றோர் பிரிந்ததும் நான் மும்பைக்குச் சென்று விட்டேன் – மும்பை எனக்குப் புதிய அனுபவத்தை அளித்தது – அங்கு எனக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டேன்’ என சொல்லும் ஸ்ருதி, “எப்படி இருந்தாலும், கமல் இல்லாத ஸ்ருதியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை” என உருகினார்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like