தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

அரசியல் சாசனம் 39 பி  மற்றும் 31 சி பிரிவின் கீழ் தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 39-ன் மற்றும் 31 சிபடி பொதுமக்கள் பயன்படுத்துகின்ற தனியார் சொத்துக்களை மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன், பொது நலன் இன்று எடுக்கலாம் என்று கடந்த காலத்தில் 1977 – நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பென்ச் தீர்ப்பு வழங்கி இருந்தார்.

இதில் அரசியலும் இருக்கின்றது. எப்படி என்றால் கடந்த 1969 – ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது. ஒன்று காமராஜர், நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டில், நீலம் சஞ்சீவரெட்டி, அதுல்யா கோஷ் ஆகிய முக்கியத் தலைவர்கள் தலைமையில் ஒரு காங்கிரசாகவும் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஒரு காங்கிரசாகவும் இரு பிரிவுகளாக ஆனது.

ஏனெனில், காமராஜர் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கினார். மேற்சொன்ன காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சியை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைக் குறித்து, திருப்பதியிலும் பெங்களூரிலும் தலைவர்கள் கூடி, இந்திரா காந்தி போக்கு சரியில்லை என்று கூறியதும் உண்டு. இதில் தாரகேஸ்வரி சின்ஹாவின் விமர்சனமும் கடுமையானது.

இதற்கிடையில், இந்திரா காந்தி, மன்னர் மானிய ஒழிப்பு, தனியார் வங்கிகளைத் தேசிய மயமாக்கியது என இரண்டு திட்டங்களைக் கொண்டுவந்தபோது இந்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரசில் மேலும் கவலையை உண்டாக்கியது.

காங்கிரஸ் இரண்டாகப் பிளவான பின்பு அன்றைய திமுகவும் இந்திய கம்யூனிஸ்ட்டும் (சி.பி.ஐ)  காங்கிரசை ஆதரித்தது. அதன் தலைவர் டாங்கே, எந்த ஆட்சேபனையும் இல்லாமல் ஆதரித்தார்.

இந்த நிலையில் இந்திரா காந்தி ரேய்பரேலி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என சோசலிஸ்ட் தலைவர் ராஜாநாராயணன் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பிறகு அவசர நிலையை இந்திரா அறிவித்தார். பிறகு, 42-வது அரசியல் சாசன திருத்தத்தை சுவரன்சிங் கமிட்டி பரிந்துரையின்பேரில் இந்த திருத்த மசோதவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார் இந்திரா.

இந்த திருத்த மசோதாவை அன்றைய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.கோகலே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி, அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாஜக), சோஷலிஸ்டுகள், சிபிஎம் ஆகியவை கடுமையாக எதிர்த்தன.

இந்த நிலையிலும் எந்த ஆட்சேபனை இருந்தாலும், நியாயங்கள் இருந்தாலும் தனியார் நிலங்களை, அரசு நினைக்கின்ற, எந்த விலையிலும் நஷ்ட ஈடு கொடுத்து மத்திய, மாநில அரசுகள் ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்டம் வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து தான் 1977-ல் கிருஷ்ணய்யர் பென்ச் நில ஆர்ஜிதச் சட்டம் சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது.  இதனடிப்படையில் 1982 மற்றும் 1986-ல் மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டம் சரியே என்று தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்சொன்ன 42-வது அரசியல் சாசன திருத்ததில் செக்குலர், சோசலிஸ்ட் அதாவது சோசலிஸ்ட் மதச்சார்பின்மை என்று அரசியல் சாசன முகப்பில் திருத்தப்பட்டது. ஆனால் செக்குலர் என்பது சரியான பதமல்ல, கம்யூனல் ஹார்மனி – மதம், மதநல்லிணக்கம் என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இப்படிப் பிழையான திருத்தங்களைத் செய்தார்கள். இந்த நிலையில்தான் சோசலிஸ்டு கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திரா காந்தி தன் அரசாங்கம் இருக்கும் என்று நிலைநாட்டிக் கொண்டார்.

அதே வழியில் தான் இந்த 39பி மற்றும் 31சி அரசியல் சாசன பிரிவின் படி பொதுநலன் என்ற நிலையில் தனியார் நிலங்களை கையப்படுத்தி நில ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்கள்.

நாடு முழுவதும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தனியார் நிலங்களை இதுவரை கையகப்படுத்தி வந்து, அரசு விரும்புகின்ற இழப்பீடுகளையும் வழங்கி வருகிறது.

இழப்பீடுகள் நியாயமாக வழங்கப்படவில்லை, நிலத்திற்கு ஏற்றசமமாக இழப்பீடுகள் இருப்தில்லை என்று தொடர்ந்து எல்லா உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் குவிந்தன.

எவ்வளவு இழப்பீடுகள் கொடுத்தாலும் நிலத்தை விட்டுக் கொடுத்தவர்களுக்கு இந்த இழப்பீடு திருப்திபடுத்தவில்லை. தான் வாழ்ந்த இடம், தான் விவசாயம் செய்த நிலங்களை எப்படி ஒருவர் திருப்பிக் கொடுப்பார். வேதனையோடு தான் அன்றைக்கு அரசாங்கம் அந்த நிலங்களை ஆர்ஜிதம் செய்தது. அதற்கு பின்னால் அந்த மக்களின் கண்ணீரும் இருந்தது.

இந்த நிலையில் சில நிலங்கள் மக்கள் நலனுக்காக ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் வேறு ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தியது உண்டு. இதுவும் நீதிமன்றங்களுக்கு வழக்காக வந்தன.

அண்மையில் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அளித்த தீர்ப்பில் கிருஷ்ணய்யர் தீர்ப்பு சரியானது அல்ல. நிலங்களை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவரை அரசாங்கங்கள் எடுத்துக் கொள்வது நியாயம் கிடையாது.

நில ஆர்ஜித சட்டத்தில் அதற்கென சில காரணங்களை வகுத்துக் கொண்டுதான் தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ணய்யர் அமர்வு கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பை தந்தது.

கடந்த காலத்தில் கிருஷ்ணய்யர் அமர்வில், நிலம், வீடு முதலிய அனைத்து சொத்துக்களும் நாட்டின் பொது சொத்துக்களாகக் கருதப்பட வேண்டும், பொதுமக்கள் நலனுக்கு தேவைப்பட்டால் தனியார் சொத்துக்களை அரசு விரும்புகின்ற இழப்பீடுகளைக் கொடுத்து நிலத்தை எந்தவித தடையும் இல்லாமல், தாராளமாக ஆர்ஜிதம் செய்யலாம் என்ற தீர்ப்பு இன்றைக்கு செல்லுபடி ஆகாத நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமயிலான தீர்ப்பு வந்துள்ளது.

நீதிபதி கிருஷ்ணய்யர், அரசாங்கம் ஒரு சொத்தை மக்கள் நலனுக்காக ஆர்ஜிதம் செய்துவிட்டால், அந்த சொத்தில் எந்த விதமான உரிமையோ, சொத்துக்கான பந்தமோ உரிமையாளருக்கு இருக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மேலும், தனி நபர்கள், தனி நிறுவனங்கள்ளைக் காட்டிலும் சமூக நலன் முக்கியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கிருஷ்ணய்யரின் தீர்ப்பு அன்று இருந்தது.

ஆனால், அன்றைய காலகட்டங்களில் அந்தக் கோட்பாடு, அந்த நெறிமுறைகள் பெரிதாக மதிக்கப்பட்டாலும், இன்றைக்கு உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் வந்துவிட்டது. இன்றைய நிலையில் அதைச் சிந்திக்க வேண்டும் என்று சமீபத்தில் வந்த தீர்ப்புக் கூறுகிறது.

கிருஷ்ணய்யர் தீர்ப்பு 1977 இல் அவசரநிலை காலத்தில் அளித்த தீர்ப்பாகும். அந்த தீர்ப்பு 42வது அரசியல் சாசன திட்டத்தில் இந்திராகாந்தி கொடூரமாக கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோசியலிசம் என்ற நிலையில் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணய்யர் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சென்னை ராஜர்தாணியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த தீர்ப்பை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் சமீபத்திய சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, கிருஷ்ணய்யரின் தீர்ப்புக்கு மாறாக உள்ளது. அதாவது, அரசாங்கம் தங்களுக்கு ஏற்றவாறு தனியார் நிலங்களையோ, சொத்துக்களையோ இனிமேல் ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று  தீர்ப்பை வழங்கியுள்ளது.  

கிருஷ்ணய்யருடைய சோசலிசம், மக்கள் நலன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனியார் சொத்துக்கள் எவ்வளவு சிரமப்பட்டு, அதை காலங்காலமாக விவசாய நிலங்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்று சந்திரசூட் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 1986இல் மகாராஷ்டிரா அரசு, மும்பையில் பொதுமக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஹவுசிங் ப்ராஜெக்ட் என்று சில தனியார் நிலங்களை கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சங்கம் அமைத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கு மனு தாரர்களுக்கு எதிராக தள்ளுபடி ஆனது. அதற்கு மேல்முறையீடாக 1992-ல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்குகள் உட்பட மேலும் பல்வேறு நில ஆர்ஜித வழக்குகளை எல்லாம் சேர்த்து  2002-ல் 9 நீதிபதிகள் இடம்பெற்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தலைமை நீதிபதி சந்திரசூட், ரிஷிகேஸ் ராய், நாகரத்னா, சுதன்சு துலியா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிந்தல், சுரேஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மைஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வி.ஆர்.கிருஷ்ணய்யர்

இந்த விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு, அண்மையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதில், சந்திரசூட் உள்பட 7 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வாசித்தனர்.

இதில், கிருஷ்ணய்யருக்கு எதிராக, தீர்ப்பில் சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்த வழக்கில் இருந்த பெண் நீதிபதி நாகரத்தினா மற்றும் ஹார்ஸ் ஆகியோர் தங்களுடைய எதிப்பினைத் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி ராய், ஆக்கப்பூர்வமான, எதிர்நோக்குப் பார்வையில் இயற்கை வளத்தை மனதில்கொண்டு அறிவுபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைப் பதிவு செய்யவேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று அறிவ்க்கப்பட்டு நிலங்களை ஆர்ஜிதம் செய்தார்கள்.

அதில் பெருவாரியான நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டதே தவிர, பயன்பாட்டுக்கு வரவேயில்லை. விவாசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பிடிங்கி, தரிசாகப் போடுவது ஏற்புடையது இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல், வேளாண்மைப் பாதுகாப்பு என்று மனதில் கொண்டால் சந்த்திர சூட் தலைமையிலன இந்த தீர்ப்பு  சரியானதே.

இருப்பினும் 1977-ல் அளித்த தீர்ப்பு, நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்லியதுபோல அனைத்து தனியார் நிலங்களும் பொது சொத்துக்களே என்று கருத முடியாது.

சில குறிப்பிட்ட காரணங்களைத் தவிர அனைத்து தனியார் நிலங்களும் தங்களது இஷ்டம் போல பொதுச் சொத்துக்களாக கருதி ஆர்ஜிதம் பண்ண முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

எப்படிப்பட்ட நிலம் நிலத்தினுடைய தன்மை, அது எதற்காக பயன்படுத்துகிறார்கள், அதற்கான அவசரம் அவசியம் என்ன? என்பதெல்லாம் குறித்துதான் நிலங்களை இனிமேல் ஆர்ஜிதம் செய்ய முடியும்.

கிருஷ்ணய்யர் குறிப்பிட்டது போல அனைத்து நிலங்களும், எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையிலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம். அது பொது சொத்துக்கள் என்று கம்யூனிச சோசியலச பார்வையில் பார்க்க முடியாது என்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இனிமேல் தனியார் சொத்துக்களை, கிருஷ்ணய்யர் தீர்ப்பின் பிரகாரம், அதாவது 1977 தீர்ப்பின் பிரகாரம் எல்லா சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த வழக்கில் ஒரு சில அரசியல் சட்டத்தையும் பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் முக்கிய வழக்குகளாகக் கருதப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கு, கோலகநாத் வழக்கு, மினர்வா மில் வழக்கு, மேனகா காந்தி பாஸ்போர்ட் வழக்கு, ஏ.கே கோபாலன் வழக்கு போன்ற வழக்குகள் எல்லாம் முக்கியமாக கருதப்பட்டன.

மனித உரிமை, அடிப்படை உரிமை, நில ஆர்ஜித சம்பந்தமான விஷயங்கள், நாடாளுமன்ற அரசியல் சாசனத்தினுடைய அடிப்படைக் கூறுகளை (Basic structure) மாற்ற முடியுமா என்பதெல்லாம் உள்வாங்கி, கடந்த 70 ஆண்டுகளில் முக்கியமாக கருதப்பட்ட (லேண்ட் மார்க் வழக்குகள்) வழக்குகளை எல்லாம் கவனித்து, அதனுடைய தாக்கங்களை எல்லாம் உள்வாங்கி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வந்தது கவனிக்கத்தக்கது.

அரசியல் சாசன சட்டத்தை நாடாளுமன்றம் திருத்த முடியாது என்று கேசவானந்த பாரதி வழக்கில் சொன்னதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இது ஒரு மிக முக்கியமான தீர்ப்பு. இது பற்றி ஆங்கிலப் பத்திரிகையில் விரிவாக வந்துள்ளது. ஆனால், இவை தமிழ்ப் பத்திரிக்கைகளில் வராமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதுதான் நம்முடைய பார்வையாக இருக்கிறது. தேசிய அளவில் கவனம்பெற்ற மிக முக்கியமான தீர்ப்பை வெளியிட்டதில் இருந்தே, ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும் தமிழ்ப் பத்திரிகளைகளுக்குமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

குறிப்பிடத்தக்க இந்த வழக்கின் முழு விவரங்களை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்க்கவும்.

https://thaaii.com/wp-content/uploads/2024/11/supreme-court-of-india.pdf

You might also like