எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!

‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020)
சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா?
வல்லிக்கண்ணன்: பல காரணங்கள். முக்கியமான முதலாவது காரணம் பொருளாதார வளர்ச்சி. அப்பா இறந்த பிறகு, குடும்பப் பொருளாதாரம் மிகவும் சரிந்து, வறுமைநிலையே தொடர்ந்தது.
பொருளாதார வசதி திருப்திகரமாக இருந்தால்தான், இல்லற வாழ்வும் சந்தோஷம் நிறைந்ததாக அமையும். இல்லையெனில், பலவிதச் சிக்கல்களும் தகராறுகளும் அமைதியின்மையும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நான் சந்தோசமாக வாழ விரும்பினேன். அதற்காக எனக்கு என்று ஒரு வாழ்க்கை முறையைத் தேர்ந்து கொண்டேன். அது சீரான, திட்டமான, நிரந்தரமான வருமானம் தரக் கூடியது அல்ல. ஆனால், தனி நபருடைய சந்தோஷம் என்பது பணத்தை நம்பி இருப்பது இல்லை.
அது வாழ்க்கைத் துணை என்று வரக்கூடிய பெண்ணுக்குப் புரியாது. பிடிக்கவும் செய்யாது. பெண்களைப் பற்றி எனக்கு எப்போதுமே நல்ல அபிப்ராயம் கிடையாது.
அதிலும், சைவ வேளாளர் இன மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் அதிலும் கார்காத்த வேளாளர் குல திலகங்கள் பற்றி. இவர்கள் மனோவிசாலம் பெறாத, குறுகிய நோக்குடைய, தன்னல நாட்டம் மிகுதியாக உடையவர்கள்.
‘வாழ்க்கைத் துணை’யாக விளங்குவதற்கு மாறாக கழுத்தறுப்பாகக் கூடியவர்கள். இதனாலேயே, மனைவி என்பவள் ஒருவனைப் பற்றுகிற தீராத நோய்; அவனது வாழ்க்கை பூராவும் தொல்லை தரக் கூடிய கடுமையான வியாதி என்று நான் எழுதி இருந்தேன்.
கணவனிடம் உள்ளூர வெறுப்பை வளர்க்கிறவள் மத்திய தர வர்க்கத்து மனைவி. மரியாதை காட்டுவதுபோல் நடந்து கொண்டாலும், நெருக்கடி நேர்கிறபோது அவன் இவன் என்று பேசக்கூடியவள்.
கணவன் செத்த பிறகு கஷ்ட காலத்தில் ‘இருந்தும் கெடுத்தான், பாவிமட்டை செத்தும் கெடுத்தான்’ என்று புருஷனை ஏசி புலம்புகிற பத்தினிகளை நான் பார்த்திருக்கிறேன். அவளைச் சேர்ந்தவர்களும் பழிப்பார்கள்.
அப்படி வரும் எவரும் நான் செத்ததற்குப் பிறகு கூட என்னை குறை கூறக் கூடிய பழிக்கு இடம் கொடுக்கலாகாது என நான் உறுதி பூண்டேன்.
சிலர் இயல்பாகவே துறவு உள்ளம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட இயல்பு என்னுடையதாக இருக்கலாம். எனது 17, 19 வயதுகளில் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ராமதீர்த்தர், சிவானந்தா ஆகிய ‘சுவாமி’களின் நூல்களை எனக்கு மிகுதியும் படிக்கக் கிடைத்தன.
அவை என் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தன என்று சொல்ல வேண்டும். நான் பிரம்மச்சாரியாக வாழ்வது என்று தீர்மானித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
பொறுப்புகள் இல்லாமல் வாழ்வது எனக்குப் பிடிக்கும். கல்யாணம், மனைவி, குடும்பம் முதலியன பொறுப்புகளை அதிகம் சுமத்துகிற பிணைப்புகள். எனவே, அவற்றிலிருந்து ஒதுங்கினேன்.
ஆகவே, நான் சுத்த சுயம்பிரகாசச் சுயநலம் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இலக்கிய சேவைக்காகத் தான் நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று நான் சொன்னால், அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
சிவசு: எழுத்தை வேள்வியாக எண்ணுபவன், தொழிலாகக் கருதுபவன்-இவர்கள் தங்களைப் பொருத்து எப்படி?
வல்லிக்கண்ணன்:எழுத்தை வேள்வியாகக் கருதுகிறவர்கள், அபூர்வமாக ஒரு சிலரே இருப்பர்; இருக்க முடியும்.
இவர்களுடைய வாழ்க்கையே இவர்களைத் தகிக்கும் நெருப்பாக அமையும்- சமூகச் சூழலில், போதிய மன உறுதியும், எதிர்படுகிற அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும்,
குன்றாத ஆர்வம் குறையாத-ஊக்கம் தளராத-தன்னம்பிக்கையும் பெற்றிருப்பவர்கள் இவ்வழியில் வெற்றி பெற்று, சாதனைகள் புரிய முடியும்.
இது இலட்சியப் பாதை. நான் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது போல, லட்சியப் பாதை பசும்புல் தடம் அல்ல; ரோஜாவும் மென் மலர்களும் தூவப்பட்ட நடைபாதை இல்லை; காங்கிரீட் ரோடும் இல்லை.
ஜனரஞ்சகமான முறையில் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு, வாசகர்களின் ரசனைத் தரத்தை மட்டம் ஆக்குகின்றன பெரிய பத்திரிகைகள். ‘ஸ்டிரியோ-டைப்டு’ கதைகளும் தொடர்கதைகளும் பெருகுவதற்கு துணை புரிகின்றன.
வல்லிக்கண்ணன் பண போதையும் புகழ் போதையும் கொடுத்து, ஆற்றல் நிறைந்த – தரம் பெற்ற, இலக்கிய ருசி கொண்ட படைப்பாளிகளையும் தரம் குறைந்த எழுத்துக்களை உற்பத்தி செய்யும் மிஷின்களாக மாற்றி விடுகின்றன.
பெரிய பத்திரிகைகள் சிந்தனையை வளர்க்க விரும்புவதில்லை. கனமான விஷயங்களைக் கொடுக்க ஆசைப்படுவதும் இல்லை.
சிவசு: எழுத்தாளனுக்குத் தத்துவச் சார்பு அவசியமா? இன்று தமிழில் யாராவது அப்படி உண்டா?
வல்லிக்கண்ணன்: தத்துவம் (Philosophy) என்று பொதுவான நோக்கில் எடுத்துக் கொண்டால், உண்மையான-அனுபவ முதிர்ச்சியுடைய எழுத்தாளன் ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கை, இந்த உலகம் ஆகியவை பற்றி ஒரு தத்துவ நோக்க (Philosophical out look) இருக்கத்தான் செய்யும்.
அது அவனுடைய எழுத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டவாறு இருக்கும். குறிப்பாக சிலத் தத்துவ ஈடுபாடுகள்- எக்ஸிஸ்டனஸியலிசம் – போன்ற ஒன்று உண்டா, தேவையா என்று பார்த்தால், அது எழுத்தில் ஈடுபடுகிறவர்களின் மனப் பண்பைப் பொறுத்த விஷயம். சார்பு இருந்தே தீர வேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லை.
சமீப சில வருடங்களில், தங்களை ‘இன்டெலக்சுவல்ஸ்’ என்று காட்டிக் கொள்வதற்காக ஜே.கே (ஜே.கிருஷ்ணமூர்த்தி)யிடம் ஈடுபாடு கொண்டவர்கள் போல் போவதும், எழுதுவதும் எழுத்துலகில் ஒரு ஃபேஷனாக வளர்ந்துள்ளது.
அரசியல் தத்துவச் சார்பு என்று சொன்னால், மார்க்சியத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட அநேகர் சிறுகதைகளிலும், நாவல்களிலும் இத்தத்துவப் பார்வையைப் பிரதிபலிக்க முயன்று வருகிறார்கள்.
டி.செல்வராஜ், பொன்னீலன், சின்னப்ப பாரதி போன்றவர்களைக் குறிப்பிடலாம். இலங்கை எழுத்தாளர்கள் இத்தரத்தில் தீவிரமாக முன்னேறி இருக்கிறார்கள்.
அரசியல் தத்துவச் சார்பு ஒரு எழுத்தாளனுக்குக் கண்டிப்பாக இருந்தே தீர வேண்டுமா என்று கேட்டால், இருந்தே ஆக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதுதான் என் சொந்த அபிப்பிராயம்.
சிவசு: உங்களின் சார்பு நிலை கூற முடியுமா?
வல்லிக்கண்ணன்: நான் எந்த தத்துவத்தையும் பொதுவானது, அரசியல் ரீதியானது எதையும் சார்ந்திருக்கவில்லை.
வாழ்க்கைதான் எனது பாடநூல். மனிதர்களின் அனுபவங்கள் தான் எனக்கு அறிவூட்டும் தத்துவம்-மனிதாபிமானமும் அன்பும் தான் எனது மதம்.
நான் முன்பே குறிப்பிட்டது போல, எதைப் பற்றியும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், எழுதப்படுபவைத் தரத்துடன் அழகாக, கலைநயத்தோடு எழுதப்பட வேண்டும். இதுவே என் கொள்கை.
சிவசு: வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
வல்லிக்கண்ணன்: வாழ்க்கை வேறு; எழுத்து வேறு தான். வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது எழுத்து, ஆனாலும் எழுதுகிறவர்கள் தாங்கள் எழுதுகிறபடிதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை.
அப்படி வாழ்ந்து விடவும் இயலாது. சொல்லும் செயலும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆனாலும் அப்படி வாழ வாழ்க்கையே அனுமதிப்பதில்லை. ஒரு உதாரணம்: பொய் சொல்லக்கூடாது; சத்தியமே கடைக்கப்பிடிக்கப் பெற வேண்டும் என்பது உயர்ந்த நோக்கு ஆயினும், இதை அன்றாட வாழ்க்கையும் சமூக நிலையும் ஆதரிப்பதில்லை.
ஒவ்வொரு நபரும் உணரக்கூடிய நடைமுறை இது. யோக்கியமான எழுத்துக்களை எழுதுகிறவன் அயோக்கியத்தனமாக வாழ்க்கை வாழ்வதும் அயோக்கியத் தனமான எழுத்துக்களை எழுதிவிட்டு, யோக வாழ்க்கை நடத்துகிறவனும் எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இருந்திருக்கிறார்கள்-இருக்கிறார்கள்-இருப்பார்கள்.
கூடுமான வரை, சொல்வதுபோல் செய்வதும், எழுதுவதுபோல் வாழ்வதும் விரும்பத்தக்கது; வரவேற்கத்தகுந்தது. பாராட்டப் படவேண்டியதும் கூட.
சிவசு: சமூக மாற்றத்திற்கு இலக்கியம் படைப்பவர்களால் என்ன சேவை செய்ய முடியும்?
வல்லிக்கண்ணன்: ஒரு கசப்பான உண்மையைக் கட்டிக் காக்கத்தான் வேண்டும். எழுத்து-இலக்கியம்-பெருத்த சமூக மாறுதல்களை உண்டாக்குவதில்லை. தனிநபர்களைக் கூட அதிகம் மாற்றி விடுவது இல்லை.
உண்மையில், இலக்கியத்துக்கு அத்தகைய வலிய சக்தி இருக்குமானால், திருக்குறள் எத்தகைய அற்புதமான மாற்றங்களை தனிநபர்கள் இடத்தும், மனித சமூகத்திலும் விளைவித்திருக்க வேண்டும்!
எப்பவோ ஒரு (Uncle Tom’s Cabin) அங்கிள் டாம்’ஸ் கேபின் போன்ற படைப்பு, ரூசோவின் எழுத்துக்கள் மிகச் சிறந்த விளைவுகளை உண்டாக்கி இருக்கலாம். இதற்கும் காலம், சமூக நிலை, மக்கள் நிலை போன்ற புறக் காரணங்கள் பல இருந்திருக்க வேண்டும்.
திருந்த வேண்டும் – மாற வேண்டும் என்ற உள்ளுணர்வு உந்துகிறபோதுதான் தனிமனிதன் மாறுகிறான்; சீர்திருத்துகிறான். அந்நேரத்தில் ஒரு நிகழ்ச்சி அல்லது எழுத்து அவனை வெகுவாக பாதிக்கும்.
மற்றபடி, சட்டமோ, தண்டனையோ, உபதேசமோ, நாடகமோ எழுத்தோ எவரையும் மாற்றிவிட இயல்வதில்லை. கூட்டத்தை, மக்களை, எழுத்தைவிட சக்தி வாய்ந்த பேச்சு வெகுவாகப் பாதிக்கிறது.
மார்க் அந்தோனியின் சொற்பொழிவு முதல் சி.என்.அண்ணாதுரையின் பேச்சு ஈறாக, வரலாற்று ரீதியில் எத்தனையோ உதாரணங்கள்.
ஆனாலும், இலக்கியம் உண்மையைச் சொல்ல வேண்டும். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். வாழ்க்கைப் பற்றி, மனிதர்களைப் பற்றி சிந்திக்கும்படி வாசகர்கள் உள்ளத்தைத் தொட வேண்டும்.
அதற்காக, படைப்பாளிகள் மனிதாபிமானத்துடனும் அன்புடனும் எழுத்துக்களைப் படைக்க வேண்டும்.
“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”
You might also like