அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் சாதனை!

அமெரிக்காவின் 47-வது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். தேர்தலில், ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ச்சியாக இல்லாமல், இடைவெளி விட்டு, இரண்டாம் முறையாக ஒருவர் தேர்வு செய்யப்படுவது இது 2 ஆம் முறை.

அதிபர் தேர்தலுடன் அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 6 பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். அந்தப் பகுதியிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி சுஹாஸ். இவரது பெற்றோர் பெங்களூருவைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.

ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்ரீ தானேதர் கர்நாடக மாநிலம் பெலகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் பிறந்தவர்.

ரோ கண்ணா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். பிரமிளா ஜெயபால், சென்னையில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். அமி பெரா, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

தோல்வியை ஏற்ற கமலா ஹாரிஸ்!

அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ‘’பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். சில சமயங்களில் நம் வெற்றி சற்று தள்ளிப்போகும் – அதற்காக நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை‘’ என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற ட்ரம்பை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது சமூக வலைதளத்தில், ‘‘என் நண்பர் ட்ரம்பின் அமோக வெற்றிக்கு வாழ்த்துக் கூறினேன் – ’அமெரிக்க – இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம்’ என அவரிடம் தெரிவித்தேன்’’ என பதிவிட்டுள்ளார்.

– மு.மாடக்கண்ணு

You might also like