மணிகண்டன்: சினிமா ‘ஆல்-ரவுண்டர்’!

‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார் மணிகண்டன்.

அவர் தேர்ந்தெடுக்கும் மாறுபட்ட கதாபாத்திரங்கள், அதில் வெளிப்படுத்தும் யதார்த்தம் மிகுந்த நடிப்பால் தனி அடையாளம் பெற்று வருகிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் மிமிக்ரி கலைஞராகப் பங்கேற்று, பின்பு திரைப்படங்களில் அறிமுகமானவர் மணிகண்டன், தற்போது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனத் திரைத் துறையின் முக்கியப் பிரிவுகளில் திறம்படப் பணியாற்றி வருகிறார்.

சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், கிரிக்கெட் வீரராக வேண்டுமென முதலில் கனவு கண்டார். ஆனால் பள்ளி, கல்லூரி நாள்களிலேயே மிமிக்ரி செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

அதனால், திரைத் துறையில் கவனம் செலுத்துமாறு நண்பர்கள் சொல்ல, தன் திறமையை நம்பி சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். மெல்ல புகழ் வெளிச்சமும் கிடைத்தது.

ஆரம்பத்தில், ‘காதலும் கடந்து போகும்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி, பின்பு ‘காலா’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்தப் படங்கள் வெளியானபோதே மணிகண்டனின் நடிப்பு பாராட்டப்பட்டது.

ஆனால், ‘ஜெய் பீம்’ படத்தில் ‘ராசாக்கண்ணு’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சவாலான கதாபாத்திரத்திலும் தன்னால் திறம்பட நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

இந்தப் படத்தை அடுத்து நாசர், அசோக் செல்வன், ரித்விகா ஆகியோருடன் சேர்ந்து நடித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்கிற படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

2023-ம் ஆண்டுவரை துணை நடிகராக வலம்வந்த மணிகண்டன் ‘குட் நைட்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

குறட்டையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் ஓயாமல் குறட்டைவிடும் நபராக அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றது.

‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து ‘லவ்வர்’ படத்தில் மீண்டும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், தன்னைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்திக்கும் ‘டாக்ஸிக்’ காதலன் கதாபாத்திரம் என்பதால், படத்தின் முதன்மைக் கதாபாத்திரமே வில்லனாகவும் அமைந்துவிட்டது.

கதைக் களத்தைப் புரிந்துகொண்டு, தனது நடிப்பில் அதைச் சரியாகப் பிரதிபலித்திருந்தார் மணிகண்டன்.

இந்தப் படம் திரையரங்கிலும் ஓ.டி.டி-யிலும் வரவேற்பைப் பெற்று, மணிகண்டனின் நடிப்பும் பேசப்பட்டது.

தொடர்ந்து நல்ல கதைக் களத்தைத் தேர்வுசெய்து நடிப்பதால், இவரது அடுத்தடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஆல்-ரவுண்டராக வலம்வரும் மணிகண்டன், தமிழ்த் திரையுலகில் நிலவும் பன்முகக் கலைஞர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பி இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்கக்கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை, ‘தீபாவளி’ மலர் 2024.

You might also like