நூல் அறிமுகம்: கூலித் தமிழ்!
‘காபி’, ‘தோசை’ என்று கலாய்ப்பதில் காலவிரயம் செய்துகொண்டிருக்கும் நண்பர்கள் இலங்கை காப்பித் தோட்டங்களில் உரமாகிப்போன லட்சக்கணக்கான இந்தியத் தமிழர்களின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘கூலித்தமிழ்’ என்ற நூல் புறக்கணிக்கப்பட்ட அந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது.
1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தோட்டக் கூலிகளை ஏற்றிச்சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் புயலில் சிக்கி 114 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
“இலங்கைக் காப்பித் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலிகளாகத் தமிழர்கள் மேற்கொண்ட மரண யாத்திரையில் நமக்குத் தெரியவந்திருக்கும் முதலாவது பெரிய மனிதப்பலி இதுதான்” என அந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் மு. நித்தியானந்தன்.
1843 – 1867 க்கும் இடைப்பட்ட 24 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கூலித்தமிழர்கள் இறந்துபோனதாக இந்த நூலாசிரியர் கூறுகிறார்.
1869-ல் வெளியான ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ என்ற மலையகத்தின் முதல் தமிழ் நூலைக் கண்டுபிடித்து அதைப்பற்றி விரிவான அறிமுகத்தைத் தந்திருக்கும் மு.நித்தியானந்தன் அந்தக் கும்மி நூலில் பேசப்பட்டுள்ள செய்திகள் அதே காலகட்டத்தில் நிலவிய யதார்த்தத்துக்கு நேர் எதிராக இருப்பதை வரலாற்று ஆவணங்களோடும், தரவுகளோடும் ஒப்பிட்டு நிறுவுகிறார்.
மலையக நாட்டார் பாடல்களில் கசியும் துயரத்துக்கும் இந்தக் கும்மிப் பாட்டில் வெளிப்படும் குதூகலத்துக்கும் இடையே உள்ள முரண்களை எடுத்துக்காட்டுகிறார்.
அப்படியொரு கும்மி எழுதப்படவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
அந்த கூலித் தமிழர்களிடையே மதமாற்றத்தில் ஈடுபட்ட மிஷனரிகள், கிறித்தவத்தை ஏற்ற கூலிகளின் நிலை, மதம் மாறாத கூலித்தமிழர்களின் முனியாண்டி வணக்கம், காப்பி தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆள் பிடிப்பதற்கு தமிழ்நாட்டிலிருந்த முகவர்கள் செய்த தந்திரங்கள் எல்லாமே இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
முப்பது பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரையின்மூலம் 19-ஆம் நூற்றாண்டில் நிலவிய இலங்கை காப்பி தோட்டத்தின் கொடூரமான சூழலை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.
‘காப்பி குடித்தது எந்த சாதி?‘ என்ற ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பவர்கள் காப்பி பயிரிட்டு வளர்த்தது யார்? என்ற கேள்வியை நோக்கித் தமது கவனத்தைத் திருப்ப விரும்பினால் இந்த நூல் உதவும்.
கூலித் தமிழ்!
ஆசிரிர்யர்: மு.நித்தியானந்தன்
வெளியீடு: க்ரியா, 2014
விலை : ரூ. 400/-
ஒரு அடிக்குறிப்பு:
யாரை பிரிட்டிஷ்காரர்கள் தம் சமையலராக வைத்திருந்தனர், அவர்கள் எப்படி காப்பி போடுவதில் திறமைசாலிகளாக இருந்தனர், அவர்களை காப்பி கிளப்புகளுக்குள் நுழையக்கூடாது என்று சொன்னது எப்படி முரண்பாடானது என்ற செய்திகளை அறிய விரும்பினால் அவர்கள் அயோத்தியாசப் பண்டிதரிடம் போகவேண்டும்.