போலி தமிழ்த் தேசியவாதி சீமான், தனித் தமிழ்நாடு கோரி போராடட்டும்!

ஒற்றைப் பனைமரம் பட இயக்குநர் புதியவன் ராசையா அதிரடி

தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது. படம் தொடர்பான சர்ச்சையான விசயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

@ புதிய சங்கம் அமைக்க நினைக்கும் ஒருவரை, சக தமிழரே கொல்வதாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.. இது பொது விசயங்களுக்காக குரல் கொடுப்பவருக்கு விடும் எச்சரிக்கை விடுப்பது போல ஆகிவிடாதா?

# அந்தக் காட்சியில் கொலை செய்த பிறகு, சுட்டவர் மனம் குமுறி, “சுந்தரம் அண்ணா என்னை மன்னிச்சுடுங்கள்.. நானும் சூழ்நிலைக் கைதி” என்பார். அதாவது சிங்கள ராணுவ – உளவுத்துறையின் நெருக்கடியை அப்படிச் சொல்லி இருக்கிறேன். இதை தமிழர்களுக்கு எதிரான காட்சியாக பார்க்க வேண்டியதில்லை.

@ இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது, அமைதிப்படை அங்கு சென்றது, அதன் நடவடிக்கைகள் விமர்சனுத்துக்குள்ளானது, ராஜீவ் கொலை, 2009 யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கு போன்றவை ஈழ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குறித்து படத்தில் இல்லை என்கிற விமர்சனமும் இருக்கிறது!

# ‘வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி பிரதேசத்தை தற்காலிகமாக அமைப்பது; ஒரு வருடத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது’ என்றது அந்த ஒப்பந்தம்.

ஈழ மக்களுக்கான ஒரு நல்ல தீர்வை நோக்கி நகரும் சூழல் உருவாகி இருந்தது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் அனைத்தும் வரவேற்றன விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர!

அதை விடுதலைப் புலிகள் அந்த ஒப்பந்தத்தை, கூர்நோக்கோடு பார்க்க தவறினார்கள்; ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு என பூகோள அரசியலை புரிந்துகொள்ளாமல் – தீர்மானித்தார்கள்.

அந்த தவறான முடிவுதான், எங்கள் மக்களை முள்ளி வாய்க்கால் வரை எடுத்துச்சென்று படுமோசமான தோல்வியை சந்திக்க வைத்தது.

ஒரு சிறிய தேசிய இனம் இழக்கக் கூடாத அளவு பெருந்தொகையான மக்களை இழந்தது. கடைசியில் மாநில சுயாட்சி கூட இல்லாத சூழலை எமது மக்களுக்கு உருவாக்கிவிட்டது.

எதிர்ப்பது விடுதலைப்புலிகள் அமைப்பு என்று எண்ணாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதும் வன்முறையை ஏவியதும் பலாத்காரங்களில் ஈடுபட்டதும் இந்திய ராணுவம் செய்த தவறு.

அப்படி நடக்காவிட்டால் இந்தியா பக்கமே ஈழத்தமிழர் இருந்திருப்பர். சுயாட்சி என்கிற நல்ல தீர்வை நோக்கி அரசியல் சூழல் நகர்ந்திருக்கும்.

கோடிக்கணக்கான மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவரை கொலை செய்தது ஏற்க முடியாத ஒன்று. ஈழப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது அந்த சம்பவம்.

அந்த சம்பவம்தான், மேற்கத்திய நாடுகளில் ஈழப்போராளிகளை பயங்கரவாதிகளாக காட்டியது. அதனால்தான் புலிகள் அதை துன்பியல் சம்பவம் என சொல்ல வேண்டி வந்தது. அதைத் தவிர்த்திருக்க வேண்டும். நாம் அந்தக் கொலையை ஏற்கவில்லை.

ஆனால், நான் படம் எடுத்தது தற்போதைய நிலை குறித்தும், எம் மக்கள் மீதான விமர்சனமும் என்பதால் அதையெல்லாம் பதிவு செய்யவில்லை.

@ தமிழ்நாட்டு மீனவர்களை, எல்லைதாண்டி வந்தார்கள் என இலங்கை கடற்படை தாக்குவது, கொல்வது நடக்கிறது. ஈழ மீனவர்களும், ‘தமிழ்நாட்டு மீனவர்கள் மடிவலை போட்டு மீன் குஞ்சுகளை எல்லாம் பிடித்துவிடுகிறார்கள். இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக தாங்கள் நினைப்பது …?

# மடி வலைகள் இலங்கைக் கடற்பரப்பில் நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்துவது மறுக்க முடியாத உண்மை.

எல்லை கடந்து தமிழக மீனவர்கள் வருவது அரசியலாக்கப்படாமல், சுமுகமாக இரு தரப்பும் பேசி முடிவு செய்யவேண்டும்.

உடமைகள் கையகப்படுத்தல், கைது போன்றவை இரண்டு நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது.

இரண்டு அரசுகளும் பேசாது, இதற்கான தீர்வு கிட்டாது. கொலைகளை எந்த அரசு மேற்கொண்டாலும் அது வன்மையான கண்டனத்திற்குரியது.

@ வெளிநாட்டில் புலி அமைப்பினர் வசூலித்த பெரும் பணம் தனி நபர்களால் பதுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் ஈழத்துக்கு உல்லாச பயணமாக வந்து, தமிழ் பெண்களையே சீரழிக்கிறார்கள் என்று அழுத்தம் திருத்தமான காட்சிகளில் சொல்லி இருக்கிறீர்கள்!

# அப்பாடா.. இப்போதாவது படத்தின் நோக்கத்துக்கு வந்தீர்களே!

ஈழத்தமிழர் நிலை குறித்து எடுத்தால் ஆயிரமாயிரம் படங்கள் எடுக்கலாம்! அவ்வளவு வேதனைக் கதைகள் எங்களிடம் இருக்கின்றன.

இந்தப் படத்தில் நான் குறிப்பாக எடுத்தது, முன்னாள் போராளிகளை – தேசத்துக்காக போராடியவர்களை – பிற தமிழர்கள் மதிக்க வேண்டும், வறுமையில் சிக்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி கொழுக்கும் நபர்கள் உதவ வேண்டும் என்பதுதான். அதைத் தெளிவாக சொல்லி இருப்பதாக நம்புகிறேன்.

@ இந்தப் படத்தில் இந்திய சென்சார் போர்டு தடை செய்த காட்சிகள் – வார்த்தைகள் என்னென்ன..?

# ஏற்கெனவே சொன்னது போல, ஒரு காட்சியில், ‘வேளாளர்’ என்கிற வார்த்தை… கதை நாயகன் சிங்கள ராணுவத்தினரால் நிர்வாணமாகக் கிடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது, பக்கத்து அறையில் இருந்து ஒரு பெண்ணின் அலறல் கேட்கும்.. அப்போது சிங்களத்தில் ராணுவ வீரர்கள், ‘அவளது பிரத்யேக உறுப்பில் போத்தலை விடு’ என்று சிங்களத்தில் வார்த்தைகள்… இவற்றை மியூட் செய்யச் சொன்னார்கள்..!

@ ஈழ மக்களின் வேதனையைச் சொல்லும், இயக்குநர் புகழேந்தி தங்கராஜின் ‘காற்றுக்கென்ன வேலி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு, இந்திய சென்சார் போர்டு தடை வித்தது உங்களுக்குத் தெரியுமா?

# ‘காற்றுக்கென்ன வேலி’ படம் குறித்து அறியவில்லை. வேறு சில படங்கள் குறித்து அறிந்திருக்கிறேன்.

@ ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம், இலங்கையில் படம் வெளியாகிறதா? அங்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதா?

# அங்கே சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பி இருக்கிறேன். இன்னும் பதில் இல்லை. இது குறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். என்னை சிங்கள உளவுத்துறையின் கையாள் என சொல்வர்கள் இந்த விசயத்தைக் கவனிக்கட்டும்.

@ நாம் தமிழர் கட்சி சீமான், ‘ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது.. அப்படி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என அறிவித்து இருக்கிறாரே!

# சீமான் அறிக்கையைப் பார்த்தபின் தங்கள் திரையரங்குகளிலும் படத்தை திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்கள் கேட்டனர். தமிழ்நாடு முழுதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு இருக்கிறது.

என் மண்ணைப் பற்றி, என் மக்களின் வாழ்வியலைப் பற்றி என் அரசியல் சார்ந்து படம் செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும் பார்வையாளர்கள் உரிமை…!

நாங்கள் போராடிய காலத்தில் போராடினோம். பல லட்சம் மக்களை காவு கொடுத்து இருக்கிறோம். வெல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சுதாரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்கும் அவகாசம் தேவை!

இப்போது எங்களது பொருளாதார, சமூக சீரழிவுகளைச் சரி செய்ய வேண்டும். எம் மக்கள் கல்வி கற்க வசதி வேண்டும். இவைதான் பிரதான விசயங்கள்!

போலி தமிழ்த் தேசியவாதி சீமான், தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என நினைத்தால், இங்கே தனித்தமிழ்நாடு வேண்டும் என போராடட்டும். நாங்கள் எப்போது போராட வேண்டும் என்று நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என அந்த நபர் பேசத் தேவையில்லை.

@ வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனரே…!

# எல்லா ஈழத்தமிழரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரவேற்கவே செய்கிறார்கள்.

அகதிகளாக வெளிநாட்டில் பிழைக்கும் ஏழை ஈழத்தமிழரிடம், பிரபாகரனின் பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கும் போலி தமிழ்த் தேசியவாதிகள், லோ கால்டு பாஸிட்டு மெண்ட்டாலிட்டி உள்ளவர்களே எதிர்க்கிறார்கள்.

காரணம், அவர்களை நான் இந்தப் படத்தின் மூலம் அம்பலப்படுத்திவிட்டேன் என்பதால்! தாங்கள் தொடர்ந்து ஈழ மக்களை சுரண்ட முடியாமல் போய்விடும், பதுக்கிய பணத்துக்க இழப்பு வந்துவிடும் என்று பயந்து எதிர்க்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால், இங்கே போலி தமிழ்தேசியவாதி சீமான் எந்த காரணத்துக்காக இந்த படத்தை எதிர்க்கிறாரோ, அதே காரணத்துக்காகவே சிலர் வெளிநாடுகளில் எதிர்க்கிறார்கள்.

@ இந்தப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அதே போல வி.சி.க. தலைவர் திருமாவளவன் எழுதிய, ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் லண்டனில் வெளியிடப்பட்டபோது, அந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். அவர்கள், ‘ஒற்றைப் பனை மரம்’ படம் குறித்து, எதிர்ப்பு குறித்து உங்களிடம் பேசினார்களா?

# தோழர் பா. ரஞ்சித் மட்டுமே கலந்து கொண்டார். அவர் படம் பார்க்கவில்லை. ஒரு ஈழத்து படைப்புக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர் கலந்து கொண்டமைக்கான காரணம். அதே போல, தோழர் திருமாவளவன் அவர்களும் படம் பார்க்கவில்லை.

மற்றபடி தமிழகப் படைப்பாளிகள் எவரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

@ உங்கள் அறிக்கையில் சீமானை, ‘விதானையார் இடையில் எதுக்கு கெம்பிறார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே. அதற்கு என்ன அர்த்தம்?

# அது பேச்சு வழக்கில் ஈழத்தில் சொல்லப்படும் பழமொழி. இங்கே ஊர் தலையாரி போல இருப்பவரை அங்கே ‘விதானையார்’ என்போம். கிராமத்தில் நல்லது கெட்டது என்றால் அவரை கலந்துகொள்ள வேண்டும்.

‘கெம்புதல்’ என்றால், ஆக்ரோசமாக வருவதுபோல நடிப்பது. மாடு முட்ட வரும்போது நிற்குமே.. அப்படி ஆக்ரோசமாக நிற்பது.

ஆனால் அப்படியே நிற்கும் அடுத்த அடி நகராது.

அதனால், போலி ஆசாமிகளை, உங்கள் ஊர் பாஷையில், ‘உதார்’ விடுபவர்களை ஈழத்தில், ‘ஏன் கெம்புறான்’ என்று கிண்டல் செய்வோம். போலி மனிதர்கள், நேர்மை இல்லாதவர்களை அப்படிச் சொல்வது அங்கே வழக்கம்.

சீமான் அப்படியான ஆள் என்பதால், அந்த பழமொழியை குறிப்பிட்டேன்.

பேட்டி: டி.வி.சோமு

You might also like