தேவரோடு சிறையில் இருந்தேன்…!

மாயாண்டி பாரதி

மீள்பதிவு:

தேவருடன் சிறையில் இருந்தவரான மாயாண்டி பாரதிக்குத் தற்போது 90 வயது. பொதுவுடைமைச் சிந்தனையாளரான அவரை மதுரையிலுள்ள வீட்டில் சந்தித்தபோது தளர்வில்லாமல் தேவரைக் குறித்துப் பேசினார்.

1940-வது ஆண்டு வேலூரில் வெளிப்புறச்சிறை. அதில் தேவர், நான், அன்னபூரணய்யா, எம்.ஜி.ரங்கா என, அனைவரும் நிறையத் தொண்டர்களுடன் இருந்தோம். நாங்கள் ‘சி’ வகுப்புக் கைதிகள். தேவர் ‘பி’ வகுப்புக் கைதி. யுத்த எதிர்ப்புதான் காரணம்.

சிறைக்குப் போவதற்கு முன்பே 1936-லிருந்தே தேவருடன் எனக்குப் பழக்கமுண்டு. அப்போது மதுரை வடக்கு மாசி வீதியில் தங்கியிருந்தார்.

தொழிற்சங்கங்களில் தலைவராக இருந்தார். இனிய தமிழில் உணர்ச்சி மிகுந்த நிலையில் பேசுவார். வீரமூட்டுகிறபடி இருக்கும்.

“கடை முதலாளியிடம் பேசும்போது கூடத் தோள் துண்டை எடுத்துக் கையில் போட்டுக்கொள்ளாதே. அதற்குத் துண்டில்லாமலேயே போகலாம்” என்று பேசுவார்.

அவருடன் பழக ஆரம்பித்த காலத்தில் எனக்கு 19 வயது இருக்கும். இயக்கக் கூட்டங்களுக்குப் போவோம். காங்கிரசில் அவர் தீவிரமாக இருந்தார்.

சிதம்பரனாரின் சீடராகவும், திலகரின் ஆதரவாளராகவும் இருந்தார். சில்க் ஜிப்பா போட்டு நல்ல தோற்றத்துடன் இருப்பார். நானும் அப்போது காங்கிரசில் இருந்தேன்.

சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகே நாங்கள் பொதுவுடைமைக் கட்சி அனுதாபியாக வெளியே வந்தோம்.

நாட்டைத் துண்டாடக் கூடாது என்பதில் தேவரும் என்னைப் போன்றவர்களும் நினைத்தோம். அப்போது பாகிஸ்தான் பிரிவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

என்னைப் போன்றவர்கள் ஹிந்து மகா சபையில் சேர்ந்தோம். எங்களை ஊக்கப்படுத்துவார் தேவர். வீரசாவர்க்கரை உள்ளிட்டோரை வரவழைத்து ஆவேசமாக ஊர்வலத்தை நடத்தினோம்.

1939 வாக்கிலேயே நேதாஜியுடன் தேவருக்குத் தொடர்பிருந்தது. காங்கிரசிலேயே தேவரின் தீவிரவாதம் இவருக்குப் பிடித்திருந்தது.

அப்போது கேப்டன் லெட்சுமியின் தாயார் அம்மு சுவாமிநாதன் காங்கிரசில் முக்கியத் தலைவராக இருந்தார். பிறகு நேதாஜியால் ஈர்க்கப்பட்டு, ஃபார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்கள்.

அப்போது யுத்தக் காலம். தீவிரமான கண்காணிப்பிருந்தது. ஃபார்வர்டு பிளாக் தலைவரான தேவருக்கு விதித்திருந்த தண்டனைக் காலம் முடிந்தும் பாதுகாப்புக் கைதியாகக் கூடுதலாக அவரைச் சிறையில் வைத்திருந்தார்கள். சிறிது காலம் கழித்தே அவரை விடுதலை பண்ணினார்கள்.

பிறமலைக் கள்ளர் சமூகத்து ஆண்களை காவல் நிலையத்தில் தங்க வைக்கிற குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தேவர் போராட்டத்தை முன்னெடுத்தபோது நாங்கள் எல்லாம் அவர் பின்னாடி போனோம்.

உசிலம்பட்டி, ராமநாதபுரம், கமுதி பக்கமெல்லாம் போராட்டங்கள் நடந்தன. தேவரின் தொடர்ந்த போராட்டம்தான் அந்தச் சட்டத்தை நீக்கக் காரணமாக இருந்தது.

தேவர் அடிப்படையில் ஒழுக்கமான மனிதர்; வெளிப்படையானவர். பேசும்போது ஆவேசம் வெளிப்படும். மிதவாதிகளைக் கடுமையாகச் சாடுவார். 1939 ஜூலை மாதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது – தேவர் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தார்.

மதுரையில் அப்போதிருந்த பலதரப்பட்ட தொழிற்சங்கங்கள் – பித்தளைப் பாத்திரத் தொழிலாளர் சங்கம், குதிரை வண்டித் தொழிலாளர் சங்கம் உள்பட பலவற்றிற்கு தேவரே தலைவராக இருந்தார்.

அங்கங்கே சில சண்டைச் சச்சரவுகள் நடந்திருக்கலாம். அவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்கு, தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பானவர் இல்லை என்பது தெரியும்.

நன்றி: 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘புதிய பார்வை’  –  ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – 100’ சிறப்பிதழ்.

You might also like