சின்னக் குத்தூசி – (1934 – 2011):
சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன.
அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் ‘சின்னக்குத்தூசி’ என்றழைக்கப்பட்டவரான ஆர். தியாகராஜன்.
வெள்ளைக் கதர்ச்சட்டை, வேட்டி, ஏறிய நெற்றி, மரக்கலரில் ஃப்ரேம் போட்ட கண்ணாடி, முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும் புன்னகை.
இப்படித்தான் அவருக்குப் பழக்கமான பலருடைய நினைவுகளில் அவருடைய பிம்பம் பதிவாகியிருக்கும்.
அவருடன் பழகிய அனுபவங்களை விவரிப்பதற்கு முன்னால் அவருடைய வாழ்க்கையைப் பற்றிய சில பதிவுகள்:
திருவாரூரில் ராமநாதன் – கமலம் தம்பதிக்குப் பிறந்த ஒரே பையனான தியாகராஜனின் வீட்டில் ஏழ்மையான சூழல். அப்பா சமையல்காரர். அம்மா பல வீடுகளுக்குப் போய் வேலை செய்கிறவர்.
அம்மாவுக்கு வேலைகளில் உதவுகிற பையனான தியாகராஜனைப் படிக்க வைக்க அவர்களுக்கு வசதியில்லை.
ஆசிரியர்கள் சிலர் சொல்லிப் படிக்க வைத்திருக்கிறார்கள். இருந்தும் சுற்றுப்புறத்தை உற்றுக் கவனிக்கிற பார்வை இயல்பாகவே படிந்திருந்தது.
படிக்கிற பள்ளி, புழங்கும் தெரு, சாப்பிடப்போகும் ஹோட்டல் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியம் அவர் மீது ஒட்டவைக்கப்பட்ட உயர் சாதி அடையாளத்தை உதற வைத்தது.
வேட்டி, பனியனுடன் அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் வளைய வந்த பொதுவுடைமைவாதியான மணலூர் மணியம்மையாரிடம் உதவியாளராகச் சேர்ந்து ஊர் ஊராகப் போய்ப் புத்தகங்களை விற்றால் அவருக்குக் கிடைப்பது நாள் ஒன்றுக்கு எட்டணா. விற்ற புத்தகங்களில் இருந்த விஷயங்கள் அந்த இளம் மூளைக்குள்ளும் இறங்கின.
ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கு அவர் படிக்கப் போனபோது அதற்குச் சிபாரிசு செய்தவர் பெரியார்.
சிறிது காலம் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய அவரிடமிருந்த அரசியல் உணர்வு காமராஜரிடமும், ஈ.வெ.கி. சம்பத்துடனும், கலைஞர் கருணாநிதியுடனும், கவிஞர் கண்ணதாசனுடனும் நெருங்க வைத்தது.
சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சியில் சேர்ந்து அதன் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் துவங்கி பிரசண்ட விகடன், சம்பத் நடத்திய தமிழ்ச் செய்தி, நாத்திகம், அலைஓசை, எதிரொலி என்று பல நாளிதழ்களில் பணியாற்றிய தியாகராஜன் பிறகு முரசொலி, நக்கீரன் உள்ளிட்ட பலவற்றில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.
ஆரூர் அன்புத்தம்பி, கொக்கிரக்குளம் சுல்தான் முகமது, காமராஜநகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கிளியன், சூறாவளி என்று பல பெயர்களில் எழுதியிருக்கிற தியாகராஜன் ”எனது எழுத்துக்களில் ஒருபோதும் நடுநிலைக்கு இடமே இல்லை” என்றும் “பெரியார் கொள்கைகளுக்கு விரோதமாக ஒருபோதும் எழுதியதில்லை” என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
“எங்கே இருந்து எழுதினாலும் திராவிடர் இயக்கக் கொள்கைகளை ஆதரித்தே எழுதுவேன். தி.மு. கழக அனுதாபி என்ற முத்திரையோடுதான் எழுதுவேன். சமூகநீதிக் கண்ணோட்டத்துடனான அடிப்படையிலேயே எழுதுவேன்.
இந்த ஒரு நிரந்தர நிலையை மட்டுமே எனது ஒரே பெருமையாகக் கருதுகிறேன்” என்றிருக்கிறார் சின்னக்குத்தூசி (1999 இல் வெளி வந்த காலச்சுவடு பேட்டியில்) அலுவலகத்தில் வந்து சந்திச்சிருக்கீங்க…
நீங்க திருவல்லிக்கேணியில் இருக்கிற மேன்சனுக்கு வாங்க… விரிவாப் பேசலாம்” என்று 1984 வாக்கில் எதிரொலி அலுவலகத்தில் நண்பர் பிரபஞ்சனுடன் போயிருந்தபோது சொன்னார் தியாகராஜன்.
அன்றைக்கு வெளியான எதிரொலியில் அவர் எழுதியிருந்த கட்டுரையைக் கொடுத்தார்.
மிகத் தெளிவாக, வாசகன் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் சின்னச் சின்ன வாக்கியங்களோடு – புதுக்கவிதையை பிரிக்கிற மாதிரி வாக்கியங்களைப் பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வேகமும் பிடித்திருந்தன.
அவர் பேச்சில் தொனித்த நெருக்கம் அவரைச் சந்திக்கத் தூண்டுதலாக இருந்தது.
அதற்குப் பிறகு வல்லப அக்ரஹாரத்தில் உள்ள அந்த மேன்சனும், புத்தகங்களும், பத்திரிகைக் கட்டுகளும் அடுக்கப்பட்டிருக்கிற அந்த வெப்பம் தகிக்கும் அறையும், சின்னக்குத்தூசி என்கிற அற்புதமான மனிதரும் மனதை நிறைத்திருந்ததை உணர முடிந்தது.
திருவல்லிக்கேணியின் வீட்டுச் சாப்பாட்டை நினைவுபடுத்தும் அதிகக் காரமற்ற மெஸ்கள் அவர் மூலம் அறிமுகமாயின.
சங்கீத சீசனில் மகாராஜபுரம் சந்தானமும், எம்.எஸ்.சுப்புலட்சுமியும் எனக்கு அறிமுகமானார்கள்.
சங்கீதத்தில் அவருக்கு நுட்பமான ரசனை இருந்தது. ராகங்களை இனம் கண்டு ரசனையுடன் சொல்வார்.
பழகிய சில மாதங்களுக்குள் “எப்போ வேணும்னாலும் இந்த ரூமுக்கு நீங்க வரலாம். எதுவும் நினைச்சு தயங்கிக்கிட்டிருக்கக்கூடாது.” அன்புடன் சொன்னார்.
பத்திரிகைத் தொழில் மீது அவருக்கிருந்த மரியாதை அளவற்றது.
“எழுதும்போது தங்களுடைய பண்டிதத்தனத்தைக் காட்டாமல் – நாம் எழுதுற விஷயத்தை எளிமையா அதே சமயம் வீர்யத்தோடு எழுதணும். பெரியார், வ.ரா, பாரதி, கல்கியிலிருந்து பலர் கடைப்பிடிச்ச எளிமையான மொழியிலிருந்து அதை நாம் கண்டுகொள்ள முடியும்.
தமிழில் எழுதப்போறோம்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா – தமிழில் இதுவரை எந்தெந்த விதத்தில் எல்லாம் மொழி கையாளப்பட்டிருக்குன்னு கவனிக்கணும். எழுதுறவங்க எப்பவும் படிச்சிக்கிட்டே இருக்கணும்.
பென்சிலைச் சீவி வைச்சிருக்கிற மாதிரி நம்ம மொழியையும் வைச்சிருக்கணும்” என்று அவர் தன்னுடைய அனுபவத்தின் வழியே தான் கண்டடைந்தவற்றைச் சொல்லிக் கொண்டு போகும்போது – அந்தப் பேச்சில் அன்பும், அக்கறையும் கசிந்து கொண்டிருக்கும்.
அப்போது எனக்கு வயது 24.
சிறுபத்திரிகை சார்ந்த பரிச்சயத்துடன் பத்திரிகையுலகில் நுழைந்ததால் – அவரிடம் பேசும்போது எந்தச் சிறு பத்திரிகையையோ, புதிய நாவலையோ, சிறுகதைத் தொகுப்பையோ பற்றிக் குறிப்பிட்டுவிட்டால் அதை எப்படியாவது வாங்கி வரச் சொல்வார்.
அப்புறம் அதை வாசித்துவிட்டுத் தன் மனதில் பட்டவற்றைச் சொல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் கூடிப்பேசுவோம்.
“எத்தனையோ மனுசங்களைப் பார்க்குறோம். பேசுறோம். இதில் யார் மனம் திறந்து வெளிப்படையாப் பேசுறாங்களோ அவங்களோட நம்ம மனசு சுலபமா நெருக்கமாயிடுது.
அதனாலேயே உங்களைப் பிடிச்சிருக்கு. நீங்க நல்லபடியா இந்தத் தொழிலில் வளரணும்” என்று ஒரு தகப்பனாருக்குரிய பரிவுடன் அந்த வெப்பமான அறையில் பேசும்போது மனதுக்குள் மெழுகு இளகியதைப் போன்றிருக்கும்.
திருவாரூரில் வாழ்ந்த அவருடைய பூர்வீகத்தைப் பற்றிச் சில சமயங்களில் பேசும்போது – வேலை செய்வதையே வாழ்வாகக் கொண்டிருந்த அவருடைய அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது அவரது குரலில் பரவசம் ததும்பும்.
“பிறப்புங்கிறதே ஒரு மனுசனின் திறமையைத் தீர்மானிச்சிடாது. எந்த மனுஷனும் அவனை ஆதரிக்க ஆள் இருந்தா எந்த நிலையையும் தாண்டிச் சாதிக்க முடியும். ஆனா நம்ம சாதியமைப்பு இந்த உண்மையைச் சொல்லாமே வர்ண பேதத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கு.
பூணூல், பிராமணர்கள் வீட்டில் பேசுற மொழி இப்படி எல்லாமே தங்களை மத்தவங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்க உருவானவைதான். இதெல்லாம் உணர்த்தியது தஞ்சாவூரில் அப்போ இருந்த சூழ்நிலைதான்.”
இப்படிப் பேசிக்கொண்டே போகும்போது நமக்குக் கிடைக்கும் மனச்சித்திரங்கள் அவருடைய பால்ய காலத்தை மேகமூட்டமாக உணர்த்தும். திருவாரூரைப் பற்றிப் பேசும்போது அடிக்கடி “ஊருக்குப் போய் அங்கேயே தங்கிவிடணும்போல இருக்கு… ஆனா முடியலை” என்று சொல்வார்.
நான் சென்னையில் இரு பத்திரிகை நிறுவனங்களில் பணி யாற்றிவிட்டு மதுரைக்குக் கிளம்பியபோது வருத்தப்பட்டார்.
முடிந்தவரைக்கும் வேறு அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுக்கப் பிரயத்தனப்பட்டார். முடியவில்லை.
“சரி… கிளம்புங்க… எங்கே இருந்தாலும் என்னைப் பார்க்க வருவீங்கள்லே” – தலையசைத்து விட்டுக் கிளம்பினேன்.
துக்ளக்கில் நான் பணியாற்றத் துவங்கியதும், சென்னைக்கு வந்து அவரைப் பார்க்கப் போனதும் முதலில் துக்ளக்கைப்பற்றிச் சற்றுக் கடுமையாக விமர்சிப்பார்.
சோவின் எழுத்தைப் பற்றிச் சொல்வார். பெரும்பாலும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் அறைக்குள் நுழைந்ததும் “விமர்சனத்தை எல்லாம் கால்மணி நேரத்திற்குள் முடிச்சிக்குங்க.
அதுக்குப் பிறகு அதைப்பற்றிப் பேசக்கூடாது. அதுக்குப் பிறகு நாம் மத்த விஷயங்களைப் பேசலாம்” என்று நான் சொல்லும்போது சிரிப்பார். “உங்ககிட்ட சொன்னா அவர்கிட்டே போகும்னு தானே சொல்றேன்…” என்று கிண்டலாகச் சொல்வார்.
பணியாற்றும் பத்திரிகைகள் எதைச் சார்ந்திருந்தாலும் அதையும் மீறி அங்கு வருகிறவர்கள் பலருக்கிடையில் நட்பு வலுப்பட்டிருந்தது.
கருத்து வேறுபாட்டிற்காக நட்பை இழக்கும் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை. துக்ளக்கில் அப்போது நான் பணியாற்றிய போது முரசொலியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
எனக்குத் திருமணம் நடந்து மதுரையில் வரவேற்பு நடந்த போது அங்கு வந்திருந்தார் குத்தூசி. வெளியூர்களுக்கு அவ்வளவாகச் செல்லாத அவர் வந்திருந்தது ஆச்சர்யப்படுத்தியது.
மேடைக்கு அழைத்த போது தவிர்த்தார். அவரை அந்த அரங்கில் பார்த்த பழ.நெடுமாறன் வியந்துபோய் அவருடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ஓராண்டுக்குள் என்னுடைய வாழ்வில் பெரும்துக்கம் கவிந்த நிலையில் இருந்தபோது மிகுந்த ஆறுதலுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் குத்தூசி.
பல மருத்துமனைகளில் நான் சேர்க்கப்பட்டிருந்த வேளைகளில் அங்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதே மாதிரி அவருடன் பழகியவர்கள் பலர் ஏதாவது சிக்கல் என்றாலும் தொடர்ந்து முன்னின்றிருக்கிறார்.
அவரைச் சில தடவைகளே பார்த்தவருக்கு ஒரு சிக்கல் என்றால்கூட தன்னால் இயன்றவரை உதவுவது அவருடைய இயல்பு. அவருடைய அறைக்கு வேலை தேடி வருகிறவர்களுக்காக அவர் அறைக்கு வருகிற பலரிடமும் சொல்லி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்.
சென்னையில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய நலனை மட்டும் முன்னிறுத்தி இயங்கிக் கொண்டிருக்கையில் குத்தூசி பிறருக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.
மேன்சனில் பக்கத்து அறைகளில் தங்கியிருக்கிற இளைஞர்கள் துவங்கிப் பலரிடம் – அவர் பேசும் விதம் பாந்தமாக இருக்கும்.
சிறு பையன்களைக்கூட “வாங்க… போங்க…” என்று மரியாதையுடன்தான் அழைத்துப் பேசுவார். அதுகுறித்து நேரில் ஒருமுறை கேட்டபோது “இது பெரியாரிடம் நான் படித்த விஷயம். பெரியார் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில்கூடத் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் மரியாதையுடன் அழைத்து எழுந்து நிற்கவும் முயற்சிப்பார்.
யார்கிட்டேயும் ஒருமை பாராட்ட தயக்கமா இருக்கு…” என்றார் குத்தூசி. சிலரைக் கண்டால் அவர் முகத்தில் பரவும் சந்தோசத்தைப் பார்க்கவேஅலாதியாக இருக்கும். கர்நாடக இசையை மெதுவாக முணு முணுப்பார். வாஞ்சையுடன் ‘ராசா’ என்பார். நான் எழுதிய “தமிழர்கள் மறந்ததும், மறக்காததும்” நூலுக்கு அதே பிரிய தோடு முன்னுரை எழுதிக் கொடுத்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதைப் பற்றி எப்போது யார் கேட்டாலும் பலத்த பீடிகை போட்டு விலா வாரியாகக் கிண்டல் பண்ணுவார்.
காலச்சுவடு பத்திரிகையை சுந்தர ராமசாமி துவங்கியிருந்த நேரத்தில் சென்னைக்கு வந்திருந்தார். குத்தூசியைப் பார்க்க ஆர்வப்பட்டபோது குத்தூசியிடம் சொன்னேன் அழைத்துவரச் சொன்னார்.
குத்தூசி மேன்சனுக்கு சுந்தர ராமசாமியுடன் போனேன். புத்தகங்கள் பெரும்பாலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் – சின்ன இடுக்கிற்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அவர் இருப்பது குறித்த வியப்புடன் சுரா பேச – இரண்டரை மணிநேரம் வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பத்திரிகை, அரசியல், சமூகம் என்று பல தளங்களில் விரிந்து, கால அவகாசம் இல்லாததால் பேச்சு நின்று, எங்களை அருகில் உள்ள தஞ்சை பட்சணக் கடைக்கு அழைத்துச் சென்றார் குத்தூசி. அங்கே சாப்பிட்ட பிறகு அனுப்பி வைத்த அந்த அனுபவத்திற்குப் பிறகு இருவரைப் பற்றியும் இருவருக்கு இருந்த மதிப்பு மேலும் உயர்ந்திருந்தது.
தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு என்னிடம் ”குத்தூசி அவர்களிடம் ஒரு விரிவான அவருடைய வாழ்க்கையின் முழுமையைச் சொல்லுகிற பேட்டியை நீங்கள் எடுத்துத்தாருங்கள். நான் அதைத் தனிப் புத்தகமாக வெளியிட விருப்பமாயிருக்கிறேன்” என்று சொன்னதோடு குத்தூசிக்கு கடிதமும் எழுதினார் சுந்தர ராமசாமி.
குத்தூசியிடம் இதுபற்றி பேசினாலே கிண்டல் பண்ணி அதுகுறித்து விசாரிப்பதையே தவிர்த்துவிடுவார். பலமுறை முயன்றும் அதற்கு அவர் சம்மதிக்கவே இல்லை. அவற்றை எழுத்தின் மூலம் பதிவாவதை அவர் விரும்பவும் இல்லை.
நாகர்கோவிலுக்கு எப்படியாவது குத்தூசியை அழைத்துக்கொண்டு வரச்சொல்லி நான்கைந்து முறை சுந்தர ராமசாமி முயற்சித்து அதுவும் நிறைவேறவே இல்லை.
ஒருவழியாக, மதுரையில் நான் நடத்தி வந்த செய்தி நிறுவனத்தை மூடிவிட்டு சென்னைக்கு மறுபடியும் வரப் போவதாகச் சொன்னதும் அதை முகப் பூரிப்புடன் வரவேற்றார் குத்தூசி.
குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பொறுப்பாசிரியராக முதலில் பணியாற்றியபோது அதன் முதல் இதழில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலைப் பற்றிய விரிவான வரலாற்றுத் தொடரை வாராவாரம் எழுதிக் கொண்டிருந்தார் குத்தூசி.
“நான் எழுதிக் கொடுக்கிறேன். அதை எப்படி போடுறது என்பது உங்க இஷ்டம்” என்றார், அவருடைய பழுத்த அனுபவம் குறுக்கிடாமல்.
பழ.நெடுமாறனும், வைகோவும் பொடாவினால் சிறைப் பட்டிருந்தபோது – மாதாமாதம் வழக்கு விசாரணைத்காக அழைத்து வரப்படும்போது அங்கு செல்வது வழக்கம். வைகோ வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது குத்தூசி, பாலகிருஷ்ணனுடன் நானும் போயிருந்தேன்.
மிகையான எந்த வார்த்தைகளும் இல்லாமல் தன்னுடைய வருகையின் மூலமே ஆறுதலை அளிக்க குத்தூசி முற்படுவதைப் போலிருந்தது.
சென்னை மாநகர வாழ்க்கை அடுத்தடுத்து எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வித்தியாசமான வியாதிகளை வழங்கியோ, சில விபத்துகளைச் சந்தித்தோ வீட்டில் படுக்கையில் இருந்தால் ஆட்டோவில் வந்து விசாரிக்கிற குரல் குத்தூசியுடையதாகவே இருக்கும்.
திருப்பங்களும், சரிவுகளும் நிறைந்த பத்திரிகைத் துறையில் கனத்த அனுபவங்களைச் சந்திக்கும்போதெல்லாம் மனந்திறந்து பேசுகிற இடம் அவருடைய அறையாகத்தானிருக்கும். மெல்லிய இறகால் வருடுகிற உணர்வுடன் அன்றைய பிரச்சினைக்கான தீர்வை மென்மையாகச் சொல்வார்.
இம்மாதிரிப் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அவர் உச்சாடனமாக விரலை அசைத்தபடி சொல்வார் :
“பிரச்சினை வரத்தான் செய்யும். எல்லாத்தையும் உங்களால் சமாளிக்க முடியும். சமாளிங்க. உங்க அடையாளத்தை எதுக்காகவும் இழந்திடாதீங்க… எழுத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்திடாதீங்க… என்ன ராசா?”
சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி அறையில் அவர் இருந்தபோது திடீரென்று இரத்தமாக வாந்தியெடுத்தார். மருத்துவ சிகிச்சை நடந்தபோதும் அவருடைய மனதில் மரண பயம் விழுந்துவிட்டது. அப்போது பார்த்தபோது அந்தத் தனிமையான நிலை அவரைக் கஷ்டப்படுத்துவதைப் போலிருந்தது.
“எனக்கு எப்பவும் எதுவும் ஆகலாம். அப்படி ஏதாவது நடந்தா கடைசி சமயத்தில் சில நண்பர்கள்கூட இருக்கணும்னு நினைக்கிறேன். அப்படி நடந்தா நீங்களும் கிட்டே இருப்பீங்களா ராசா…”அவர் கேட்டதும் கண் நிறைந்துபோனது.
முரசொலியில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது சரி’ என்று தலையங்கத்தை எழுதியதும் சின்னக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முரசொலியிலிருந்து விலகி வந்துவிட்டார்.
விலகி வந்துவிட்டாலும் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க. பற்றியோ எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்தார். யாரும் அப்போது அதுகுறித்துக் கிளறிக் கேட்டாலும் அந்தப் பேச்சு தொடர்வதை அவர் விரும்பியதில்லை.
“அது எனக்கும் அவருக்கும் உள்ள விஷயம். இதை வைச்சு அவருக்கு எதிரா என்கிட்டே இருந்து ஒரு வார்த்தை வாங்கலாம்னு வந்தா அதுக்கு நான் தயாரா இருக்கமாட்டேன்” என்று சொன்னார்.
அந்தக் காலகட்டத்தில் நக்கீரன் இதழில் எழுத ஆரம்பித்தார். கோபால் மீது அவருக்கு அளவுகடந்த மதிப்பிருந்தது.
கோபால் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அவரைப் பார்க்க வருவது வழக்கமானது. கோபால் குத்தூசி மீது காட்டிய அன்பும், அவருடைய உடல்நலனில் காட்டிய அக்கறையும் அவர்மீது பெருமதிப்பை உருவாக்கியிருந்தது. “அவர் என் மேலே வைச்சிருக்கிற அன்புக்காகத்தான் நான் நக்கீரனில் எழுதுறேன்.”
கோபால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சமயங்களில் குத்தூசி மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார். அவர் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் நாட்களில் நீதிமன்றத்திற்குத் தவறாமல் போய் வருவார்.
அவருடைய விடுதலையை வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் தன்னுடைய உடல்நிலையை மீறி கலந்துகொண்டிருக்கிறார் குத்தூசி.
பல்வேறு மருத்துவங்களைச் செய்து குத்தூசியின் உடல் நிலையைச் சீராக்க என்ன செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் கோபால்.
திருவல்லிக் கேணியில் தனியாக ஒரு அறை எடுத்துக் கொடுத்து, அவரைக் கவனித்துக்கொள்ள அக்கறையுள்ள உதவியாளரை நியமித்தும் அவருடைய உடல்நிலை சரியாகாத நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பில்ராத் மருத்துவமனையில் உள்ள ஏழாவது மாடியில் கடைசியாகத் தனித்திருக்கிற அறையை அவருக்கு ஒதுக்கிச் சிகிச்சை நடந்தது. கோபாலின் அக்கறைதான் அவருடைய வாழ்நாளை நீட்டித் தந்தது.
கையில் தொடர்ந்து டிரிப்ஸ் ஏற்றப்பட்டு புண்ணான நிலையிலும் தொடர்ந்து முரசொலிக்கு அரசியல் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார்.
அதுபற்றி மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர் ஒருவர் கேட்டபோது “எழுதறதுனாலேதான் நான் உயிரோட இருக்கேன்” என்றார். அதன்பிறகு தனித் தொலைபேசி இணைப்பில் – கட்டுரையை டிக்டேட் பண்ண ஆரம்பித்தார்.
உடம்பு தளர்ந்து எலும்புகள் எல்லாம் வெளித்தெரிய, மெலிந்த உருவமாகிப் போனாலும் – எழுத்தின் மீதிருந்த தொடர்பை அவரால் எதன் பேராலும் துண்டித்துக்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை தொலைபேசியில் ‘டிக்டேட் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் மருத்துவமனைக்கு நான் போனபோது தன்னுடைய வேலையைப் பற்றிச் சொல்லிவிட்டு “சாயங்காலம் வாங்க… அவசியம் வரணும்’ என்றார் முகத்தில் புன்னகையை வர வழைக்கிற முயற்சியுடன்.
இதற்கிடையில் கையில் ஒரு லென்சை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார். அவருடைய மேன்சன் அறையைப் போல மருத்துவமனையிலும் அவருக்குப் பக்கத்தில் சிறுபிள்ளைகளைப் போல இடம்பிடித்திருந்தன பத்திரிகைகளும், நூல்களும்.
மருத்துவர்கள் இப்படி, வித்தியாசமான ஒருவரை மருத்துவ வற்புறுத்தல்கள் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தார்கள்.
கோபாலால் நியமிக்கப்பட்ட பார்த்திபன் என்கிற அந்த இளைஞர், குத்தூசியைக் கவனித்துக் கொண்டவிதம் – எந்த மகனும் அந்த அளவுக்குக் கவனித்துக் கொண்டிராத அளவுக்குப் பரிவுடன் இருந்தது. முதலில் எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் பிறகு எழுந்து உட்காரவே சிரமப் பட்டார்.
மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாலை நேரத்தில் மருத்துவமனைக்குப் போயிருந்தேன். உடலைப் பற்றிய கேள்விகளை யாரும் கேட்பதை விரும்பாத மனநிலையில் அவர் இருந்ததால் – அவராகவே உடலைப் பற்றிச் சொன்னால் மட்டுமே கேட்பது என்கிற மனநிலைக்கு அவரைப் பார்க்க வருகிற நண்பர்கள் வந்திருந்தார்கள்.
“என்ன எழுதுனீங்க… என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?” உதட்டில் வெடிப்புகள் இருந்த நிலையில் அவரது குரல் உலர்ந்திருந்தது. முகத்தில் சில நாள் தாடி முளைத்திருந்தது.
அந்த நிலையிலும் குறிப்பிட்ட சிற்றிதழைக் கொண்டுவரச் சொன்னார். அரசியல் நிலைமையைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.
கஞ்சி வந்தது. தலைசாய்த்துப் படுத்திருந்தவர் எழுந்து உட்கார முயன்றார். முடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கியது. உதவிக்கு யார் வருவதையும் தடுத்து அவர் அமர்ந்தபோது குரல் கேவியது.
முகம் வதங்கியிருந்தது. வாயைச் சுழித்தபடி அவர் அழுவதைப் பார்க்கக் கஷ்டமாயிருந்தது.
“எழுந்திருச்சி உட்காரப்பெல்லாம் இப்படித்தான் அழுகையா வருது” – சொல்லிவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்து கஞ்சியைக் குடித்தார். ஒரு பழத்தை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.
திரும்பிப் படுக்கையில் படுத்த போதும் உடல் நடுங்கி மெல்லிய கேவல் எழுந்து அடங்கியது.
அவரைத் தொட்டுச் சொல்லிவிட்டு கிளம்பியதும் தலையசைத்தார்.
சில நாட்களில் நெருங்கிய நண்பரின் தாயார் மதுரையில் காலமானதால் மதுரைக்குப் போய்ச் சேர்ந்த பிறகு காலை ஒன்பதரை மணிக்கு குத்தூசி காலமான செய்தி வந்தபோது மனம் கனத்தது.
மதுரையில் துக்கம் விசாரித்துவிட்டு அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விமானத்தைப் பிடிக்க முற்பட்டபோது டிக்கெட்டுகள் இல்லை.
அதற்குள் மாலை குறிப்பிட்ட நேரத்தில் அவரது உடல் எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அவருடைய இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை வெறுமையாக உணர வைத்தது.
தொலைக்காட்சி சேனல்களில் அவருடைய இறுதித் தோற்றம் குளிர்பதனப் பெட்டிக்குள் உயிர் வடிந்தபடி தெரிந்து கொண்டிருந்தது.
எழுபத்தேழு வயது வரைக்கும் உடல் ஒத்துழைக்கா விட்டாலும், தான் நம்பிய ஒன்றிற்காக இறுதிவரை வலியோடு உழைக்கத் தயாராக இருந்த அந்த அபூர்வமான உழைப்பு கடைசி மூச்சுடன் நின்றிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு உடல் நலிவு தாங்காமல் அவர் கேவி அழுத அந்தக் குரல் ஞாபகத்தில் வந்துபோனது.
உடம்பெல்லாம் ஊடுருவிய அந்த வலியிலிருந்து துண்டித்து அவருக்கு விடுதலை அளித்திருக்கிறது காலம்.
– பத்திரிகையாளர் மணா எழுதி, பரிதி பதிப்பகம் வெளியிட்ட ‘மிருதுவாய் சில அஞ்சலிகள்’ நூலிலிருந்து…