சில திரைப்படங்களின் டீசரோ, ட்ரெய்லரோ ஈர்க்கும்படியாக இருக்காது. பட விளம்பரங்களோ, அது குறித்த தகவல்களோ கூட ரசிகர்களைச் சென்றடையாமல் போயிருக்கும். முதன்மையாக நடித்தவர்கள் தவிர்த்து முற்றிலும் புதுமுகங்கள் இடம்பெற்ற படமாக அது இருக்கும்.
அதனால், கிண்டலடிக்கும் அல்லது குறை சொல்லும் நோக்கில் கூட அப்படத்தைக் கவனிக்க வேண்டுமென்று தோன்றாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட படம் பின்னாளில் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? ‘எப்படி இதை மிஸ் பண்ணோம்’ என்று புலம்புவது மட்டுமல்லாமல் தெரிந்தவர்கள் அனைவரிடமும் அதனைப் பகிர்ந்து கொள்வோம்.
கிட்டத்தட்ட அப்படியொரு சூழலை உருவாக்கவல்லதாக உள்ளது தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘தீபாவளி போனஸ்’. விக்ராந்த், ரித்விகா நடித்துள்ள இப்படத்தை ஜெயபால் இயக்கியிருக்கிறார். மரிய ஜெரால்டு இதற்கு இசையமைத்திருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகும் பெரிய படங்களுக்கு மத்தியில் ‘தீபாவளி போனஸ்’ஸுக்கான இடம் ஏது என்று படக்குழு நினைத்திருக்கலாம். அதனால், ஒருவாரத்திற்கு முன்னதாக இதனை வெளியிட்டிருக்கலாம். உண்மையைச் சொன்னால், இது தீபாவளி வெளியீடாக வந்திருக்க வேண்டியது.
அப்படிக் குறிப்பிடும் அளவுக்கு ‘தீபாவளி போனஸ்’ஸில் அப்படி என்னதான் இருக்கிறது?
கொண்டாட்டத்தை நோக்கி..!
‘நலிந்தவனுக்கு ஏது நாளும் கிழமையும்’ என்ற சொலவடை உயிர்ப்புடன் இருந்தாலும், விழாக் காலக் கொண்டாட்டத்திலாவது நன்றாக உடுத்தி, உண்டு, உறவுகளோடு மகிழ்ச்சியாக இருப்போமே என்றெண்ணுபவர்களே இப்பூமியில் அதிகம். அவர்களில் பெரும்பாலானோர் மிகச்சாதாரண வாழ்க்கையைக் கொண்டிருப்பார்கள்.
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தையொட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழும் ரவியும் (விக்ராந்த்) கீதாவும் (ரித்விகா) அப்படிப்பட்ட மனிதர்கள் தான். இத்தம்பதியரின் மகன் சந்திரபோஸ் (ஹரிஷ்).
தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக, இக்கதை தொடங்குகிறது.
தீபாவளி போனஸாக இரண்டாயிரம் ரூபாய் வரும் என்று ரவி வேலை செய்யும் கூரியர் நிறுவனத்தில் சொல்கின்றனர். மேலாளர் மாலிக் அதை உறுதிபடச் சொல்கிறார். சில ஊழியர்கள் அதில் நம்பிக்கையில்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவதென்று தீர்மானிக்கின்றனர்.
கீதா ஒரு வீட்டில் வீட்டு வேலைகள் செய்கிறார். அப்போது, வெளியே ஹெல்மெட் விற்கும் சத்தம் கேட்கிறது. அதில் ரவிக்கு என்று ஒரு ஹெல்மெட்டை பார்த்து வைக்கிறார். அது ‘ஆயிரம் ரூபாய்’ என்று விற்பவர் சொல்ல, தான் பணி செய்யும் வீட்டு உரிமையாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி பணத்தைப் பெற்று வருகிறார். அதற்குள், அந்த விற்பனையாளர் வேறிடம் சென்று விடுகிறார்.
வகுப்பறையில் தன்னோடு படிக்கும் மாணவர்கள், மாணவிகளில் பெரும்பாலானோர் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியதை அறிகிறார். அது பற்றிக் கேட்கும் ஆசிரியையிடம், ‘எங்கப்பா போலீஸ் ட்ரெஸ் வாங்கிக் கொடுக்கறதா சொல்லியிருக்காரு’ என்கிறார்.
அன்றிரவு தீபாவளி போனஸ் கிடைக்காத விரக்தியில் சோகத்துடன் வீடு திரும்புகிறார் ரவி. அவரிடம், தான் வாங்கிய ஆயிரம் ரூபாயைக் காண்பிக்கிறார் கீதா.
பின்னர் மூவரும் மதுரைக்குச் செல்கின்றனர். சந்திரபோஸ் கேட்ட போலீஸ் உடை உட்படச் சில பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தீபாவளிக்கு முந்தைய நாள் காலை. வீட்டில் இருந்து கிளம்பும்போது ரவி முகத்தில் ‘டென்ஷன்’ அப்பிக் கொள்கிறது.
அதற்கேற்றாற் போல, அலுவலக வாசலில் ஊழியர்கள் சிலர் ‘போனஸ் வேண்டும்’ என்று கத்திக் கொண்டிருக்கின்றனர். அங்கு சில போலீஸ்காரர்களும் இருக்கின்றனர். அப்போது, சிறிதாகக் களேபரம் ஏற்பட அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர் போலீசார். அதிலிருந்து, ரவி உட்பட ஒரு சிலர் மட்டும் தப்புகின்றனர்.
அன்று காலையில், ‘இன்று ஒருநாள் மட்டும் வியாபாரத்திற்கு வா’ என்று தனது உறவினர் ஒருவர் சொன்னது ரவியின் நினைவுக்கு வருகிறது. அவரிடம் மொபைலில் பேசுகிறார். அன்று மாலையில், பஜாரில் சட்டை விற்பனையில் ஈடுபடுகிறார். நன்றாக வியாபாரம் ஆவதால், அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அடுத்தநாள் காலையில் விடியல் அற்புதமாக இருக்குமென்ற நம்பிக்கை ஒளி விடுகிறது.
திடீரென்று அது உடைபடுகிறது. அங்கு வரும் சிலர், ரவியை அடித்து உதைக்கின்றனர். அதைக் கண்டு ஓடி வருகின்றனர் போலீசார்.
அவர்களது காதில் அந்த நபர்கள் ஏதோ சொல்ல, ரவியைக் கைது செய்கின்றனர் போலீசார். அது தெரியாமல், வீடு திரும்புகிறார் கீதா. பக்கத்துவீட்டில் இருக்கும் சந்திரபோஸும் வந்து விடுகிறார். இருவரும் ரவியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல, இருவரது பதற்றமும் எகிறுகிறது.
ரவி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரியுமா? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தீபாவளி கொண்டாட்டத்தை நோக்கிப் பயணிக்கும் சில சாதாரண மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தைக் காட்டுகிறது இப்படம். டைட்டில் தொடங்கி பல விஷயங்கள் இதில் பொருத்தமாகவும் வலுவாகவும் அமைந்திருக்கின்றன.
நேர்த்தியானதொரு காட்சியனுபவத்தைத் தருகிற படமாக இது உள்ளது. அது மட்டுமல்லாமல், சில ‘போனஸ்’ ஆச்சர்யங்களையும் தருகிறது.
சிறப்பான உள்ளடக்கம்!
நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான வாழ்வை வாழும் ஒரு மனிதராக, இதில் விக்ராந்த் தோன்றியிருக்கிறார். ‘ஜிம் வொர்க்அவுட்’ உடற்கட்டை மீறிச் சாதாரணமானவராகத் திரையில் தெரிய மெனக்கெட்டிருக்கிறார். அவரது நடிப்பும் உடல்மொழியும் அதனைச் சாதித்திருக்கிறது.
ரித்விகா நன்றாக நடிப்பார் என்பது ‘மெட்ராஸ்’ காலம் தொட்டே ரசிகர்களுக்குத் தெரியும். இப்படத்தில் கணவன் மனைவி குழந்தை மூவரும் விஜய் படம் பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. அந்தக் காட்சியின்போதும், அதன்பிறகும் கணவராக நடித்த விக்ராந்தைக் காதலுடன் பார்க்கும் ஷாட்டில் பின்னியிருக்கிறார் ரித்விகா. நிஜ வாழ்வில் அப்படியொரு பெண்மணியை நேரில் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கிறார். வாவ்!
சந்திரபோஸ் ஆக நடித்துள்ள ஹரீஷ், குழந்தை நட்சத்திரத்திற்கே உரிய ப்ளஸ், மைனஸ்களோடு திரையில் தோன்றியிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஷு விற்பவர், கொரியர் அலுவலக மேலாளர் உட்பட சுமார் அரை டஜன் முக்கியப் பாத்திரங்கள் திரையில் வந்து போயிருக்கின்றன. அவர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் பெரும்பலம் மரிய ஜெரால்டு தந்திருக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. பாடல்கள் மெலிதாக மனதோட ஒட்டுகின்றன என்றால், காட்சிகளின் இருக்கும் அழுத்தத்தை அடிக்கோடிடும் வகையில் பின்னணி இசை இருக்கிறது.
கௌதம் சேதுராமனின் ஒளிப்பதிவு, பஜார் காட்சிகளில் பளிச்சென்று இருக்கிறது. மேலும், டிஐ நுட்பத்துடன் இணைந்து காட்சிகளின் தன்மைக்கேற்ற உணர்வை நம்முள் உண்டாக்குகிறது.
ஆனால், ட்ரெய்லரில் அந்த உணர்வு ஏன் எழவில்லை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். வெறுமனே ரித்விகாவின் வாய்ஸ் ஓவரில் ‘சும்மா ஒரு ட்ரெய்லர் கட் பண்ணுவோம்’ என்று அதனை வெளியிட்டார்களா எனத் தெரியவில்லை.
பார்த்திவ் முருகனின் படத்தொகுப்பானது, விடுபட்டுப் போன காட்சிகளை நினைவூட்டாமல் நம்மை கதையோடு பிணைக்கிறது.
அருண் கலை வடிவமைப்பு, பிரேம்குமாரின் ஆடியோகிராபி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படப் பல அம்சங்கள் இப்படத்தோடு நம்மை ஒன்றச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.
இயக்குனர் ஜெயபால், இதன் கதை திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார். ‘பஞ்ச்’ வசனங்கள், தத்துவார்த்தப் பேச்சுகள் இல்லாமல் மிக இயல்பான உரைநடையைப் பாத்திரங்கள் வெளிப்படுத்துகிற வசனங்களை அமைத்திருக்கிறார்.
எத்தனையோ மனிதர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அடுத்த தலைமுறையின் கனவுகளை நனவாக்கப் பாடுபடுகின்றனர். அப்படியொரு பெற்றோரை இதில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
விக்ரமன் படங்களில் வருவது போன்று இதில் பல பாத்திரங்கள் ‘நல்லவர்களாகவே’ காட்டப்பட்டிருக்கின்றனர். அதேநேரத்தில், ‘நெஞ்சை நக்கிட்டாங்கப்பா’ என்று கமெண்ட் எழுகிற வகையில் அவை வார்க்கப்படாதது ஆறுதல்.
இரண்டுக்குமான எல்லைக்கோட்டை நன்குணர்ந்திருக்கிறார் இயக்குனர்.
மகன் கேட்ட ஷுவை 300 ரூபாய்க்கு வாங்க முடியாமல் விக்ராந்த் 150 ரூபாய் கொடுக்க, அந்த வியாபாரி வேறு வழியில்லாமல் ‘என்னோட தீபாவளி கிஃப்டா இருக்கட்டும்’ என்று அதனைத் தருவார்.
‘அது எப்படி’ என்று ரித்விகா கேட்க, ‘அவரும் தன்னோட குழந்தைகளுக்கு அப்பா தானே’ என்பார் விக்ராந்த். மிகச்சாதாரணமாக வெளிப்படும் அந்த வசனம் நம் கண்களில் நீரை ஊற்றெடுக்க வைக்கும். இப்படிச் சில இடங்கள் இதிலுண்டு.
அதேநேரத்தில், காவல் நிலையத்தில் விக்ராந்த் வசனம் பேசுவதாக காட்சியொன்று இதில் உண்டு. அது, அந்த உத்தியை அதீதமானதாக மாற்றியிருக்கும்.
இப்படத்தில் குறைகளை நிச்சயம் கண்டறிய முடியும். ஆனால், தியேட்டரில் இருக்கையில் அந்த நினைப்பையே அண்டவிடாமல் தடுத்து விடுகிறது படக்குழு. அந்த உழைப்புதான் இந்த படத்தின் யுஎஸ்பி.
இப்படத்தில் விக்ராந்த், ரித்விகா தவிர்த்து பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்பது இன்னொரு சிறப்பு. பலருக்கு இது முதல் படம் என்பது நிச்சயம் திரையுலக ஜாம்பவான்களுக்கே ஆச்சர்யத்தைத் தரக்கூடும்.
எல்லோரையும் போலத் தீபாவளி கொண்டாட முடியாத வகையில் சில தடைகள். அவற்றைக் கடந்து, நாயகனின் குடும்பம் அதனைக் கொண்டாடியதா இல்லையா என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
ஆனால், முடிவடைகிற இடத்தில் கூட ஒரு சோகத்தையும் சுகத்தையும் கலந்து வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த முடிவு, இன்னொரு தொடக்கம் என்று கூடச் சொல்லலாம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையின்போது நம்பிக்கை ஒளி பிறப்பதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜெயபால்.
‘சிறிய பட்ஜெட் படங்களில் குறிப்பிட்டவை மிகத்தரமானதாக இருக்கின்றன’ என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறது ‘தீபாவளி போனஸ்’.
தீபாவளியன்று அமரன், பிரதர், ப்ளடி பெக்கர், லக்கி பாஸ்கர் உட்படச் சில படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை உருவாக்கும் பெரிய அலைகளுக்கு நடுவே ‘தீபாவளி போனஸ்’ஸுக்கும் ஒரு இடம் கிடைக்க வேண்டும். அதற்கேற்ற சிறப்பான உள்ளடக்கம் படத்தில் இருக்கிறது.
படக்குழுவினருக்கு ‘தீபாவளி போனஸ்’ கிடைக்கும் வகையில், இன்னும் ஓரிரு வாரங்களாவது இப்படம் தியேட்டர்களில் இடம்பெற வேண்டும்; ரசிகர்களும் திரைத்துறையினரும் உரிய ஆதரவைத் தர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்