கோலியாத் எனும் அசுரனை டேவிட் எனும் மிகச்சாதாரண மனிதனொருவன் தோற்கடித்துக் கொன்ற கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், வலியோனை எளியோன் வெற்றி கொண்டதாகச் சொல்லப்படுவது. இதே கதையில் நாயகன், வில்லன் தரப்பை மாற்றியமைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை கொஞ்சம் வித்தியாசமான கதைகளைத் தரும். அந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது, மலையாளத்தில் வெளியாகியிருக்கிற ‘பணி’ திரைப்படம்.
ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கியிருப்பதோடு, இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அபிநயா, பிரசாந்த் அலெக்சாண்டர், சீமா, சுதீப் சங்கர், பாபி குரியன், சாந்தினி ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு விஜய், சாம்.சி.எஸ். இதற்கு இசை அமைத்திருக்கின்றனர்.
கேங்ஸ்டர், க்ரைம், டிராமா, த்ரில்லர் என்று பல வகைமைகளில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சரி, எப்படியிருக்கிறது ‘பணி’ தரும் திரையனுபவம்!?
முதல் குற்றம்!
திருச்சூரில் உள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் டான் செபாஸ்டியன் (சாகர் சூர்யா), சிஜு (ஜுனைஸ்) இருவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரில் டான் மட்டுமே அப்பகுதியிலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்தவர். அருகிலுள்ள கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிஜு. அவரது குடும்ப விவரங்கள் அங்கு வேலை பார்க்கும் எவருக்கும் தெரியாது.
ஒருநாள் சிஜுவும் டானும் வெளியூர் செல்வதாக ஷெட் உரிமையாளரிடம் சொல்லிவிட்டு, நகரின் மையப்பகுதிக்கு வருகின்றனர். ஒரு நடுத்தர வயது நபரைக் கொலை செய்கின்றனர்.
அருகில் ஒரு கடை திறப்பு விழா நடப்பதால், அங்கு எழுப்பப்படும் மேளச்சத்தத்தில் எவரும் அதனைக் கவனிக்கவில்லை. பயன்படுத்தப்படாத ஏடிஎம் ஒன்றில் சடலத்தை விட்டுவிட்டு, தடயங்கள் ஏதும் விடுபட்டிருக்கின்றனவா என்று இருவரும் சரிபார்க்கின்றனர்.
அப்போது, டான் செபாஸ்டியனின் கேர்ள் ப்ரெண்ட் அங்கு வருகிறார். தன்னோடு வருமாறு கூறுகிறார். அவரிடம் டான் கோபப்படுகிறார். அதனால், அப்பெண் கோபித்துக்கொண்டு செல்கிறார்.
சிறிதுநேரம் கழித்து, ஏடிஎம்மில் இருந்து ரத்தம் வெளியே வருவதாக டான், சிஜு இருவரும் சத்தமிடுகின்றனர். பெருங்கூட்டம் கூடுகிறது. விஷயம் போலீசாருக்கு தெரிய வருகிறது.
அதேநேரத்தில், திருச்சூரில் ரவுடிகளின் கொட்டம் முடக்கப்பட வேண்டுமென்று காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் ஆணையர் ரஞ்சித் வேலாயுதன். செல்வாக்குடன் திகழும் ரவுடி டேவி (பாபி குரியன்), மற்றும் அவருக்குப் பின்புலமாக இருக்கும் ‘மங்கலத்’ குடும்பத்தைச் சேர்ந்த கிரி (ஜோஜு ஜார்ஜ்) உட்பட அக்கூட்டத்தினர் அனைவரையும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்று உத்தரவிடுகிறர்.
கொலை விவகாரம் தெரிய வந்ததும், ரஞ்சித்துடன் மேலும் சில காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். அவர்களில் பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கல்யாணியும் (சாந்தினி ஸ்ரீதரன்) ஒருவர்.
கொலை குறித்து சாட்சியம் அளிக்க முன்வரும் டான், சிஜுவைக் காண்கிறார் ரஞ்சித். அவர் மனதுக்குள் ஏதோ ஒரு எண்ணம் ஓடினாலும், அவர் அதனை வெளிக்காட்டவில்லை.
சில மணி நேரங்கள் கழித்து, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கிரியின் மனைவி கௌரியிடம் (அபிநயா) பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார் டான். அதனை அறிந்ததும், டானையும் சிஜுவையும் பொழந்து கட்டுகிறார் கிரி. குற்றுயிரும் குலையுயிருமாக அங்கிருந்து இருவரும் வெளியேறுகின்றனர். கிரி தந்த அடி, அவர்கள் மனதில் தீ திரளக் காரணமாகிறது.
அடுத்த நாள், கிரியின் வீட்டைத் தீவிரமாக இருவரும் நோட்டமிடுகின்றனர். ஆள் அரவமற்று இருப்பது தெரிந்ததும், வீட்டுக்குள் நுழைகின்றனர். வேலைக்காரியை ஒரு அறையில் அடைத்துவிட்டு, கௌரியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குகின்றனர்.
விஷயம் அறிந்ததும், கிரியின் வீட்டின் முன்னர் ஆட்கள் திரள்கின்றனர். ரவுடிகளும் போலீசாரும் நுழையத் தயங்கும் ஒரு இடத்திற்குள் மிகச்சாதாரணமாக இரண்டு இளைஞர்கள் நுழைந்தது எப்படி? அதுவும் இப்படியொரு காரியத்தைச் செய்தது எப்படி?
அவ்வட்டாரத்திலுள்ள கிரியின் அடியாட்கள் அனைவரும் சிஜு, டான் செபாஸ்டியனைத் தேடுகின்றனர். அவர்கள் சென்ற இடங்களை அறிந்துகொள்ள முடிகிறதே தவிர, அவர்களை நெருங்க முடியவில்லை. அதனால், டான் குடும்பத்தினரைத் தன் கைப்பிடிக்குள் கொண்டுவருகிறார் பாபி குரியன்.
அதனைத் தொடர்ந்து, அவரை டானும் சிஜுவும் சேர்ந்து கொலை செய்கின்றனர். அது, இன்னும் கிரியைச் சோர்வடையச் செய்கிறது.
திருச்சூரை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட்டான நிலையில் டான், சிஜு இருவரும் இருக்கின்றனர். ஆக்டோபஸ் போன்று நீண்டிருக்கும் தனது அதிகாரக் கரங்களுக்கு அடங்காமல் ‘விளையாட்டு’ காட்டும் இரண்டு இளைஞர்கள் பிடிபடாத ஆத்திரத்தில் இருக்கிறார் கிரி. இதற்கு நடுவே, பெரிதாகக் குற்றம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவர்களைப் பின்தொடரும் முயற்சியில் இருக்கிறது காவல் துறை.
மனைவியைச் சித்திரவதை செய்த இளைஞர்களை கிரி தேடிக் கண்டுபிடித்தாரா? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இதன் மீதி.
டான், சிஜு இருவரும் முதன்முறையாகக் கொலை செய்வதாகச் சொல்கிறது இக்கதை. அதனால், அவர்களது திட்டமிடல், செயல்பாடு மற்றும் பின்விளைவுகள் மீதான அக்கறையின்மை போன்றவை கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த உதவுகின்றன.
கோலியாத் ஆக இருக்கும் கிரியின் ஆட்களோடு டேவிட் போன்றிருக்கும் சிஜுவும் டானும் மோதுவதாகக் காட்டியிருந்தாலும், இரு தரப்பையும் ரவுடிகள் என்றே முத்திரையிட்டிருக்கிறார் இயக்குனர். எவரையும் முழுக்க நல்லவர் என்று அடையாளப்படுத்தவில்லை. அதுவே இப்படத்தின் பலம்; அதுவே பலவீனமாகவும் தென்படுகிறது.
கதை நகர்வில் ‘வித்தியாசம்’!
ஒரு கொலைச் சம்பவம். அது நிகழும் சூழல். அதில் ஈடுபடுபவர்கள், கொலையான நபர் சம்பந்தப்பட்டவர்கள், பொதுமக்கள் என்று பல மனிதர்கள். அது காவல் துறையிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அதன் பின்விளைவுகள் என்று முன்பாதிக் காட்சிகள் நகர்வது வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
குறிப்பாக, மையப் பாத்திரங்களுடன் வில்லன் தரப்பு கொள்ளும் முரண்பாடு முதல் சில நிமிடங்களிலேயே சொல்லப்படுகிறது.
நாயகனைப் பலமிக்கவராகக் காட்டிவிட்டு, அவரிடமே வம்பு வளர்ப்பதாக வில்லன்களைக் காட்டுகிறது திரைக்கதை. அதனால், ’அவர்கள் அடுத்து என்ன செய்வார்களோ’ என்ற எண்ணம் பயமாக மாறுகிறது. அது அடி வயிற்றில் உருள்கிறது. அதன் காரணமாக, இடைவேளைக்குப் பிறகு வரும் மிகச்சாதாரண காட்சிகள் கூட மிரட்சியை ஏற்படுத்துகின்றன.
இந்தப் படத்தில், பின்பாதி மிகப்பலவீனமாக உள்ளது. அக்காட்சிகள் ‘க்ளிஷே’வாக இல்லை என்றபோதும், அவை திருப்தி தருவதாக இல்லை. போலவே, காவல் துறையின் செயல்பாடு ’போனோம்.. வந்தோம்..’ என்கிற வகையிலேயே இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நகரமே நடுங்கும் நாயகன் வீட்டுக்குள், அவரைச் சார்ந்தவர்களின் இடங்களுக்குள் வில்லன்கள் ‘இதோ வந்துட்டேன்’ என்பதாகத் தோற்றம் தருவது நம்பும்படியாக இல்லை.
அது போன்ற லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிட்டால், நல்லதொரு ‘கேங்க்ஸ்டர் க்ரைம்’ படம் பார்த்த உணர்வு நிச்சயம் கிடைக்கும்.
பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்ணிடம், ‘இது ஒரு விபத்து’ என்று கணவன் வீட்டார் ஆறுதல் கூறுமிடம் ரசிகர்களைக் கைத்தட்ட வைக்கும் காட்சிகளில் ஒன்று.
ஒரு நகரமே செல்வாக்குமிக்க ஒரு குடும்பத்தின் ஆளுகையின் கீழ் இருப்பதாகச் சொல்கிறது இப்படம். இதன் தொடக்க மற்றும் இறுதி ஷாட்களும் கூட அதையே சொல்ல முனைகின்றன. அது போன்ற ‘அதிகப்பிரசங்கித்தனங்களை’ மீறி, இந்த ‘பணி’ நம்மை வசீகரிக்கும்.
அதற்கேற்ற தொழில்நுட்ப உள்ளடக்கத்தை ஒளிப்பதிவாளர்கள் வேணு, ஜிண்டோ ஜார்ஜ், படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தோஷ் ராமன், ஆடை வடிவமைப்பாளர் சமீரா சனீஷ் உள்ளிட்டவர்கள் நமக்குத் தருகின்றனர்.
விஷ்ணு விஜய் – சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை, காட்சிகளைப் பரபரவென்று நகர்த்த உதவியிருக்கிறது.
எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் ஜோஜு ஜார்ஜுக்கு இது முதல் படம். ஒரு நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் இதில் இயக்குனர் ஆகியிருக்கிறார். அப்பணி பலரது பாராட்டுகளைப் பெறும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.
காட்சிகள், ஷாட்கள் கோர்க்கப்பட்டிருக்கிற விதம், ‘பணி’யை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக கருதச் செய்யாது. அதுவே இப்படத்தின் ப்ளஸ்.
அதேநேரத்தில், ரவுடித்தனத்தைக் கைகொண்டவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் மீது சாதாரண மனிதர்கள் ஈர்ப்பு கொள்வதற்கான காரணங்கள் ஏதும் இதில் சொல்லப்படவில்லை. அது, இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
அது போன்ற எண்ணச் சிதறல்களைப் புறந்தள்ளும்விதமாக, இப்படத்தில் நடிகர், நடிகையரின் ‘பெர்பார்மன்ஸ்’ அமைந்திருக்கிறது.
ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், ஒரு நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அதற்கேற்ற ‘ஹீரோயிசத்தை’ இப்படம் காணச் செய்கிறது.
அபிநயா வரும் காட்சிகள் குறைவென்றபோதும், குறை சொல்ல முடியாத வகையில் அவரது இருப்பு அமைந்துள்ளது.
டான் செபாஸ்டியன் ஆக வரும் சாகர் சூர்யா வளவளவென்று பேசியே கைத்தட்டல் வாங்கினால், பார்வை அசைவுகளால் நம்மை ஈர்க்கிறார் ஜுனைஸ். அவர்களது நடிப்பே இப்படத்தினைத் தாங்கிப் பிடிக்கிறது.
இருவரது பாத்திரங்களும் நமக்கு ‘வேட்டையாடு விளையாடு’ வில்லன்களை நினைவுபடுத்துகிறது. சில காட்சிகளில் அப்படத்தின் தாக்கம் தெரிகிறது. அதையும் மீறி, இருவரையும் புதிதாக உணரச் செய்திருக்கிறார் இயக்குனர்.
இவர்கள் தவிர்த்து சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, லங்கா லட்சுமி, சோனா மரியா, மெர்லெட் ஆன் தாமஸ் என்று பெண் பாத்திரங்கள் அனைத்தும் வலுவாகப் படைக்கப்பட்டுள்ளன.
‘காதல் தி கோர்’ படத்தில் வந்த பிரசாந்த் அலெக்சண்டர், ‘ரசவாதி’ சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன் என்று இதர பாத்திரங்களில் நடித்தவர்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்.
ஈர்க்கும் அம்சங்கள்!
இப்படத்தில் ‘கிரி – கௌரி தம்பதிக்கு ஏன் குழந்தை இல்லைன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க’ என்று காவல் துறையைச் சேர்ந்த இருவர் பேசிக் கொள்வதாக ஒரு காட்சி உண்டு.
இருவரும் குழந்தைப்பேறுக்கான தகுதியற்றவர்கள் என்று மருத்துவக் காரணங்கள் இதில் சொல்லப்படவில்லை. மாறாக, அவர்களது மிதமிஞ்சிய அன்பே அதன் பின்னிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் கூட, வில்லன்கள் உட்படச் சிலர் பேசும் ஒற்றை வரி வசனங்களால் உணர்த்தப்படுகிறது. அது இப்படத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று.
ரவுடிகள் என்றால் எந்நேரமும் அடியாட்கள் புடை சூழத் திரிவார்கள் என்ற கருத்தைச் சுக்குநூறாக்குகிறது இப்படம். ‘அவர்களும் சாதாரண மனிதர்கள்தான்’ என்பதாகக் காட்டியிருக்கிறது.
நீண்ட தலைமுடி, தாடி, நல்ல உடற்கட்டுடன் திரிபவர்களை மட்டுமே ‘ரவுடி’களாக காட்டும் திரையில், வேறுபட்ட முறையில் அவர்களைக் காட்டுகிறது. கூடவே, ‘ஒரு ரவுடி எப்பவும் தன்னை ரவுடின்னு சொல்லிக்க மாட்டான்’ என்கிற விஷயத்தைப் பூடகமாகப் போதிக்கிறது.
அதேநேரத்தில், இக்கதையில் டேவிட்டும் கோலியாத்தும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டவர்களாகக் காட்டுகிறது. அவர்களில் எவர் பக்கம் அறம் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது என்று காண்பித்து, ரசிகர்களை அவர்கள் பக்கம் நிற்கச் செய்திருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, குழந்தைகளிடத்தில் பணம், அதிகாரம் மீதான வேட்கையைக் புகட்டுகிற சமூகச் சூழல், எல்லாவற்றையும் கண்டு பயப்படுகிற மிகச்சாதாரண மனிதர்களின் அடுத்த தலைமுறையினரைச் சர்வசாதாரணமாகக் குற்றவாளிகளாக மாற்றுவதாகச் சொல்கிறது ‘பணி’.
வழக்கமான படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டிருப்பதால், ‘பணி’யைக் காண்பது ஓரளவுக்கு நல்லனுபவத்தைத் தரும். சமகாலப் படங்களை ஒப்பிடுகையில் இதில் வன்முறை குறைவு தான். ஆனாலும், குழந்தைகளோடு இப்படத்தைக் காண்பது ஆரோக்கியமானதல்ல..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்