தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, விஜயதசமி என்று ஓராண்டில் வரும் விழாக்காலத்தை ஒட்டிப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானதைத் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது.
அந்தப் படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை பெருவெற்றியைப் பெற்றிருக்கின்றன. மீதமுள்ள சில படங்கள் சுமார் வெற்றிகளை அடைந்திருக்கின்றன, சில படங்கள் அந்த வெற்றிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போயிருக்கின்றன.
தொலைக்காட்சியில் அந்தப் படங்களைப் பார்க்கிறபோது, ’குறிப்பிட்ட படங்கள் ஏன் பெரிய வெற்றியைப் பெற்றன’ என்று தோன்றும். ’இப்படம் ஏன் கவனம் பெறாமல் போனது’ என்ற கேள்வியும் கூட நம்மை வந்தடையும்.
அவற்றுக்கு நடுவே, மிகச்சில படங்கள் ‘கல்ட் கிளாசிக்’ அந்தஸ்தை அடைந்தும் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரமாக அமைதி காக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று, விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த ‘உழவன் மகன்’.
ஆபாவாணன் எழுத்தாக்கத்தில், அரவிந்த்ராஜ் இயக்கிய இப்படத்தைத் தயாரித்தவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர்.
ராதிகா, ராதா, எம்.என்.நம்பியார், ராதாரவி, மலேசியா வாசுதேவன், எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், பண்டரி பாய், கோவை சரளா, ஏ.சகுந்தலா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருந்தது.
மனோஜ் – கியான் இணை இதற்கு இசை அமைத்திருந்தது.
இப்படம் வெளியான காலகட்டத்தில், எம்ஜிஆர் பட பார்முலாவில் இப்படம் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
போட்டிக்கு நடுவே..!
1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று தீபாவளி வெளியீடாகத் திரையைச் சென்றடைந்த படங்களில் ஒன்று ‘உழவன் மகன்’. அன்றைய தினம் மொத்தமாகப் பதினோரு படங்கள் தமிழில் வெளியாகின.
கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் மணிவண்ணன் இயக்கிய ‘புயல் பாடும் பாட்டு’, மனோஜ்குமாரின் இயக்கத்தில் ராமராஜன் நடித்த ‘நேரம் நல்லா இருக்கு’, கே.பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’,
பிரபுவின் 50வது படமான ‘இவர்கள் வருங்காலத் தூண்கள்’, இயக்குனர் ஸ்ரீதரின் ‘இனிய உறவு பூத்தது’, ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைத்த ‘பூக்கள் விடும் தூது’, கே.நட்ராஜ் இயக்கிய ‘செல்லக்குட்டி’, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’,
ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘மனிதன்’ படங்களோடு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய விஜயகாந்த் படமான ‘சட்டம் ஒரு விளையாட்டு’ உடன் வெளியானது ‘உழவன் மகன்’.
மேற்சொன்ன பட்டியலே, எப்படிப்பட்ட போட்டி அந்த தீபாவளி வெளியீட்டின்போது இருந்தது என்பதைச் சொல்லிவிடும்.
எஸ்.பி.முத்துராமனின் அனுபவமிக்க இயக்கத்தில், அன்றிருந்த ரசிகர்களை வசீகரித்தது ‘மனிதன்’.
வெளியான காலகட்டத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும், மணிரத்னத்தின் திறமையை அண்ணாந்து பார்க்க வைத்தது ‘நாயகன்’.
’சட்டம் ஒரு விளையாட்டு’ கூட ஒரு வெற்றிப்படம் தான். இதர படங்களும் கூட குறிப்பிட்ட அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தன என்றே சொல்ல வேண்டும்.
இவற்றுக்கு நடுவே எந்த வகையில் வேறுபட்டிருந்தது ‘உழவன் மகன்’?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், ஒரு கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் அதில் இருந்தன.
அதேநேரத்தில், அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்த விதம் வழக்கமான தமிழ் படங்களைப் போல இல்லை. பிரமாண்டமான இந்திப்படம் பார்க்கும் உணர்வினைத் தந்தது ‘உழவன் மகன்’.
கூடவே, இதர தமிழ் படங்களைக் காட்டிலும் சில மடங்கு அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது திரையில் நன்கு தெரிந்தது. அதனால், ரசிகர்கள் அந்த பிரமாண்டத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் திகைத்து நின்றார்கள். அப்படமும் தனக்கான வெற்றியைப் பெற்றது.
மாபெரும் துணிவு!
எண்பதுகளில் ரஜினி, கமல் பெரிய நட்சத்திரங்களாக விஸ்வருபம் எடுத்திருந்தபோது, அவர்களுக்கு அடுத்த இடத்தை யார் பெறுவது என்பதில் பெரிய போட்டி நிலவியது. ’சாவி’ படத்திற்குப் பிறகு வில்லனாக நடித்துவந்த சத்யராஜ் நாயகனாக மாறியிருந்தார்.
பிரபு, கார்த்திக் இருவரும் வெற்றி தோல்விகளைத் தொடர்ந்து கண்டு வந்தனர். ராமராஜன் நாயகனாக அறிமுகமான காலம் அது.
இவர்களுக்கு நடுவே மோகன், சுரேஷ், சந்திரசேகர், நிழல்கள் ரவி, ரகுவரன், அர்ஜுன் என்று பலரும் நாயகர்களாக உருவெடுத்திருந்தனர்.
அப்போது ரஜினியும் கமலும் ஆண்டுக்கு மூன்று படங்கள் போதும் என்ற நிலையைத் தொட்டிருந்தனர். அது போக, இந்தியிலும் தெலுங்கிலும் அவ்வப்போது நடித்து வந்தனர்.
அதனால், அவர்களைக் கொண்டு படம் தயாரிக்க ஆசைப்பட்டவர்கள், சிறிய முதலீட்டைக் கையில் எடுத்து வந்தவர்கள் மோகன், பிரபு, கார்த்திக் என்று பல நாயகர்களைத் தேடிச் சென்றனர்.
அப்போது, ’சின்ன தயாரிப்பாளர்களின் ரஜினிகாந்த்’ ஆக விளங்கியவர் விஜயகாந்த். அவரது படம் இன்ன முதலீட்டில் தயாரிக்கப்பட்டு, இந்த அளவுக்கு விற்பனையாகி, இப்படியொரு வசூலைக் குவிக்கும் என்கிற கணக்கு நடைமுறையில் இருந்தது.
அந்த வட்டத்தைத் தாண்டி விஜயகாந்தை ஒரு நட்சத்திரமாக்க முடிவெடுத்தார் அவரது நண்பரான இப்ராகிம்.
‘ஊமை விழிகள்’ படத்தில் தனது நண்பனை ‘ஸ்டைலிஷாக’ ஆங்கிலப் பட நடிகர் போன்று காட்டிய ஆபாவாணன் குழுவினரைக் கொண்டு, ஒரு ஜனரஞ்சகமான தமிழ் படத்தை உருவாக்க விரும்பினார்.
அப்படி உருவானதுதான் ‘உழவன் மகன்’. அப்போது தயாரிப்பில் இருந்த பல விஜயகாந்த் படங்களைக் காட்டிலும் பன்மடங்கு செலவில் அப்படம் உருவாக்கப்பட்டது.
அதற்கு மாபெரும் துணிவு வேண்டும். அது இப்ராகிமிடத்தில் இருந்தது. விஜயகாந்தின் நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே அவர் கவனத்தில் கொண்டார். கூடவே, ரசிகர்கள் திரையில் காணும் அனுபவம் வேறுவிதமாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.
அப்போது, ‘ஷோலே’ படம் போன்று தமிழிலும் படங்கள் உருவாகக்கப்பட வேண்டுமென்ற ஆபாவாணன் உள்ளிட்டவர்களின் கனவுகளுக்கு உருவம் தர முன்வந்தார்.
ஒருவேளை இப்ராகிம் அதனைச் செய்யாமல் போயிருந்தால், திரைப்படக் கல்லூரியில் இருந்து பல இயக்குனர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் அதிகளவில் வெற்றியடையாமல் போயிருக்கக் கூடும்.
எம்ஜிஆர் பார்முலா!
நாயகன் ‘ஸ்கோர்’ செய்வதற்கு ஏற்ற, பலவிதமான உணர்வுகளை வெளிக்காட்டுகிற காட்சிகள்.
ரசிகர்கள் திரும்பத் திரும்பக் கேட்கும்விதமான பாடல்கள். அவற்றுக்குப் பொருத்தமான காட்சியமைப்பு மற்றும் நடனம்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் சண்டைக்காட்சிகள். அப்போது உச்சத்தில் இருக்கும் நாயகிகள் மற்றும் இதர நடிப்புக் கலைஞர்கள்.
அனைத்துக்கும் மேலாக, உற்சாகம் பொங்குகிற வகையில் அமைந்த திரைக்கதை. அதற்குத் தோதாக மெலிதான ஒரு கதை.
மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் படங்களில் காண முடியும். ஒரு கமர்ஷியல் படத்திற்கு அவை போதும் என்று அவர் பல படங்களில் நிரூபித்திருக்கிறார்.
அந்த பார்முலாவில் இருந்து அவர் விலகி நடித்த படங்கள் சிலவே. அந்தப் படங்களும் கூட, அதில் பணியாற்றிய இயக்குனர், கதாசிரியர் மற்றும் அப்போதைய சூழல் சார்ந்தே அவரது இருப்பைக் கைக்கொண்டவையாக இருக்கும்.
அதனை உணர்ந்து, நண்பன் விஜயகாந்தை பெரிய ‘லீக்’கில் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டார் இப்ராகிம். அதில் வெற்றியும் பெற்றார்.
ராதிகா, ராதா உடனான காதல் காட்சிகள். நம்பியார் உடனாக சென்டிமெண்ட் காட்சிகள், ஸ்டைலிஷான தொடக்கக் காட்சிகள், இரண்டு முறை படத்தில் இடம்பெறும் ரேக்ளா ரேஸ் தொடர்பான காட்சிகள், இந்திப் படங்களைப் போன்று காட்சியாக்கம் செய்யப்பட்ட பாடல் காட்சிகள் என்று பலவற்றை உள்ளடக்கியிருந்தது ‘உழவன் மகன்’.
மனோஜ் கியான் இசையில் வெளியான ‘செம்மறி ஆடே’, ‘சொல்லித் தரவா’, ‘உன்னைத் தினம் தேடும் தலைவன்’, ‘வரகு சம்பா’, ‘மத்தாப்பூ’ என்று பாடல்கள் ஒவ்வொன்றும் பெரிய வெற்றியைப் பெற்றன.
ஆனால், பின்னணி இசை மட்டும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை. இந்திப்பட பாணியிலேயே அது அமைந்திருந்தது, அந்த காலகட்டத்தில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றதென்று தெரியவில்லை.
அனைத்துக்கும் மேலாக, இரட்டை வேடங்களில் விஜயகாந்த் நடித்தது அவரது ரசிகர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்தியது.
அதுவும் எம்ஜிஆர் பட ஸ்டைலில் நகரத்தையும் கிராமத்தையும் பின்னணியாகக் கொண்டவர்களாகக் காட்டியது திரைக்கதை.
ரமேஷ்குமாரின் பிரமாண்டத்தை வெளிக்காட்டும் ஒளிப்பதிவு, ஜிகேவின் கலை வடிவமைப்பு, ஜெயச்சந்திரனின் படத்தொகுப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து திரையில் வேறுபட்ட அனுபவத்தைத் தந்தன. இன்றும் கூட யூடியூப்பில் படம் பார்க்கும்போது, அதனை உணர முடியும்.
பத்து, இருபது, ஐம்பது பேரைத் திரையில் காட்டி பெருங்கூட்டமென்று உணரச் செய்த காலத்தில், கிளைமேக்ஸ் ரேக்ளா ரேஸ் காட்சியில் நடித்தவர்கள் மட்டுமே நூற்றுக்கணக்கில் இருந்தார்கள்.
‘பென் ஹர் ஆங்கிலப்படம் போன்று அக்காட்சியைப் படமாக்கச் சில நூறு அடிகளில் மூங்கில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
அதன் மூலமாக, கண் பார்வை மட்டத்தைத் தாண்டி மேலிருந்து கீழாகப் பறவையின் பார்வையில் பார்ப்பது போன்ற ‘ஷாட்’கள் கூடப் படம்பிடிக்கப்பட்டன.
சண்டைக்காட்சிகளில் அபாயகரமான முயற்சிகளில் விஜயகாந்த் ஈடுபட்ட காலம் அது. படம் முழுக்க அது நன்கு தெரியும்.
’உழவன் மகன்’னில் விஜயகாந்தின் நடனத்தில் ஒருவித நளினமும் அழகும் தென்படும். ராதா, ராதிகாவுக்கு ஈடுகொடுத்து ஆடியிருப்பார். பல படங்களில் நாம் பார்க்க முடியாத விஷயம் அது.
அனைத்துக்கும் மேலே ஆபாவாணன் – அரவிந்த்ராஜ் புரிதலின் உச்சமாக, அப்படக் காட்சியாக்கம் அமைந்திருந்தது.
இன்றைய காலகட்டத்தில், அக்காட்சிகள் ‘தனித்துண்டு’களாகத் தெரியலாம். ஆனால், ஒரே மூச்சில் படம் பார்க்க அமர்ந்தால் நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும்.
படக்குழுவினருக்கு தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்களை உணவாகப் பரிமாறிய காலகட்டத்தில், யூனிட்டில் உள்ளவர்களுக்கு கறி விருந்துடன் சாப்பாடு வழங்கியது ‘உழவன் மகன்’ படப்பிடிப்பு.
அதன்பிறகு, அந்த வழக்கம் இதர படக்குழுவினரையும் தொற்றியது. தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு பேட்டியில் பகிர்ந்த தகவல் இது.
இப்படிப் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்த ‘உழவன் மகன்’, பின்னாட்களில் ‘கல்ட் கிளாசிக்’ அந்தஸ்தை அடைந்தது.
விஜயகாந்த் நடித்த கமர்ஷியல் படங்களில் மிக எளிமையான கதையம்சத்தையும் பிரமாண்டமான காட்சியமைப்பையும் ஒருங்கே கொண்டது இப்படமே.
நாயகன், மனிதன் அளவுக்கு இப்படம் நினைவுகூரப்படாமல் போனதற்கு, இதனை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்க்க முடியாமல் போனதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த தடைகளைத் தாண்டி, இன்று பலரால் ரசிக்கப்படுகிறது ‘உழவன் மகன்’.
இன்றைய நட்சத்திர நடிகர்கள் இந்த பார்முலாவில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது நான்கைந்து படங்களுக்கு நடுவே ஒருமுறையாவது இது போன்ற படங்களைத் தர வேண்டும்.
அப்படியொரு எண்ணத்தைத் தீவிர ரசிகர்களிடத்தில் விதைத்திருப்பதே ‘உழவன் மகன்’ படத்தின் வெற்றி!
– உதயசங்கரன் பாடகலிங்கம்