ராக்கெட் டிரைவர் – சின்ன விஷயங்கள் தான் ரொம்ப பெருசு!

தமிழில் பேண்டஸி படங்கள் வெளியாவது மிக அபூர்வம். குறைந்த பட்சமாகச் சில நிமிடங்களுக்கு விஎஃப்எக்ஸ் பணிகள் இடம்பெற வேண்டும், அதற்கேற்ற உள்ளடக்கத்தை உருவாக்கப் பெரும் பட்ஜெட்டில் தயாரிப்பு அமைய வேண்டும் என்று பல விஷயங்கள் அதன் பின்னிருக்கின்றன.

அதனால், குறைந்த பட்ஜெட்டில் பேண்டஸி படங்கள் வெளியாக முடியாத நிலைமை இருந்து வருகிறது. அந்த நிபந்தனைக்குச் சவால் விடும் வகையில் ‘எப்பூடி..’ என்ற கேள்வியை எழுப்புகிறது ‘ராக்கெட் டிரைவர்’.

ஸ்ரீராம் அனந்தசங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைத்துள்ளார். விஸ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

‘நான் தான் அப்துல் கலாம்’ என்று ஒரு பதின்ம வயதுச் சிறுவன் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சொல்வது போன்று அமைந்திருந்தது இப்படத்தின் ட்ரெய்லர். இதன் கதையும் அப்படியொரு பின்னணியில்தான் அமைந்திருக்கிறதா?

இந்த ‘கலாம்’ யாரு..?!

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவனான பிரபாகருக்கு (விஸ்வத்) மிகப்பெரிய ராக்கெட் விஞ்ஞானியாக வேண்டும் என்பது ஆசை.

அதனைச் செயல்படுத்த, நல்லதொரு கல்லூரியில் சேர வேண்டுமென்று நினைக்கிறார்.

பிரபாகரின் தந்தையோ, தன் வசமிருக்கும் ஆட்டோவை பிரபாகரிடம் தந்து ஓட்டச் செல்கிறார்.

கல்லூரிக்குச் சென்று படிக்கும் அளவுக்குக் குடும்பச் சூழல் இல்லை என்கிறார்.

அதனால், அப்துல் கலாம் போன்று பெரிய உயரத்தை இந்தச் சமூகத்தில் அடைய வேண்டுமென்ற அவரது கனவு உடைந்து போகிறது. அந்தச் சூழ்நிலை பிரபாகரை எரிச்சலடைய வைக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தொட்டதற்கெல்லாம் கோபப்படுகிறவராக, தன் பார்வையில் எதிரே இருப்பவரை மதிப்பிடுபவராக, அனைத்தையும் குறை சொல்கிறவராக மாறிப் போகிறார் பிரபாகர்.

வீட்டில் இருக்கும் தந்தை முதல் சாலையில் எதிர்ப்படும் மனிதர்கள் வரை அனைவரிடமும் அதனைப் பிரதிபலிக்கிறார்.

டிராபிக் கான்ஸ்டபிளான கமலாவிடம் (சுனைனா) மட்டுமே தனது மனக்குறைகளை வெளிப்படையாகச் சொல்கிறார் பிரபாகர். அவரும் கூட, ‘ரொம்ப யோசிக்கதடா.. ரொம்ப புலம்பாதடா’ என்றே பதிலளிக்கிறார்.

இந்த நிலையில், ஒருநாள் சாலையில் ஒரு பதின்ம வயதுச் சிறுவனைக் காண்கிறார் பிரபாகர். ‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி டீன் அறிவழகனைப் பார்க்கப் போகணும்’ என்று அவரிடம் சொல்கிறார் அந்த சிறுவன்.

முதலில் அந்தச் சிறுவனைத் தவிர்க்க முயற்சிக்கிறார் பிரபாகர். ஆனால், அவரது கெஞ்சல் மனதை மாற்றுகிறது. வேறு வழியில்லாமல் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.

அங்கு, சுவரில் அந்த அறிவழகன் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. அவர் இறந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

பல்கலைக்கழக ஊழியர் ‘அறிவழகன்னு யாரும் இங்க இல்ல’ என்று சொன்னாலும், அந்தச் சிறுவன் கேட்பதாக இல்லை. ‘அவர்தாங்க லெட்டர் போட்டு வரச் சொன்னார்’ என்கிறார்.

அந்தச் சிறுவன் வைத்துள்ள அஞ்சலட்டையில் ‘1948’ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதனைக் கண்டு குழப்பமுறும் பிரபாகரை மேலும் அதிர்ச்சியடையச் செய்வது போல, ‘எனது பெயர் அப்துல் கலாம்’ என்கிறார்.

அந்த சிறுவனின் தலைமுடி, ஆடைகள், கையிலுள்ள பெட்டி போன்றவை வினோதமாகத் தெரிந்தாலும், பிரபாகர் அதனைப் பொருட்டாகக் கருதவில்லை.

ஆனால், ‘எனது தந்தை பெயர் ஜெயினுலாப்தீன்’ என்றதும் மேலும் அதிர்கிறார்.

அப்துல்கலாம் காலம் தவறி, தன்னை வந்து சந்தித்திருப்பதாகக் கமலாவிடம் சொல்கிறார் பிரபாகர். முதலில் அவரும் நம்புவதாக இல்லை.

‘மீண்டும் கலாமை கடந்த காலத்திற்கு எப்படித் திருப்பி அனுப்புவது’ என்ற கேள்விக்கு கலாம் உட்பட யாருக்குமே பதில் தெரியவில்லை.

அந்த நிலையில், ராமேஸ்வரத்திற்குச் சென்றால் அதற்கான பதில் தெரியலாம் என்கிறார் பிரபாகர். அதன்படி இருவரும் ஒரு பேருந்தில் ஏறிப் பயணிக்கின்றனர்.

அதன்பிறகு என்னவானது? ராக்கெட் விஞ்ஞானியின் பால்ய காலத்தை நேரில் காணும் வாய்ப்பு பிரபாகரின் மனவோட்டத்தை எந்த வகையில் மாற்றியது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கூடவே ‘கலாம் என்பவர் சிறு வயதில் இப்படியும் இருந்திருக்கலாம்’ என்கிற சித்திரத்தை நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில், ஒரு சுவையான பேண்டஸி கதையாக அமைந்துள்ளது இந்த ‘ராக்கெட் டிரைவர்’.

நம்ப வச்சிடுறாங்க..!

நாம் இதுவரை பார்த்த கமர்ஷியல் மற்றும் கலைப்படங்கள் போன்று ‘ராக்கெட் விஞ்ஞானி’ அமையவில்லை. இயக்குனர் ஸ்ரீராம் அனந்தசங்கர் கதை சொல்லியிருக்கும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.

மிகப்பெரிய லட்சியக் கனவுகளோடு இருக்கும் இளைஞன், சமகாலத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறான். அவை சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, ‘என் கனவு மிகப்பெரியது’ என்கிறான்.

‘ஒரு மனிதருக்குக் கண்டிப்பாக எதிர்காலக் கனவுகள் வேண்டும்’ என்ற அப்துல் கலாம் அப்படித்தான் சிந்தித்தாரா அல்லது சின்னச் சின்ன விசயங்களுக்கு, தன்னைச் சார்ந்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்தாரா என்று சொல்கிறது ‘ராக்கெட் டிரைவர்’ கதை. அந்த வித்தியாசமான பார்வையே இப்படத்தின் யுஎஸ்பி.

சீரியல், சீரிஸ், யூடியூப் வீடியோ, ஷார்ட்ஸ் என்று அமைந்த 2கே கிட்ஸ்களின் உலகில் ’டெலிபிலிம்’ எனும் தொலைக்காட்சிப் படத்திற்கு இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

தொண்ணூறுகளில் தூர்தர்ஷனில் வெளியான அந்த வகைக் காட்சிப்பதிவுகளைப் பிரதியெடுத்தது போன்றிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட்.

திரைக்கதையாக்கத்தில் இயக்குனருக்கு அக்‌ஷய் பொல்லா, பிரசாந்த் இருவரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

ரெஜிமெல் சூர்யா தாமஸின் ஒளிப்பதிவு, ‘ஒரு சினிமா பார்க்கிறோம்’ என்கிற எண்ணத்தை உயிர்ப்புடன் இருக்கச் செய்திருக்கிறது.

இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு, ‘சில காட்சிகள் எடிட்டிங்கில் விடுபட்டு விட்டனவா’ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், படம் முழுக்கப் பார்வைக்குப் புலப்படாத ஒரு ‘ரிதம்’ இழையோடச் செய்திருக்கிறது.

கௌஷிக் கிரிஷின் பின்னணி இசை, சில காட்சிகளில் நகைச்சுவை உணர்வை ஊட்ட உதவியிருக்கிறது.

‘செயற்கையாகத் தெரிகிறது’ என்று சொல்ல முடியாதபோதும், யதார்த்தத்தை விட்டு கொஞ்சம் விலகி நிற்கிறது காட்சிகளில் நிறைந்துள்ள கலை வடிவமைப்பு.

தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரேம் கருந்தமலை அதனை ஒரு ‘ஸ்டைலாக’ இதில் கொண்டு வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

இயக்குநர் ஸ்ரீராம் அனந்தசங்கர் ஒரு வித்தியாசமான கதையைக் கையிலெடுத்திருக்கிறார்.

‘டைம் டிராவல்’ குறித்த கேள்விகளுக்கு வேலை கொடுக்காமல், வெறுமனே மனிதர்களின் அடிப்படைக் குணாதிசயங்களுக்கு முக்கியத்துவம் தந்து கதையை நகர்த்தியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்பவர்களால் இப்படத்தின் காமெடி, சென்டிமெண்ட் காட்சிகளை ரசிக்க முடியும்.

உலகில் தான் மட்டுமே விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்களாகவும், மற்றவர்கள் அனைவரும் பொறுப்பற்று இருப்பதோடு மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும் கருதுகிறவர்கள் எல்லா காலத்திலும் உண்டு.

அப்படியொரு நபரை மிக எளிதாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் விஸ்வத். ’இதற்கு முன் வேறு ஏதேனும் படங்களில் நடித்திருக்கிறாரா’ என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது அவரது பெர்பார்மன்ஸ்.

சுனைனாவின் இருப்பு ‘பளிச்’சென்று இப்படத்தில் இருக்கிறது. ஆனால், அவரது பாத்திரப் பின்னணி முழுமையாகச் சொல்லப்படவில்லை.

அப்துல் கலாம் ஆக வரும் நாக விஷாலின் நடிப்பு அருமை. காலப் பயணத்தை மேற்கொண்டது பற்றி ஆச்சர்யம் இருந்தாலும் அதிர்ச்சி அடையவில்லை என்பதை உணர்த்தும் விதமான நடிப்பு அவரிடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

அது சாதாரண விஷயமல்ல. கூடவே, ‘கேடி என்கிற கருப்புதுரையில் வந்த சிறுவனா இவர்’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

ஒரு சிறுவன் ஒரு முதியவரை ‘வாடா போடா’ என்றழைப்பதா என்ற கேள்வி எழாத அளவுக்குப் பல காட்சிகளில் நாக விஷாலுடன் தோள் சேர்ந்து நின்றிருக்கிறார் காத்தாடி ராமமூர்த்தி. அவர் வருமிடங்கள் திரைக்கதையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச இறுக்கத்தையும் அறுத்தெறிகின்றன.

இவர்கள் தவிர்த்து ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட சிலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.

சிக்கல் மிகுந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டாலும், இதில் ஆட்சேபகரமான காட்சிகள் என்று எதுவுமில்லை.

சமூகத்தில் உயரிய மதிப்பீடுகள் பெற்றவர்களை ஏக வசனத்தில் பேசுவது சிலருக்குத் துருத்தலாகத் தெரியலாம். சுயசரிதையாக அமையும் படைப்புகளில் அது பொருட்படுத்தத்தக்கதே.

இப்படத்தில் ஒரு காட்சியில், ‘நீந்தவே தெரியலை ஆனா மீனவன்னு சொல்றே’ என்று காத்தாடி ராமமூர்த்தி வசனம் பேசியிருப்பார். அந்த ஒற்றை வரியின் பின்னால் இருக்கும் அரசியல் பல கேள்விகளை எழுப்பக்கூடியது.

ஓடிடியில் வெளியாகும்போது அவ்வசனம் பெரும் விவாதத்தை எழுப்பலாம். ஆனால், அது போன்ற வசனங்களைப் பிற இடங்களில் காண முடிவதில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.

இன்னும் சில காட்சிகள் சேர்த்து, இதனை இன்னும் பெரியதாக உருவாக்கியிருக்க முடியும்.

ஆனால், ‘இதுக்கு மேல இந்தக் கதையை ஜவ்வா இழுக்க வேண்டாம்’ என்று படக்குழு எண்ணியிருக்கலாம்.

பேண்டஸி படம் என்பதைத் தாண்டி, நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென்று சொன்ன வகையில் கவர்கிறது ‘ராக்கெட் டிரைவர்’. இதில் வண்டி வண்டியாக ‘லாஜிக் குறைபாடுகளை’க் கண்டெடுக்க முடியும்.

‘ஆனால் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை’ என்பது போன்ற காட்சியனுபவத்தை தருகிறது இப்படம்.

மிக முக்கியமாக, நம்முடைய லட்சியக் கனவுகளை விட நம்மைச் சார்ந்தவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதற்காகச் சில விட்டுக்கொடுத்தல்களை மேற்கொள்வதும் அவசியம் என்று சொன்ன வகையில் சிகரம் ஏறியிருக்கிறது இந்த ‘ராக்கெட் டிரைவர்’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like