கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

நினைவுகளைப் பகிர்ந்த செல்வி கருணாநிதி

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் :

“பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர்.

அவரை ஒரு தெய்வதைப் போலத் தான் நான் நினைச்சுக்கிட்டிருக்கேன். இப்போ என் மனது வெறுமையா இருக்கு.

பள்ளிக்கூடக் காலத்தில் அவர் எங்களை அவர் எங்களுக்காகப் பள்ளிக்கு வந்ததில்லை. சர்ச் பார்க் கான்வென்டில் என்னையும், அண்ணன் ஸ்டாலினையும் சேர்க்க அழைச்சுட்டுப் போயிருந்தாங்க..

ஸ்டாலின்னு பெயர் இருந்தததால் அவரைப் பள்ளியில் சேர்த்துக்க மறுத்துட்டாங்க. அப்படின்னா அந்தப் பள்ளியே தேவையில்லை என முடிவு பண்ணி எங்களை ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்தாங்க.

வீட்டிலே சில சமயம் இருக்கிறப்போ அப்பா எங்களோடு உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடியிருக்காங்க. செஸ் விளையாடி இருக்காங்க.

திருவாரூக்கு விடுமுறையில் போயிருக்கும் போது, அண்ணா மு.க.முத்து நல்லாப் பாடுவார். அதைக் கேட்க வைப்பாங்க.

எங்களுக்கு அது வேணும், இது வேணும்னு அப்பா கிட்டே எப்போதும் நாங்க கேட்டதில்லை. எப்பவும் குழந்தைகளை அவர் அடிச்சதில்லை.

நான் பிறந்தப்பவே அவங்க அக்காவுக்கு “செல்வத்திற்கு ஒரு செல்வி பிறந்தாள்”ன்னு ஒரு கடிதம் போட்டுட்டார் அப்பா. குழந்தையிலேயே அவரைத் தான் திருமணம் பண்ணப் போறோம்ங்கிறது முடிவாயிடுச்சு.

எப்பவுமே அப்பா வேட்டி, சட்டையோடு தான் இருப்பாங்க.. ரொம்ப அபூர்வமா வெளிநாடு போறப்போ பேண்ட் போட்டிருக்காங்க.. குடும்பத்தோடு நிறைய சினிமா ’பிரிவ்யூ ஷோ’வுக்குப் போயிருக்கோம். எனக்குத் தெரிஞ்சு தியேட்டர்க்குப் போனதில்லை.

கட்சியில் அடுத்தகட்டத் தலைவர்களோடு தான் வீட்டுக்கு வருவாங்க. வந்ததும் அவங்களுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்துட்டுப் பேசிக்கிட்டிருப்பாங்க. பேச்சு.. பேச்சு.. அது தான் எல்லாமே.. வீட்டுக்கு வந்தவங்களைச் சாப்பிட வைச்சுத் தான் அனுப்புவாங்க..

வெளியூர்க்கு டூர் போறப்போ அம்மாவும் கூடப் போவாங்க.. நானும் போவேன். கூட்டம் முடிஞ்சதும் “எப்படியிருந்துச்சும்மா?”ன்னு கேட்பாங்க.. நான் அவங்க கூட்டத்திலே முன்னாடி உட்காராமல் மக்களோடு சேர்ந்து உட்கார்ந்திருப்பேன்.

அவங்களோட குறைகளைக் கேட்பேன்.. அதை அப்பா கிட்டே பிறகு சொல்லுவேன்.. அந்தப் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து ஏத்துக்குவாங்க.

குறைகளை நாங்க சொன்னாக் கூட கோபப்பட மாட்டாங்க.. பொறுமையா அதைக் கேப்பாங்க..

அம்மாவோட சமையல் அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். கடந்த ஐந்து வருஷமா நான் தான் சாப்பாட்டை அவருக்கு ஊட்டி விட்டிருக்கேன்..

அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப் போன பிறகு (கண் கலங்குகிறார்) நான் ஊட்டினா அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும்.. “நீ சாப்பாட்டை இவ்வளவு அழகா ஊட்டுறீயேம்மா”ன்னு சொல்வாங்க. அதை எல்லாம் இப்போ நான் ரொம்ப ‘மிஸ்’ பண்றேன்.. (அழுகிறார்)

அப்பாவுக்கு அம்மா வைக்கிற மீன் குழம்பு ரொம்பவும் பிடிக்கும்.. அவ்வளவு விரும்பிச் சாப்பிடுவாங்க.. கடைசிக்காலத்தில் அசைவம் சாப்பிடுறதை விட்டுட்டார்..

வீட்டில் முதலில் எந்திருக்கிறவர் அவர் தான். காலையிலே நாலு, நாலரைக்கெல்லாம் எந்திரிச்சுருவாங்க..

நாங்க எந்திரிக்க லேட்டாச்சுனா ‘சூரியன் உதயமாகிறதைக் கொஞ்சமாவது பாருங்கம்மான்னு சொல்லுவாங்க.. அப்பாவை யாரும் ‘ஈஸியாச்’ சந்திக்க முடியும். நாங்களுக்கும் எப்போது வேணும்னாலும் அவர் கிட்டே பேச முடியும்.

எங்க வீட்டுக்கு நிறைய அரசியல் தலைவர்கள் வந்திருக்காங்க.. அப்போ எங்களை அறிமுகப்படுத்தி வைச்சுருக்காங்க..

ஒரு சமயம் டெல்லியில் இந்திரா காந்தி அவர்களைச் சந்திக்கப் போனப்போ, எங்களை எல்லாம் அழைச்சுட்டுப் போயிருந்தாங்க.. அவங்க வீட்டிலே சாப்பிட்டுட்டு தான் எல்லோரும் திரும்பி வந்தோம்..

அப்பாவுக்கு ரொம்பவும் விருப்பம்னா அரசியல் தான்..குடும்பம் எல்லாம்  அப்புறம் தான். அவரோட காரில் எங்களை விட, அடுத்தகட்ட அரசியல் தலைவர்கள் தான் அதிகமா பிரயாணம் பண்ணியிருப்பாங்க.

ஒரு தடவை அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு நாவலர் வந்திருந்தார்.

அப்போ எனக்குச் சிறு வயது.

 நான் அப்பா கிட்டே போய் “அப்பா.. நெடுஞ்செழியன் வந்திருக்காரு”ன்னு சொல்லிட்டேன்.

அப்பா என்னைத் திட்டி “அப்படிச் சொல்லக்கூடாது.. நாவலர்னு சொல்லணும்”னு சொன்னார்.

வீட்டுக்கு வர்ற தலைவர்கள் யாராக இருந்தாலும், அவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். அவங்க பெயரைச் சொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அண்ணா, பேராசிரியர்னு சொல்லணும்னு சொல்வாங்க..

அப்பாவுக்கு திருவாரூர் மேலே தனிப்பிரியம். அவங்க ஊர்லே இருந்து ரெண்டு பேர் வந்திருந்தாங்க.. வாசலில் நின்ன செக்யூரிட்டிகளுக்கு அவங்களைத் தெரியலை.

திருக்குவளையிலே இருந்து வந்திருக்கிறாங்கன்னதும் கீழே இறங்கி வந்து உள்ளே வரச்சொல்லி, அவங்க பெயரைச் சொல்லிக்கூப்பிட்டு, காபி சாப்பிட வைச்சு அனுப்பினாங்க..

திருக்குவளை நாட்களைப் பற்றி அடிக்கடி சொல்லியிருக்காங்க.. அவரும், தென்னன் மாமாவும் சேர்ந்து திருவாரூர்க் குளத்தில் நீந்திப் போனதை எல்லாம் சொல்லியிருக்காங்க..

அவருக்குப் பிடிச்ச ஊர்னா திருக்குவளை, திருவாரூர், அண்ணா பிறந்த காஞ்சிபுரம், தந்தை பெரியார் பிறந்த ஈரோடு நான்கும் தான்.

தமிழ்நாடும் ரொம்பப் பிடிக்கும், வெளிநாட்டுக்கு நாங்க போறோம்னு சொன்னா அவருக்குப் பிடிக்காது. ஏன் இந்த ஆடம்பரம்? வேணாமேம்பாங்க..

எல்லாப் பேரன், பேத்திகளையுமே அவருக்குப் பிடிக்கும். ரொம்ப ‘டைமிங்’கோட அவங்க கிட்டேயும் பேசிக்கிட்டிருப்பாங்க.. நான் சாமி கும்பிடுறதைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டாங்க.. அது உன் விருப்பம்னு விட்டுருவாங்க..

ஒரு சமயம் நெற்றியில் விபூதி வைச்சிருந்தப்போ ”கே.பி.சுந்தரம்பாள் மாதிரியே இருக்கியே”ன்னு கமெண்ட் விட்டுருக்காங்க..

எங்களுக்கெல்லாம் அவர் தமிழைச் சொல்லிக் கொடுத்ததில்லை. ஆனா பேரன், பேத்திகளுக்குத் தமிழை எப்படி உச்சரிக்கணும், ழ,ல,ள-வை எப்படி உச்சரிக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க.

பிள்ளைகள் அவரோட திரைப்பட வசனத்தைப் பேசிக்காட்டினா ரொம்ப ரசிப்பாங்க.. மனோகரா வசனத்தை முத்தண்ணன் பேசிக்காட்டுவாங்க. அழகிரி அண்ணன் பேசுவாங்க.. அதெல்லாம் அவருக்குப் பிடிக்கும்.

குழந்தைங்க சொன்னா கேட்டுப்பாங்க.. காலத்துக்கேத்தபடி தன்னை மாத்திக்குவாங்க.. யார் சொன்னாலும், சொல்றதை உள்வாங்கிக்குவாங்க..

குடும்பம் ஒத்துமையா இருக்கணும்ங்கிறதிலே அவர் அக்கறையோட இருந்தார். அவரோட சகோதரிகளைப் பக்கத்தில் வைச்சுக்கிட்டு எங்க குடும்பத்திலே எல்லோரும் இருந்தப்போ “பிரிஞ்சுறக்கூடாது”ன்னு சொல்லியிருக்கார்.

அவரோட அக்கா மகனைத் தான் நான் திருமணம் பண்ணிக்கிட்டேன்.. எங்க அத்தை இறப்பதற்கு முன்பு சொன்ன வார்த்தையும் – அப்பா சொன்ன வார்த்தை தான்.

கடைசிக் காலத்தில் அவர் மருத்துவனையில் இருந்தப்போ, அவரால் பேச முடியாம இருந்தப்போ, எங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடச் சொல்வோம்.. அப்போ அவர் வாயில் இருந்து வந்த வார்த்தை “அண்ணா”.

ஜூன் 3-அவரோட பிறந்த நாள் சமயத்தில் அவர் கிட்டே “உங்களோட பிறந்த நாளுக்கு எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?”ன்னு கேட்டப்போ, அவர் சொன்ன கடைசி வார்த்தை என்ன தெரியுமா?

“என்னைக் கொடுக்கிறேன்”

அவரைக் கடைசியா மருத்துவமனைக்கு அழைச்சுப்போறப்போ தம்பி அவரை அழைச்சுட்டு வந்தப்போ, கீழே வழக்கமா அவர் வணங்கிட்டுக் கிளம்பிற அவரோட பெற்றோர் படத்தைக் காட்டினாங்க..

மாறன் அவர்களோட படத்தை கிட்டப்போய் காட்டினப்போ விரல்களைக் குவிச்சு வாயில் ஒத்திக்கிட்டார்.. அது தான் அவரோட மனசாட்சிக்கு அவர் செஞ்ச மரியாதை.”

சந்திப்பு : ராஜா திருவேங்கடம்

நன்றி : சன் டிவி

You might also like