குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

அக்டோபர் 17 : தேசிய பாஸ்தா தினம்  

இந்த கால குழந்தைகளின் உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒரு ரெசிபி பாஸ்தா. பிரபலமான இத்தாலிய உணவுகளில் ஒன்றான இந்த பாஸ்தா பல விதமான வடிவங்களில் கிடைக்கின்றன.

இன்று தேசிய பாஸ்தா தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தாலிய பாரம்பரிய உணவுகளில் பாஸ்தாவுக்கு என்று தனி இடம் உண்டு.

எல்லோரும் விரும்பும் இந்த பாஸ்தா பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் 600 மேற்பட்ட வகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன.

பாஸ்தாவில் பல வகைகள் கிடைத்தாலும் ஒரு சில பாஸ்தாக்கள் மட்டுமே பிரபலமாக இருக்கின்றன.

பிரபல பாஸ்தா வகைகள்:

1) ஏஞ்சல் ஹேர் பாஸ்தா

2) வில் டை பாஸ்தா

3) புகாட்டினி பாஸ்தா

4) டிடலினி பாஸ்தா

5) ஃபெட்டூசின் பாஸ்தா

6) ஜெமெல்லி பாஸ்தா

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன.

பாஸ்தா தானியங்களை அரைத்து தண்ணீரில் கலந்து பாஸ்தா போன்ற கார்போ ஹைட்ரேட்டுகளை உற்பத்தி செய்யும் எட்ருஸ்கன் நாகரிகங்களில் இருந்து வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

நாடுகள் கடந்து பாஸ்தா பயணப்பட்டாலும் இத்தாலியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பிறகு தான் பாஸ்தா அமெரிக்காவில் பிடித்த உணவாக மாறிப்போனது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக தற்போது மாறிப்போனது பாஸ்தா. மிகவும் எளிதான முறையில் செய்யக்கூடியதும்கூட.

பலவிதமான வடிவங்களில் கிடைப்பதால் குழந்தைகளுக்கு பிடித்த உணவாகவும் இருக்கிறது. நூடுல்ஸ் செய்வது போன்று இதுவும் சமைக்க எளிதானது.

மிகவும் எளிமையாக சமைக்க கூடிய மசாலா பாஸ்தாவைப் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி பாஸ்தா – 1 கப்

தக்காளி – 2

வெங்காயம் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

கேரட் – 1

பூண்டு – 2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்து வரும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எடுத்து வைத்த பாஸ்தாவை போடவும்.

பாஸ்தா வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை வடிகட்டிய பின் குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு அதன் பிறகு பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

அடுத்து நறுக்கிய கேரட், அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அதன் பிறகு நறுக்கிய குடமிளகாயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் மசாலா பாஸ்தா ரெடி.

சீஸ் மக்ரோனி (பாஸ்தா) செய்முறை:

தேவையான பொருட்கள்

மக்ரோனி- 2 கப்

சீஸ் – 2பெரிய பீஸ்

வெண்ணெய்- 4 ஸ்பூன்

மைதா- 2 டீஸ்பூன்

பால் -2 கப்

உப்பு – தேவைக்கு

மிளகுத்தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாஸ்தாவை வேகவைத்து தண்ணீர் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மைதா, பால், வெண்ணெய்-1 ஸ்பூன், உப்பு சிறிது சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி எல்லாம் கலந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள பால் ஊற்றி நன்கு காய்ச்சவும். அது கொஞ்சம் கெட்டியான பதம் வந்ததும் பாஸ்தா சேர்க்கவும்.

அதன் பிறகு சீஸ் சேர்த்து பட்டர் உருகி ஒன்று சேர்ந்து வந்ததும் மக்ரோனிக்கு தேவையான உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சீஸ் பாஸ்தா ரெடி.

தேசிய பாஸ்தா தினத்தில் விதவிதமான பாஸ்தா ரெசிபியை குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடுவோம்.

– யாழினி சோமு

You might also like