விண்வெளி ஆய்வில் சாதனை: பூமிக்குத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று (13.10.2024) மாலை, அந்த நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது.

விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது.

ஸ்டார்ஷிப் விண்கலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில், இந்தியப் பெருங்கடலில் இறங்குவதற்கான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்டின் மீது உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இருந்தது.

காரணம், இதற்கு முன்பு ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பாத நிலையில், 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் பூமிக்கு வந்தது.

புவியீர்ப்பு விசையை எதிர்த்து மிகத் துல்லியமான முறையில் டெக்சாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்த அந்த பூஸ்டரை, ’மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளால் கேட்ச் செய்ததை உலகமே வியந்து பார்த்தது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பலரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர் எலன் மஸ்கிற்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவைக் காண… https://fb.watch/vcx7K0YE9h/

You might also like