‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் சித்தாந்தத்துக்கு, ஆகச்சிறந்த உதாரணமாக, இந்தியத் தேர்தல் நடைமுறையைக் குறிப்பிடலாம். 70 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்?.
விடுதலைக்குப் பிறகான முதல் பொதுத்தேர்தல் நடந்த விதம், இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த கால தலைமுறைக்கும் ஆச்சர்யமான செய்தியாக இருக்கும்.
இந்திய சுதந்தரப் போராட்ட வரலாறு போன்று, இந்தியத் தேர்தல் வரலாறும் நெடியது என்பதால், சுருக்கமாகவேப் பார்க்கலாம்.
நமது நாட்டின் முதல் பொதுத்தேர்தலில், வாக்காளர்கள் ஓட்டளிக்க பொதுவான வாக்குப்பெட்டி ஏதும் கிடையாது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள், தாங்கள் விரும்பும் கட்சிக்கு, அந்தப் பெட்டியில் வாக்குச்சீட்டுகளைப் போடவேண்டும்.
இதன் தொடச்சியாக, அனைவருக்குமான பொது வாக்குப்பெட்டி பயன்படுத்தப்பட்டது. வாக்குச் சீட்டுகளில், அச்சிடப்பட்ட சின்னங்களில், நாம் விரும்பும் சின்னத்தில் முத்திரை குத்தி வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.
மின்னணு எந்திரங்கள் அறிமுகம்:
அச்சிடப்பட்ட காகித வாக்குச் சீட்டுகள் விலை உயர்ந்தவை. வாக்குகளை எண்ணுவதற்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. முன்பே நிரப்பப்பட்ட போலி வாக்குச் சீட்டுகள் மூலம் மோசடியாக வாக்களிக்கும் வாய்ப்புகளும் இருந்தன.
இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் களையும் நோக்கத்தில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (Electronic Voting Machine – EVM) கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டன.
1982 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பரவூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் சோதனை அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதன் நீட்சியாக 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது 25 தொகுதிகளில் சோதனை அடிப்படையில் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
2001 ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் EVM கள் பயன்படுத்தப்பட்டன.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளிலும் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அன்று முதல் இன்று வரை அனைத்து மாநில சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களும் EVM-கள் மூலமே நடக்கின்றன.
ஓயாத சந்தேகங்கள்:
மின்னணு தொழில் நுட்பத்தில், கரை கண்ட அறிவியல் நிபுணர்களின் அயராத உழைப்பால் உருவான மின்னணு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது, சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன.
தேர்தலில் தோற்றவர்களே, சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள் என சொல்லத் தேவையில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.
அதன் விவரம்:
“தேர்தல் நடைமுறைகளில் கண்மூடித்தனமாக சந்தேகம் எழுப்பக்கூடாது – அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதுமிகவும் கடினம் – அதில் செல்லாத வாக்குகள் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்னணு இயந்திர நடைமுறையால் ஒரு நிமிடத்துக்கு 4 வாக்குகள் பதிவாகின்றன. வாக்கு எண்ணிக்கையும் விரைவாக நடைபெறுகிறது”.
இவ்வாறு உச்சநீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக சொன்னாலும், சந்தேகங்கள் ஓய்வதாக இல்லை. இந்த சந்தேகங்களில் கொஞ்சம் உண்மையும் உள்ளது.
காங்கிரஸ் போர்க்கோலம்:
அண்மையில் நடைபெற்ற அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், வாக்குகள் எண்ணப்பட்டபோது, முடிவுகள் மாறி மாறி வந்தன. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது.
பிறகு பாஜக முன்னிலை பெற்றது. கடைசியில் பாஜகவே வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் நடந்ததாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து புகார்ப் பட்டியல் வாசித்தனர்.
அதன் விவரம்:
“மொத்தம் 20 தொகுதிகளின் மின்னணு எந்திரங்களில் குளறுபடி நிகழ்ந்துள்ளது – நாள் முழுவதும் எந்திரங்களை பயன்படுத்தினால், பேட்டரி அளவு குறையும்.
ஆனால் பல எந்திரங்களில் 100 % பேட்டரி சார்ஜ் இருந்துள்ளது – இது எப்படி சாத்தியம்?
பல இடங்களில் ஓட்டு வித்தியாசம் குறைவாக இருந்தது – எங்கள் முகவர்கள் ஆட்சேபனை எழுப்பியதற்கு பதில் ஏதும் சொல்லாமல் பாஜக வென்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்” என்று குமுறுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
இவர்கள் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது என பார்க்கலாம்.
– மு.மாடக்கண்ணு