பிளாக் – ஜீவா, பிரியா பவானிசஙக்ர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்களா?

ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நடித்ததன் மூலமாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, கச்சேரி ஆரம்பம் என்று அவர் நடித்த கமர்ஷியல் படங்களும் கூட ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலேயே இருந்தன.

ஆனால், பின்னர் வந்த படங்கள் அப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளாகவோ, குறிப்பிடத்தக்க கமர்ஷியல் படங்களாகவோ அமையவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு என்றபோதும், ஒரு ரசிகனாகத் தன் படங்களின் கதைகளை ஜீவா தேர்ந்தெடுக்கவில்லையோ என்ற கேள்வியும் அதிலொன்றாக இருக்கும் என்று நம்மை நினைக்கத் தூண்டியது.

அதற்குப் பதிலளிக்கும்விதமாகத் தற்போது ‘பிளாக்’ படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. பிரியா பவானிசங்கர் இதில் நாயகியாக வருகிறார்.

புதுமுக இயக்குனர் கே.ஜி.பாலசுப்பிரமணி எழுத்தாக்கம் செய்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இதற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்குகிறது?

ஒரு ‘சுழல்’ கதை!

வசந்த் (ஜீவா), ஆரண்யா (பிரியா பவானிசங்கர்) இருவரும் காதலர்கள். ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். உப்பளப்பாக்கம் பகுதியில் கடற்கரையோரமாக ஒரு வீடு வாங்கியிருக்கின்றனர்.

தனக்கு விடுமுறை என்பதால், வெளியூருக்குச் சுற்றுலா செல்லலாம் என்கிறார் வசந்த். ஆனால், தனக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது என்று மறுப்பு தெரிவிக்கிறார் ஆரண்யா. அதனால், வசந்த் மனம் கோணுகிறது.

வசந்தின் மனதை மாற்றுவதற்காக, ‘நாம் உப்பளப்பாக்கம் வில்லாவுக்கு செல்லலாம்’ என்கிறார் ஆரண்யா. அங்கிருந்தவாறே அலுவலகத்திற்குச் செல்வது அவரது திட்டம். அதன்படியே, இருவரும் அந்த வில்லாவுக்கு செல்கின்றனர்.

அந்த வில்லாவில் வேறு எவரும் குடி வரவில்லை. ஒரேயொரு ‘செக்யூரிட்டி’ மட்டும் இருக்கிறார். வெளியில் சென்று தேவையான பொருட்களை வாங்கி வரலாம் என்று ஆரண்யாவும் வசந்தும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கின்றனர்.

அங்கிருந்து வெளியேறுகையில், ஏற்கனவே தங்களோடு வம்பு செய்த இரண்டு பேரைப் பார்க்கிறார் வசந்த். அவர்களது பைக் கண்ணாடியை அடித்து உடைக்கிறார். அதனால், அவர்கள் ஆத்திரமடைகின்றனர்.

அன்றிரவு, அந்த வில்லாவில் ஆரண்யாவும் வசந்தும் தனியே இருக்கின்றனர். சூப்பர்மார்க்கெட்டில் இருந்து திரும்பி வருகையில், அங்கு செக்யூரிட்டி கூட இல்லை.

அதனைக் கண்டதும், மனதுக்குள் ‘ஏதோ ஒன்று நடக்கப் போகிறது’ என்பதாக உணர்கிறார் வசந்த். கொஞ்சம் குழப்பத்துடன் இருக்கிறார்.

அதனை உணரும் ஆரண்யா, அவரைப் பார்த்து ‘என்னாச்சு’ என்கிறார். ஆரண்யா. அப்போது, வினோதமாக ஒரு ஒலி கேட்கிறது. பிறகு, அங்கு மின்சாரம் தடைபடுகிறது.

அதனால், அந்த வில்லா நிர்வாகத்தினருக்கு போன் செய்கிறார் வசந்த். எதிர்முனையில் பேசும் நபர், ‘ஜெனரேட்டர் அறைக்குச் சென்று நீங்களே பட்டனை ஆன் செய்யலாம்’ என்கிறார்.

ஆரண்யாவை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, வசந்த் மட்டும் வெளியே செல்கிறார். அவர் சிறிது தூரம் சென்றபிறகு, ‘நானும் வருகிறேன்’ என்று ஆரண்யாவும் அவருடன் செல்கிறார்.

ஜெனரேட்டரை ஆன் செய்ததும் அங்கு விளக்குகள் ஒளிர்கின்றன. ஆரண்யாவும் வசந்தும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்.

அப்போது, யாரோ ஒருவர் தங்களைப் பார்த்ததாக உணர்கிறார் ஆரண்யா. அந்த இடத்திற்குச் சென்று பார்க்கும்போது, எவரும் இல்லை.

ஆனால், யாரோ வந்து சென்றதை உணர்கிறார் வசந்த். வீட்டுக்குள் வந்தபிறகும், அந்த எண்ணம் அவரை விட்டு விலகுவதாக இல்லை.

வீட்டு வாசலில் ஒரு ஓவியம் இருக்கிறது. அதனை யார் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார்கள் என்று தெரியவில்லை.

அப்போது, வசந்தின் மொபைல் ஒலிக்கிறது. அதனை எடுத்துக்கொண்டு, அவர் தனியே பால்கனிக்கு செல்கிறார்.

அப்போது, தங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் செடி அசைவதைக் காண்கிறார். கீழே வந்து பார்த்தால், அங்கு எவரும் இல்லை.

அதேநேரத்தில், தங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு வீட்டில் விளக்குகள் எரிவதைக் காண்கிறார் ஆரண்யா. அதனை வசந்திடம் சொல்கிறார்.

உடனே, அவர் மீண்டும் வில்லா நிர்வாகிக்கு போன் செய்கிறார். ’அப்படி யாரும் அந்த வீட்டுக்கு வரவில்லையே’ என்று எதிர்முனையில் இருப்பவர் சொல்ல, உடனடியாக எதிர்வீட்டுக்கு இருவரும் செல்கின்றனர்.

அங்கு, அவர்களைப் போலவே தோற்றம் கொண்ட இரண்டு பேர் இருக்கின்றனர். அச்சு அசலாக, அவர்களைப் போலவே அவர்கள் செயல்படுகின்றனர், பேசுகின்றனர்.

‘யார் இவர்கள், என்ன நடக்கிறது, எது எப்படிச் சாத்தியம்’ என்று புரியாமல் வசந்தும் ஆரண்யாவும் குழம்பித் தவிக்கின்றனர்.

ஒருகட்டத்திற்குப் பிறகு, ’அங்கிருப்பது ஆபத்து’ என்று இருவரும் காரில் ஏறிப் புறப்படுகின்றனர். ஆனால், அந்த தெருவை அவர்களால் தாண்ட முடிவதில்லை.

அந்த தெருவிலிருக்கும் சில வீடுகள் மட்டுமே அவர்களது பயண எல்லையாக இருக்கிறது. அவர்களால் அங்கிருந்து வெளியேற முடிவதில்லை.

அதனைக் கண்டு முதலில் குழம்பினாலும், ஒருவழியாகத் தெளிந்து சில வேலைகளைச் செய்கிறார் வசந்த். வெவ்வேறு கால இடைவெளியில் தங்களையே தாங்கள் திரும்பக் காண்பதாக உணர்கிறார்.

அது ஏன் என்று ஆராயும்போது, ஆரண்யா அவரை விட்டுப் பிரிந்து செல்கிறார்.

மீண்டும் ஆரண்யாவை வசந்த் கண்டறிந்தாரா? தங்களைச் சுற்றி நடக்கும் வினோதத்திற்கான காரணத்தை அவர்கள் அறிந்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கதையை முழுதாகச் சொன்னபிறகும் ஈர்ப்பு ஏற்படுகிற வகையில் இப்படம் அமைந்திருக்கிறது. காரணம், அதிலிருக்கும் மையச்சரடு.

ஒரு காலச் சுழல். அந்த சூழலுக்குள் தங்களையே தாங்கள் காண்கிற அனுபவம். அதனை விட்டு வெளியேற வேண்டுமென்ற துடிப்பு. அந்த தீர்வினை அடைய முடியாத விரக்தி என்று சுற்றிச் சுழல்கிறது ‘பிளாக்’. உண்மையைச் சொன்னால், இது நிறையவே குழப்பங்களைத் தருகிற ஒரு கதை.

முடிந்தவரை மனதுக்குள் ஓட்டிப் பார்த்து, அதற்குத் தீர்வு காண்கிற வகையிலேயே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்பிரமணி.

ஜீவாவா இது..!

அறிமுகப் பாட்டு, பில்டப் காட்சிகள், காதல் ரசம் பொங்குகிற தருணங்கள் என்று கமர்ஷியல் திரைப்படங்களுக்கே உரிய விஷயங்களைத் தியாகம் செய்துவிட்டு, கதைக்கு நியாயம் செய்கிற ஒரு படத்தை ஏற்றிருக்கிறார் ஜீவா. அதுவே ‘ஜீவாவா இது’ என்ற வியப்பைத் தருகிறது.

‘லிவ் இன்’னில் வாழ்பவர்கள் என்பதைத் தாண்டி வசந்த், ஆரண்யா பாத்திரங்களின் குணாதிசயங்கள் திரைக்கதையில் இடம்பெறாத காரணத்தால், அதற்கேற்றவாறு ‘ப்ளாட்’டாக ஜீவாவும் பிரியா பவானிசங்கரும் நடித்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் வரும் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஆர்ஜே ஷரா, பிரியாவின் தோழியாக வரும் ஸ்வயம் சித்தா, இன்ஸ்பெக்டராக வரும் யோக் ஜேபி, பிளாஷ்பேக்கில் வரும் விவேக் பிரசன்னா உட்படச் சுமார் ஒரு டஜன் பேர் நடித்திருக்கின்றனர். அவர்களைத் தனித்தனியே குறிப்பிடும் அளவுக்குக் காட்சிகள் இல்லை. பெரும்பகுதியை நாயகன் நாயகியே லவட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கருப்பு, சாம்பல், நீலம் மற்றும் மஞ்சள், பழுப்பு, வெளுப்பு என்று குறிப்பிட்ட வண்ணங்களே திரையில் பிரதானமாக வரும் வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் கோகுல் பினோய். விஎஃப்எக்ஸ் உறுத்தலாகத் தெரியாதவாறு, திட்டமிட்டு கேமிரா கோணங்களை அமைத்திருக்கிறார்.

இரண்டு ஜீவா சண்டையிடுவது போன்ற காட்சியில் அவரது ஒளிப்பதிவு வியக்க வைத்திருக்கிறது.

கதையின் மையம் பலவீனமாக இருந்தாலும், காட்சிரீதியாகக் குழப்பம் ஏற்படாத வகையில் முடிந்தவரை தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

கொஞ்சம் தாமதமாகத் திரையரங்கில் நுழைந்தவர்கள், கதையின் மையத்தை அணுகாதவர்கள் அவரைத் திட்டுவது நிச்சயம்.

ஒரு கற்பனை உலகைக் காட்டும் வகையில் சதீஷ்குமாரின் கலை இயக்கம் அமைந்துள்ளது.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை இப்படத்தின் மிகப்பெரிய பலம். திரையில் இரு பாத்திரங்களே வந்து போனாலும், அதனைக் குறையாக எண்ணவிடாமல் தடுப்பதில் அது முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

இது தவிர இதர தொழில்நுட்ப அம்சங்களும் இதில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் கே.ஜி.பாலசுப்பிரமணியின் வரவு வரவேற்கத்தக்கதாக உள்ளது.

குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்!

’பிளாக்’ திரைப்படம் ‘coherence’ என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஆனால், அந்த படம் குறித்து இணையத்தில் தேடினால் சில தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு குழுவினர் இதே போன்றதொரு அனுபவத்தை எதிர்கொள்வதாக, அப்படத்தின் கதை இருக்கிறது. அந்த வகையில், அதன் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கதை என்று இதனைச் சொல்லலாம்.

இரு நபர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் இறந்துபோனால் அல்லது காணாமல் போனால் அந்த வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும். சேர்ந்து வாழ்ந்தால் வேறுவிதமாக இருக்கும். இரண்டுமே நிகழ்வதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?

குறிப்பிட்ட பௌர்ணயின்போது மட்டும் அந்த விஷயம் ஏன் நிகழ்கிறது என்பதைக் கதையில் விலாவாரியாக விளக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்.

’குவாண்டம் இயற்பியல்’ படித்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம். சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் அந்த விளக்கம் இல்லை. அந்த இடத்தில்தான், நம் மூளையில் குழப்பம் ‘குத்தாட்டம்’ போடுகிறது. அதனை விளக்கும்விதமாக, இக்கதையில் பாத்திரங்கள் அமைக்கப்படாதது ஒரு குறை.

இரண்டாவது, அதனைத் தெரிந்துகொண்டு ரசிகர்கள் படம் பார்க்கும் அளவுக்கு, அந்த கோட்பாடு எளிமையானதல்ல. அது இன்னொரு குறை.

அதனால், இக்கதை நிச்சயம் குழப்பம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதையும் மீறி ஜீவா, பிரியா பவானிசங்கர் பாத்திரங்கள் தங்களைப் போன்ற பாத்திரங்களைக் கண்டு என்ன செய்தன என்று அறியச் செய்யும் வகையில் திரைக்கதையின் முன்பாதியும் பின்பாதியும் மிகச்சரியாக இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமே இப்படத்தின் யுஎஸ்பியாக இருக்கிறது.

‘டைம்லைன்’, ‘லூப்’ போன்ற விஷயங்களைக் கொண்டு வெளிநாடுகளில் சில ‘சயன்ஸ் பிக்‌ஷன்’ படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்துக் குழம்பியவர்களுக்கு, இப்படம் பெரிதாகக் குழப்பம் தராது. அப்படியானால், மற்றவர்கள் கதி? இது போலப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like