சாம்பலும் வெள்ளையுமான நிறம். உச்சிக்கொண்டை இருக்கிறது. கிளி போலக் கீச்சிடுகிறது. யார்வீட்டு வளர்ப்புப் பறவையாகவும் இருக்கும். தப்பி எங்கள் வீட்டு விரிப்பு மேல் அமர்ந்திருந்தது.
பயம், பதற்றம் எதுவுமில்லை. தண்ணீர், கோதுமை, அரிசி வைத்தோம். எடுத்துக் கொள்ளவில்லை. நகர்ந்து நகர்ந்து என் பாதத்திற்கு வந்தது. வேட்டியைப் பற்றி மேலேறி, மேல்சட்டையணியாத என் தோளில் வாக்காக, அதுதான் அது இடம் அல்லது அதன் வளர்ப்பனின் செல்ல இடம் இடம் என உட்கார்ந்துகொண்டது.
பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்கள் அங்கேயே இருந்தது. நான் இடம் மாறி அமர்ந்தாலும் அது தோளை விட்டு நகரவில்லை.
பக்கத்து அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் இந்தப் படங்களை எடுத்தார். இன்னொரு பெண் ஊழியர் என் பின் பக்கமாக வந்து அதைப் பொத்திப் பிடித்து எடுத்துக்கொண்டார்.
கிளிச் சத்தம்தான் அவர் போகும்போது கேட்டது. கிளி பச்சை நிறத்தில் அல்ல, கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும்போலும். எங்கோ ஒரு வீட்டு வளர்ப்புக் கூண்டு திறந்துகிடக்கும். வளர்ப்பர்கள் கீச்சிட்டுக் கூப்பிட்டபடி இருப்பார்கள். கீ…கீ..கீ..
நன்றி: முகநூல் பதிவு