“நடிப்புத் திறன், குரல் வளம், இந்த ஸ்கூட்டர், என் குடும்பம்… இவ்வளவுதான் என் சொத்து!” – என்கிறார் வீதி நாடகக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், கிராமியப் பாடகர் என பல அவதாரங்களைக் கடந்து சினிமா நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் உசிலம்பட்டி சித்திரசேனன்.
ஏலே, நண்பகல் நேரத்து மயக்கம், மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்களின் வரிசையில், வரவிருக்கும் மூன்று படங்களில் நடித்துள்ள சித்திரசேனனிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி.
உங்களால் வேறு என்னவெல்லாம் செய்ய முடியும்?
அம்மாவோட தாலாட்டு, சினிமாப் பாடல்கள், முளைப்பாரி குலவைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்னு கேட்டு கிராமியக் கலைஞனா ஜெயிச்ச என்னால, சினிமா தர்ற எல்லா வாய்ப்புகள்லேயும் சாதிக்க முடியும்!
“மேடையில நிற்கிறது. திரையில வந்து போறது” – இந்த இரண்டுல உங்க மனசுக்கு நெருக்கமானது?
கற்பனையை பிரமாண்டமா காட்சிப்படுத்துற சினிமா முன்னாடி, மேடை ஏறி நிற்கிற பாத்திரங்கள் சாதாரணம்தான். ஆனால், யதார்த்த வாழ்க்கையை நாடகங்கள், கிராமியப் பாடல்களால மட்டும்தான் மிகையில்லாம சொல்ல முடியும்!
‘கலைஞனைக் கலை கைவிடாது’ன்னு சொல்றாங்களே…!
நானும் சிறந்த கலைஞன்தான்; தொடர்ந்து 60 மணி நேரம் வீதி நாடகத்துல நடிச்சிருக்கேன்; இயக்குநர் பாரதிராஜா முன்னாடி 1999ல் இந்த கின்னஸ் சாதனை படைச்சேன். ஆனாலும், பல நாட்கள் சும்மா தான் இருக்குறேன்!
ஆத்ம திருப்தி தந்த அங்கீகாரங்கள்?
நாட்டுப்புற கலைகள் அரங்கேறுன மேடையில அப்துல் கலாம் ஐயாகிட்டே கிடைச்ச பாராட்டு; சிறப்புக் குழந்தைகள் என் நிகழ்ச்சிக்கு தந்த கரவொலி; மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றிக்கு அப்புறம், நான் படிச்ச சென்னை லயோலா கல்லுாரி எனக்கு தந்த மேடை இதெல்லாமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்கள் தான்.
சித்திரசேனன் சூழ்நிலைக் கைதியா?
‘சிறந்த நாடக நடிகர் / நாட்டுப்புறக் கலைஞர் / கிராமிய இசைக் கலைஞர்’ பட்டங்கள் இருந்தும் பொருளாதார நிறைவு இல்லை; இதனால், தேடி வர்ற எந்த ஒரு வாய்ப்பையும் தவிர்க்கிறதில்லை. அப்படிப் பார்த்தால் சித்திரசேனன் ஒரு சூழ்நிலைக் கைதிதான்.
நன்றி: தினமலர்.