தமிழ் சினிமா நூறு ஆண்டுகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு விதமான நடிகர்களை இந்த தமிழ் சினிமா கண்டுள்ளது.
ஆனால், ஆழமான நடிப்பை வெளிக்காட்டி சினிமாவிற்கு தன்னை அர்ப்பணித்த நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் தான் பூர்ணம் விஸ்வநாதன்.
நடிகராக ஒருவர் களமிறங்கினால் அவரின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நடிக்க வேண்டும். முகபாவனைகளும், உணர்ச்சி வெளிப்பாடுகளும் மிகவும் முக்கியமாகும். அதனை தெள்ளத் தெளிவாக எளிதில் செய்யக் கூடியவர் விஸ்வநாதன்.
இவர் நடித்த திரைப்படங்களில் மறக்க முடியாத அளவிற்கு தனது கதாபாத்திரத்தை ஆணித்தனமாக பதிக்கக்கூடியவர்.
ஆசை, நினைத்தாலே இனிக்கும், மகாநதி உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது கதாபாத்திரத்தில் மக்களிடத்தில் தெளிவாக எடுத்துரைத்த படங்களாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய மூத்த அண்ணன் பூர்ணம் ராமச்சந்திரன் அகில இந்திய வானொலியில் சென்னை நிலையத்தில் வேலை செய்து கொண்டுள்ளார்.
அண்ணனின் உதவியால் தன்னுடைய 24 வயதில் விஸ்வநாதன் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் மக்களுக்கு தெரிவித்தவர் இவர்தான். செய்தியாளராக பணியாற்றினாலும், பல்வேறு விதமான மேடை நாடகங்களில் நடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது நாடக விழா ஒன்றிற்கு எழுத்தாளர் சுஜாதா வந்துள்ளார். அச்சமயம் நாடக கலைஞர் பூர்ணம் விஸ்வநாதனின் சுஜாதாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தான் எழுதிய நாடகம் ஒன்றை சுஜாதாவிடம் விஸ்வநாதன் கொடுத்துவிட்டு இதைப் படித்துப் பாருங்கள் எனக் கூறியுள்ளார். அதனை படித்துவிட்டு சுஜாதா நீங்கள் உடனே சென்னை வந்து விடுங்கள் என கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த விஸ்வநாதன் ஒவ்வொரு நாடகமாக நடித்து பூர்ணம் நியூ தியேட்டர் என்ற குழுவைத் தொடங்கியுள்ளார். பல்வேறு விதமான நாடகங்கள் நடித்து, நாடகத்தின் மூலமாகவே பல ரசிகர்களை இவர் பெற்றிருந்தார்.
அதன் பின்னர் நாளடைவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனது காலடித்தடத்தைப் பதித்தார்.
அனைத்து விதமான உணர்ச்சிகளையும் முகத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடிய சொற்ப கலைஞானம் பெற்ற நடிகர்களில் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்.
இன்று இவரின் 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கலையைத் தாயாக ஏற்றுக்கொண்ட எவருக்கும் அழிவில்லை என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய உதாரணம்.
- நன்றி: பிரசாந்த் செல்வம், சிவ செல்வம்