மிதுன் சக்கரவர்த்திக்கு ‘தாதாசாகேப் பால்கே‘ விருது!

1976-ம் ஆண்டு வெளியான ‘மிர்கயா’ என்ற இந்திப் படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மிதுன் சக்கரவர்த்தி. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

வங்காளம், பஞ்சாபி, ஒடியா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

‘டிஸ்கோ டான்சர்‘ படம் மூலம் மிதுன் சக்கரவர்த்தி பட்டித்தொட்டி எங்கும் பிரசத்தி பெற்றார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘டிஸ்கோ டான்சர்’ பாடல் இன்றளவும் பிரபலமானது.

1989-ம் ஆண்டு  19 சினிமாக்களில்  நடித்து ‘லிம்கா‘ சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர். இதுவரை மிதுன், 300-க்கும் அதிகமான சினிமாக்களில் நடித்துள்ளார்.

அரசியலிலும் அவர் பயணித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிதுன், 2021-ம் ஆண்டு  முதல் இப்போது வரை பாஜகவில் செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே அவருக்கு மத்திய அரசின் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் – ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய சினிமாவுக்கு மிதுன் சக்கரவர்த்தி அளித்த பங்களிப்புக்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது – அவரது திரையுலகப் பயணம் அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகமாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

மிதுன் சக்கரவர்த்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ‘மிதுன் சக்கரவர்த்தி இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

வரும் 8-ம் தேதி நடைபெறும் 70-வது தேசிய விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்கரவரத்திக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சினிமாவில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு ‘தாதா சாகேப்‘ விருதை மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி கவரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 – பாப்பாங்குளம்  பாரதி

You might also like