‘ஆந்திரா மெஸ்ல கோங்குரா சட்டினி, ஆவக்காய் ஊறுகாய், ப்ரைடு கறிஸ், மோர்குழம்பு, பருப்பு, ஆம்லெட் சகிதம் கொஞ்சமா நான்வெஜ் கறி சேர்த்து சாப்பிட்ட பிறகு ஒரு தூக்கம் வரும் பாரு’ என்று சிலாகிக்கும் அளவுக்கு என்றைக்காவது சாப்பிட்டிருக்கிறீர்களா?
அப்படிச் சாப்பிட்டிருந்தால், வயிறு நிறைந்து கண்கள் கலங்கி மூளை மயங்கித் திரியும் அந்த கணத்து அனுபவம் என்னவென்று தெரியும். அதையே மூன்று வேளையும் தினமும் சாப்பிடச் சொன்னால் திக்கித் திணறுவதுதான் நம்மவர்களின் வழக்கம்.
‘ஆனா அதுதான் எங்க வழக்கம்’ என்று ஒருவர் சொன்னால், அதனைக் கேட்பவருக்கு எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு ‘எபெக்டை’ உருவாக்கவல்லவை தெலுங்கு திரைப்படங்கள்.
அதில் நிறைந்திருக்கும் கார நெடியைச் சகிக்கவும் ரசிக்கவும் தனி ‘தைரியம்’ வேண்டும்.
‘அது உங்களிடம் இருக்கிறதா’ என்று கேட்கும்விதமாக வெளியாகியிருக்கிறது இயக்குனர் கொரட்டாலா சிவாவின் ‘தேவரா’.
சமகாலத் தெலுங்கு கமர்ஷியல் பட இயக்குனர்களில் முதன்மை பெற்றிருக்கும் சிலரில் இவரும் ஒருவர்.
சிரஞ்சீவி, ராம்சரணை வைத்து இயக்கிய ‘ஆச்சார்யா’ பப்படம் ஆன நிலையில், அவர் அடுத்ததாகத் தந்திருக்கும் படமே இது.
‘தேவரா’வில் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், ஸ்ருதி மராதே, சையீஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்படப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த ‘மசாலா’ எண்டர்டெயினர் தரும் அனுபவம் எப்படிப்பட்டது?
‘கேஜிஎஃப்’ டைப் தொடக்கம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. அதன் தொடக்கவிழாவில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஆனால், அதில் வன்முறையை ஏற்படுத்த தயா, யதி தலைமையிலான கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைக்கிறது.
யதி எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடியாள் ஒருவரை சிறப்புப் படையினர் கைது செய்கின்றனர்.
அவரிடம் சிறப்பு படை தலைவர் சிவம் (அஜய்) விசாரணை மேற்கொள்கிறார். அப்போது, இறுதியாக முருகன் என்பவரை யதி சந்தித்ததாகத் தகவல் கிடைக்கிறது.
அந்த முருகன் தற்போது உயிரோடு இல்லை. ஆனால், அவரோடு நட்போடு திரிந்த டிஎஸ்பி துளசியை (அபிமன்யு சிங்) அப்படையினர் சந்திக்கின்றனர்.
அவர் மூலமாக, ரத்னகிரி பகுதியில் கடலில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தல் வேலைகளைச் செய்யும் நான்கு கிராமத்தினரைப் பற்றித் தகவல் கிடைக்கிறது.
ரத்னகிரி செல்லும் அப்படையினர், அங்கு அக்கும்பல்களின் தலைவனான பைராவை (சையீஃப் அலிகான்) நேரில் சந்திக்கின்றனர்.
கடத்தல் தொழில் செய்வதாகத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தங்களுக்காக கடலில் இருக்கும் கப்பலில் இருந்து சில கண்டெய்னர்களை கடத்த வேண்டும் என்கின்றனர்.
அவர் மறுக்கவே, மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால், அவரோ தன்னைத் தேடி வந்த போலீஸ் அதிகாரிகளைத் தாக்குகிறார்.
அதன்பிறகு, அந்த சிறப்புப்படையினரைச் சந்திக்கிறார் சிங்கப்பா. அவரிடம், யதி பற்றிக் கேள்வி எழுப்புகிறார் சிவம்.
அதற்குப் பதில் சொல்வதை விட்டு, ’தேவரா யார் தெரியுமா’ என்று ஒரு கதையைச் சொல்கிறார் சிங்கப்பா.
தேவராவுக்கும் (என்.டி.ஆர்) கடத்தல் தொழில் செய்யும் பைரா கும்பலுக்கும் இடையிலான உறவு எத்தகையது? தேவராவின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர்? அவர் எங்கிருக்கிறார்? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிங்கப்பா.
தான் சொல்லும் கதையில் மிகப்பெரிய திருப்பத்தைக் குறிப்பிட்டுவிட்டு, பெருமூச்சு விடுகிறார் சிங்கப்பா. அத்தோடு ’தேவரா முதல் பாகம்’ படம் முடிவடைகிறது.
இந்தக் கதையில் மனைவி, மகன், மகள், தாய் சகிதம் வசித்து வரும் தேவரா, மலை மீதிருக்கும் நான்கு கிராம மக்களுக்கும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று விரும்புகிறார். அதற்கு இடையூறு நேர்வதாக அறியும்போது, இத்தனை நாள் இணக்கமாகப் பழகியவர்களையே எதிர்க்கத் துணிகிறார். இது ஒரு பக்கம் நீள்கிறது.
இன்னொரு புறம் அந்த தேவராவின் மகனான வரா (என்.டி.ஆர்) தந்தையைப் போலல்லாமல் கோழையாக வளர்வதாகக் கிளைக்கதை உண்டு.
ஆக மொத்தத்தில், சிங்கப்பா சொல்லும் கதையில் இன்னும் நிறைய மீதமிருப்பதை உணர்த்துகிறது இந்த முதல் பாகம்.
தொடக்கத்தில் காட்டப்படும் டெல்லி நிலவரம், அதனைத் தொடர்ந்து சிங்கப்பா கதை சொல்லும் காட்சிகள், அதன் வழியே தெரியவரும் தேவராவின் பின்னணி என்று இப்படம் முழுக்கவே ‘கேஜிஎஃப்’ வாசனை அதிகம்.
அதேநேரத்தில், அதே பாணியில் இது கேங்க்ஸ்டர் படமாக இல்லாமலிருப்பது ஆறுதல் தரும் விஷயம்.
அற்புதமான விஎஃப்எக்ஸ்!
‘காதில் பூ சுற்றும் கதைகளில் தேவராவும் ஒன்று’ என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். போலவே, இதில் நாயக துதிபாடுதலும் மிக அதிகம். அதையும் தாண்டி இப்படத்தை ரசிக்க வைப்பது இதன் ‘மேக்கிங்’.
படத்தில் விஎஃப்எக்ஸ் பங்கு மிக அதிகம்.
கடலில் கடத்தல் வேலைகளைச் செய்யும் சிலர், அக்கடலையொட்டிய மலைப்பகுதி கிராமங்களில் வாழ்கின்றனர் என்று கதை சொல்வதே கொஞ்சம் அபத்தமானதுதான்.
ஆனால், அதனை நம்பும்படியாகத் திரையில் காட்ட மெனக்கெட்டிருக்கிறது விஎஃப்எக்ஸ் குழு. குறிப்பாக, நீருக்கடியில் நிகழ்வதாகச் சொல்லப்படும் சில ஷாட்கள், காட்சிகள் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் எடுக்கப்பட்டிருந்தாலும், இறுதியாகத் திரையில் தெரியும் வடிவம் இப்படித்தான் இருக்குமென்ற கணிப்போடு ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் ஆர்.ரத்னவேலு. டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை உணர்ந்து அவர் செயல்பட்டிருக்கிறார் என்பது திரையைப் பார்க்கும்போது நம்மில் எவ்வித ‘ஜெர்க்’கும் ஏற்படாமல் இருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
என்ன, படம் முழுக்க ‘நீல வண்ணம்’ தென்படுவது பல வண்ணங்கள் நிறைந்த தெலுங்கு சினிமா பார்த்த திருப்தியைத் தருவதாக இல்லை.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், காட்சியாக்கத்திற்கு ஏற்ற வகையில் ஒரு உலகத்தைத் திரையில் காட்ட உதவியிருக்கிறார். ‘முழுக்க கற்பனையான கதை’ என்பதால், யதார்த்தத்திற்கு பதிலாக ‘பேண்டஸி’ உலகமொன்றை ஆக்கிக் காட்ட முயன்றிருக்கிறார்.
நீட்டி முழக்கிக் கதை சொல்லும் பாணியை இயக்குனர் கையாண்டிருந்தாலும், முடிந்தவரை படத்தை இறுக்கமாகத் தொகுத்திருக்கிறார் ஏ.ஸ்ரீகர் பிரசாத். அதேநேரத்தில், பெரிதாக ‘ஜம்ப்’ இல்லாத அளவுக்கு காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத், வழக்கம்போல இளையோர் ‘கூஸ்பம்ஸ்’ ஆகும் அளவுக்கான பின்னணி இசையை, பாடல்களைத் தந்திருக்கிறார்.
ஆடை வடிவமைப்பைப் பொறுத்தவரை, நாம் கற்பனை உலகமொன்றைக் காண்கிறோம் என்பதை அடிக்கொரு முறை உணர்த்துகிறது.
இன்னும் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சரிவரக் கையாளப்பட்டிருக்கின்றன. சண்டைக்காட்சி வடிவமைப்பு அவற்றில் ஒன்று.
என்.டி.ஆர். இதில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தைத் தனது உடல்மொழி அசைவில் காட்டியிருப்பது சிறப்பு.
‘ஓம்காரா’ போன்ற படங்களில் சையீஃப் அலிகானை வில்லனாகப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் ஆச்சர்யம் தராது. அதே நேரத்தில், இதில் அவருக்கு உரிய முக்கியத்துவமும் தரப்படவில்லை.
சையீஃபுக்கே அந்தக் கதி என்பதால் நம்மூர் கலையரசன், ஷைன் டாம் சாக்கோ, முரளி சர்மா, அஜய், அபிமன்யு சிங், நரேன் உள்ளிட்டோருக்குத் திரையில் பெரிதாக வேலைகள் இல்லை.
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் கூட விரல் விட்டு எண்ணும் அளவுக்குச் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். கௌரவ வேடம் போலத் தலைகாட்டியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
ஸ்ருதி மராதே இதில் என்.டி.ஆர்.ஜோடியாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் இல்லையென்றபோதும், அவரது முகம் நம் மனதில் பதியும் அளவுக்குக் காட்சிகள் உண்டு. போலவே, ஜரினா வஹாபும் முக்கியப் பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார்.
ஜான்வி கபூருக்கு இது அறிமுகப்படம் (தெலுங்கில்). ஆனால், அந்த முக்கியத்துவம் இதில் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவரது கவர்ச்சித் தோற்றம் ரசிகர்களை வசீகரிக்கும் என்று நம்பியிருக்கிறது படக்குழு. அது வீண் போகவில்லை.
இவர்கள் தவிர்த்து ஆங்காங்கே காமெடி செய்யும் கெட்டப் ஸ்ரீனு, ஹரி தேஜா என்று சிலர் இப்படத்தில் உண்டு.
மனிதர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே பிரமாண்டமான படம் என்ற அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. அதையும் மீறி செட்கள், விஎஃப்எக்ஸ் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
ஒரு புதிய அனுபவம் என்ற வகையில், ‘தேவரா முதல் பாகம்’ நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. அது மட்டுமே இயக்குனர் கொரட்டாலா சிவாவின் வெற்றி. ஆனால், இது மீண்டும் மீண்டும் காணத்தக்க கமர்ஷியல் படமா என்று கேட்டால் ‘இல்லை’ எனச் சொல்லியாக வேண்டும். அது, இப்படத்தின் முக்கியப் பலவீனம்.
எப்படிப்பட்ட அனுபவம்?
சண்டைக் காட்சிகளை விரும்பிப் பார்ப்பவர்களை ‘தேவரா முதல் பாகம்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதற்கேற்ற ‘மொமண்ட்கள்’ இதில் இருக்கின்றன. பெரும்பாலான காட்சிகளில் என்.டி.ஆர். இடம்பெறுவதால், அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம்.
ஜான்வி கபூர் – என்.டி.ஆர். ஜோடியை ரசிப்பவருக்கு ஏற்ப பின்பாதியில் சில பாடல்கள், ஒரு சில காட்சிகள் இருக்கின்றன. அதேநேரத்தில், இதில் நகைச்சுவை சிலாகிக்கும்படியாக இல்லை.
சென்டிமெண்ட் காட்சிகளில் நடிகர் நடிகைகள் அழுகின்றனரே தவிர, அதனைக் காணும் நம் கண்களில் நீர் சுரப்பதாக இல்லை.
இப்படத்தில் வில்லன்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. சமீபகாலமாகப் பெருவெற்றி பெற்ற படங்களில் அந்த குறைபாடு களையப்பட்டிருந்ததை ஒப்பிட்டால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மீன் பிடித்தலில் ஈடுபடும் மனிதர்கள் சிலரைக் காட்டுகிறது இக்கதை.
ஆனால், அவர்கள் ஏன் மலை மீதிருக்கும் வனம் சூழ்ந்த காடுகளில் வசிக்கின்றனர் என்பதற்குத் திரைக்கதையில் பதில் சொல்லப்படவில்லை. அதனால், மொத்தப்படத்திலும் ‘செயற்கைத்தனம்’ நிறைந்து வழிகிறது.
மிக முக்கியமாக, இந்தப் படத்தின் தொடக்கத்தில் வரும் யதி, தயா பாத்திரங்கள் பற்றிய தகவல்களோ, காட்சிகளோ இதில் இல்லவே இல்லை.
அதனால், இரண்டாம் பாகத்திற்காகவே அக்காட்சிகளைச் சேர்த்தாற் போலிருக்கிறது.
இப்படிப் பல எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், ‘தேவரா ஒரு வழக்கமான தெலுங்குப்படமாகத் தோற்றமளிக்கவில்லை’ என்பது மறுக்க முடியாத உண்மை.
’அப்படியொரு வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் பட அனுபவத்தைப் பெறலாமே’ என்பவர்கள் ‘தேவரா’வைத் தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்!
ஏற்கனவே சொன்னது போல, இப்படம் காரசாரமான ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்ட அனுபவத்தைத் தரும். காரநெடியின் உச்சத்தில், கண்களில் நீர் வடிய, சாப்பாட்டை அள்ளியிறைப்பது அவரவர் பாடு!
– உதயசங்கரன் பாடகலிங்கம்