இலங்கையின் புதிய அதிபருக்கு முன்னுள்ள சவால்கள்!

அரை நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்திய சுரண்டல்களால் என இலங்கை மக்கள் சொல்லொன்னா இனப்படுகொலைகளையும் துயரங்களையும் அனுபவித்தனர். இதற்கு எதிராக நீண்ட நாட்கள் போராட்டங்களை நடத்திய இடதுசாரி கட்சி வெற்றிபெற்று உள்ளது.

சமத்துவ கொள்கைகளை நிலைநாட்ட தொடர்ந்து போராடிய சரியான நபர்களையே இலங்கை மக்கள் ஜனநாயக முறைப்படி வெற்றிபெறச் செய்திருப்பது வரலாற்று சிறப்பாகும்.

இலங்கையில் நடந்த வலிகளுக்கு புதிய அதிபர் தோழர் அனுரகுமார திஸ்ஸநாயக்க நிச்சயம் நிவாரணம் காண்பார்.

ஆனால், வெளியில் இருக்கும் சுயநலவாதிகள் மீண்டும் தொடர் வேதனைகளை உருவாக்க முயற்சி செய்யலாம். இதை சரியான உத்திகளைப் பயன்படுத்தி முறியடிப்பது பெரும் சவாலாகவே இருக்கும்.

துயரமிகு இலங்கையின் கொடூரங்களுக்கு அடிப்படை பேரினவாத விஷ விதை விதைக்கப்பட்டதே காரணம்.

இதை திட்டமிட்டு இளைஞர்களிடத்தில் உரம் போட்டு விதைத்தவர்களை அடையாளப்படுத்தி உணர செய்வது ஜனநாயகக் கடமை.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களின் பங்கு முக்கியமானதாகும். ஆனால், அதைவிட மிக முக்கியமானது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இரத்தமும் வேர்வையும்.

இம்மக்களின் இருநூறு ஆண்டுகள் வரலாற்று சோகம் தொடர்கின்றது. இலங்கை – இந்திய நாடுகளின் சுயநல அரசியலுக்காக ஶ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவிற்கு நாடு கடத்தபட்டோம்.

இந்தியாவில் அறுபது ஆண்டுகள் ஆகியும் முறையான மறுவாழ்வுகள் செய்யப்படவில்லை. ஆயிரக்கணக்கான தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து எதிர்கால வாழ்வு கேள்விகுறி யாகவே மாறியுள்ளது.

இந்த வரலாற்றுச் சோகம் தொடர்கின்றது. இதேபோல் இலங்கையிலும் இம்மக்களின் துயரம் தொடர்கின்றது. சந்தா அரசியல் மாற்றப்பட வேண்டும்.

தங்களது எண்ணப்படி இலங்கையில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சிந்தனையுடன் செயல்பட வாழ்த்துகிறோம்.

இதற்கு சர்வதேச பாட்டாளிச் சமூகம் தங்களது முற்போக்கு ஆட்சிக்கு ஒத்துழைப்பை கொடுக்கும்.

அனைத்து இனங்களும் ஒற்றுமையுடனும் பொருளாதார சமத்துவத்துடன் நாட்டு மக்கள் வாழ புதிய அரசு முயற்சி எடுக்கும் என நம்புவோம்.

ஒரே நாடு, இரு மொழிக் கொள்கை வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும்.

இடதுசாரி புரட்சி அதிபர் அனுராவுக்கு, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மற்றும் இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துகள்.

 – M.S.செல்வராஜ், VTMS, இந்தியா.

You might also like