ஹிட்லர் – ரொம்பவே ‘பழைய’ வாசனை!

‘நான்’ தொடங்கி ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ‘கொலைகாரன்’ என்று டைட்டிலோடு சேர்த்து வித்தியாசமான திரையனுபவத்தையும் தந்தன விஜய் ஆண்டனியின் படங்கள். அப்படங்களில் அவரது உருவத்திற்கேற்ற பாத்திர வார்ப்பு அமைந்திருப்பதைக் காண முடியும். அந்த ‘பார்முலா’வில் இருந்து விலகி வேறுபட்ட பாத்திரங்களில், வழக்கமான கதைகளில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த ஆண்டு மட்டும் ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று இரு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியிருக்கின்றன. அதில் மூன்றாவதாக இணைந்திருக்கிறது ‘ஹிட்லர்’.

தனா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இணை இதற்கு இசையமைத்துள்ளது.

சரி, இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

அடுத்தடுத்த கொள்ளைகள்!

மலைப்பிரதேசக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் ஊருக்குச் செல்ல ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. அங்கு பாலமோ, உரிய பாதையோ இல்லை. அதனைக் கடக்கும்போது வெள்ளம் அதிகமாகி, அதில் அவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். அதன்பின், அவர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

அந்தக் காட்சிக்குப் பிறகு, செல்வா (விஜய் ஆண்டனி) எனும் நபர் வீடு தேடி கற்குவேலைத் (ரெடின் கிங்ஸ்லி) தேடிச் செல்கிறார். வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க வந்திருப்பதாகவும், ஒரு மாதம் மட்டும் வேலை இருப்பதாகவும் கூறி, அவருடன் தங்குகிறார். ஆனால், கற்குவேலுக்கு அவர் யார் என்றே தெரியவில்லை.

ஒருநாள் தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலில் ஏற முயற்சிக்கிறார் செல்வா. அப்போது, அவர் மீது சாரா (ரியா சுமன்) எனும் பெண் மோதுகிறார். அதனால், படிகளில் உருண்டு விழுந்து செல்வாவுக்குக் காயம் ஏற்படுகிறது. அந்தக் கணத்தில் சாராவைப் பார்த்ததும் அவருக்குள் காதலும் முளைக்கிறது.

அன்றைய தினம், அந்த ரயிலில் அமைச்சர் ராஜவேலுவின் (சரண்ராஜ்) ஆட்கள் கொண்டு செல்லும் 120 கோடி ரூபாய் பணம் ஒரு நபரால் கொள்ளையடிக்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர், தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக அது எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அதே நாளில் ராஜவேலுவின் ஆட்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இதேபோல, அடுத்த முறையும் ராஜவேலு அனுப்பும் பணம் அதே நபரால் கொள்ளையடிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் அவரது தரப்பு பதற்றமடைகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் டெபுடி கமிஷனர் சக்தி (கௌதம் வாசுதேவ் மேனன்) தலைமையில் ஒரு குழு விசாரணை செய்து வருகிறது.

இந்த இடைவெளியில் சாரா பார்த்து வந்த ஐடி நிறுவன வேலை பறிபோகிறது. அவருக்கும் செல்வாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காதலாக மாறுகிறது. அப்போது, செல்வா ஒரு வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றுவது அவருக்குத் தெரிய வருகிறது.

அந்த காதல் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்று சாரா கருதும்போது, ரயில்நிலையத்தில் ராஜவேலுவின் அடியாள் ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். அந்த குண்டு செல்வாவின் மீது பாய்கிறது. அதேநேரத்தில், செல்வா அருகே டெபுடி கமிஷனர் சக்தி (கௌதம் வாசுதேவ் மேனன்) இருக்கிறார்.

அந்த நபர் எதற்காகத் துப்பாக்கியால் சுட்டார்? ராஜவேலுவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? இந்தக் கதையில், மலைப்பிரதேச கிராமத்து மக்களின் பங்கு என்ன?

மேற்சொன்னவற்றில் இருந்தே, தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் ஒருவரால் இதன் கதையை யூகிக்க முடியும். அந்த யூகிப்பு கொஞ்சம் கூடப் பிசகாத அளவுக்கு, ‘க்ளிஷே’க்களின் தொகுப்பாக ‘ஹிட்லர்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் தனா.

இந்தக் கதையில், தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்படுவது தான் ஹைலைட். ஆனால், அந்த காட்சிகளில் ‘பில்டப்’ கொஞ்சம் கூட இல்லை.

அது மட்டுமல்லாமல் படம் முழுக்கவே ‘பழைய வாசனை’ அடிக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதுவே.

சிரத்தையும் நேர்த்தியும்..!

விஜய் ஆண்டனி படம் முழுக்க ‘விக்’ வைத்து நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் நாம் ‘ஜெர்க்’ ஆவதற்கு அதுவே முக்கியக் காரணம்.

மற்றபடி சண்டைக்காட்சிகள், நடனக் காட்சிகளில் ‘இம்ப்ரூவ்மெண்ட்’ காட்டியிருக்கிறார். சிரித்த முகமாக வர முயற்சித்திருக்கிறார். அதையும் மீறி, ‘சலீம் டைப் ரோல்தான் உங்களுக்கு செட் ஆகும்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது படத்தில் அவரது இருப்பு.

ரியா சுமன் இதில் நாயகி. அழகான தோற்றத்தோடும் ஓரளவு நடிப்போடும் இதில் வந்து போயிருக்கிறார். ஆனாலும், அவரது தோற்றம் நம் மனதில் பதிவதாக இல்லை.

இந்தப் படத்தில் வில்லனாக சரண்ராஜ் வருகிறார். கதிரின் டப்பிங் குரல் அவருக்கு எடுபடவில்லை. சரண்ராஜின் உறவினராக வரும் தமிழ் ‘ஸ்கோர்’ செய்கிறார்.

இவர்கள் தவிர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ரீரஞ்சனி போன்றோர் இதிலுண்டு. அவர்கள் அளவுக்குக் கூட, இதில் விவேக் பிரசன்னாவுக்குக் காட்சிகள் இல்லை.

ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேனுக்கும் போதிய இடம் தரப்படவில்லை.

இதனைச் சொன்னதும், ‘அப்படின்னா இரண்டு மணி நேரப் படத்துல வேற யார்தான் வர்றாங்க’ என்ற கேள்வி மனதில் தோன்றலாம். இந்த இடத்தில், உங்கள் மனக்கண்ணில் விஜய் ஆண்டனியின் ‘விக்’ தெரிந்தால் சரியான பதில் கிடைக்கும்.

படத்தில் நவீன்குமார் ஒளிப்பதிவு, சங்கத்தமிழனின் ‘இறுக்கமான’ படத்தொகுப்பில் காட்சிகள் சரசரவென்று நகர்கின்றன. ஆனால், ஒன்றுமே மனதில் ஒட்டுவதாக, புதிதாக அமையவில்லை.
சி.உதயகுமாரின் கலை வடிவமைப்பு, படம் முழுக்கவே நல்ல செட்களில் எடுக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

இன்னும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் சிரத்தையும் நேர்த்தியும் இதில் கலந்திருப்பதை உணர முடிகிறது. ஆனால், அதையும் மீறி, ரொம்பவே போரடிக்கிறது திரைக்கதை ஓட்டம்.

அதிலும் போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆட்கள், விஜய் ஆண்டனியை நோட்டமிடும் காட்சிகள் ‘எப்பா டேய்..’ என்று புலம்ப வைக்கின்றன. அதேநேரத்தில், படத்தின் ஆக்கம் சிறப்பாக இருப்பதை சொல்லத்தான் வேண்டும். கொஞ்சம் சகிக்க முடியாத எழுத்தாக்கத்திற்கு சிறப்பான காட்சியாக்கம் தந்து என்ன பிரயோஜனம்?

‘ஜென்டில்மேன்’ படம் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கதையாகத் தென்படுகிறது ‘ஹிட்லர்’. டைட்டில், நாயக பாத்திரம், அது நிகழ்த்தும் சாகசங்கள், இதர பாத்திரங்களுக்கான இடம், காட்சிகள் சேர்ந்தாற்போலத் திரையில் ஓடும்போது பார்வையாளர்களிடம் எழும் உணர்வு என்று எல்லாமே இதில் ‘ஏழாம் பொருத்தம்’ தான்.

ஒருவேளை பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படம் வெற்றி பெற்றிருந்தால் வேறு மாதிரியான வரவேற்பைப் பெற்றிருக்கலாம். என்ன செய்வது, இப்போதுதான் ஆக்கப்பட்டு திரையில் வெளியிடப்பட்டு நம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பதிலாக, ஒரு நல்ல கதையின் உரிமையைப் பெற்று, அதற்குத் திரையுருவம் தருவது சிறப்பான பலனைத் தரும். இயக்குனர் தனா அடுத்த படத்திலாவது அதனைச் செய்ய வேண்டுமென்பதே நமது விருப்பம்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like