தமிழ்ப் படங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதென்பது ‘அத்தி பூத்தாற் போல’ நடக்கும் சம்பவம்.
அதையும் மீறி, திரையில் அவர்களது பாத்திரங்களுக்கான இடம், அவை ரசிகர்களிடத்தில் பெறும் வரவேற்பு, ஒட்ட்மொத்த திரைக்கதையின் வார்ப்பு, படம் முடிந்தபிறகு ஏற்படும் திருப்தி என்று பல விஷயங்கள் அந்த படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
அதனால், பெரும்பாலும் அப்படிப்பட்ட ‘மல்டி ஸ்டார்’ படங்கள் ‘கமர்ஷியல்’ அம்சங்கள் ததும்பி வழியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் இருந்து வேறுபட்டு, வாழ்வில் யதார்த்தமாக நடக்கிற சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெய்யழகன்’ திரைப்படம் பார்வையாளர்களை நெகிழ்ச்சியூட்டுகிற ‘பீல்குட்’ படமக இருக்கும் என்று பறைசாற்றின அதற்கான முன்னோட்ட நிகழ்வுகள்.
ரசிகர்களும் அதனை நம்பத் தயாராக இருந்ததற்குக் காரணம், அதனை இயக்கியவர் ‘96’ தந்த பிரேம்குமார் என்பதே.
அனைத்தையும் மீறி, இப்படத்தில் கார்த்தியும் அர்விந்த் சுவாமியும் இணைந்து நடிக்கின்றனர் என்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
பெரிய திரையில் ‘மெய்யழகன்’ நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறதா?
அன்பே இறை!
தஞ்சாவூரில் பூர்விக வீட்டில் வசித்து வருகிறது அருள்மொழி வர்மன் (அர்விந்த் சுவாமி) குடும்பம். அவரது தந்தை அறிவுடை நம்பி (ஜெயபிரகாஷ்) ஒரு ஆசிரியர்.
தாய், மூத்த சகோதரருடன் வாழும் அருள்மொழிக்கு அந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் வசிக்க வேண்டுமென்பதே ஒரே ஆசை. ஆனால், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பங்களால் அந்த வீடு அவர்களது கையை விட்டுப் போகிறது.
அதனால், சென்னைக்கு இடம்பெயர்கிறது அருள்மொழியின் குடும்பம். இந்த சம்பவம் 1996ஆம் ஆண்டில் நிகழ்கிறது. அதன்பிறகு, அக்குடும்பத்தினர் எவருமே சொந்த ஊருக்கு வரவில்லை.
பதினெட்டு ஆண்டுகள் கழித்து, சித்தப்பா மகள் புவனாவின் (ஸ்வாதி கொண்டே) திருமணத்திற்காகத் தஞ்சாவூர் வருகிறார் அருள்மொழி. திருமணம் நீடாமங்கலத்தில் நடக்கவிருக்கிறது.
தஞ்சாவூர் வரும் அருள்மொழி ஒரு லாட்ஜில் தங்குகிறார். தான் வாழ்ந்த வீடு, பெரிய கோயில், வீதிகள் அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார். மாலையில் ‘திருமண வரவேற்பு’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
புவனா, அவரது பெற்றோர், தாய்மாமன் சொக்கலிங்கம் (ராஜ்கிரண்) என்று சொந்தங்கள் பலரை அத்திருமணத்தில் பார்க்கிறார் அருள்மொழி. அவரது முறைப்பெண் (இந்துமதி மணிகண்டன்) ஒருவரையும் சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துப் பேசுகிறார்.
அந்த நேரத்தில், ஒரு நபர் அருள்மொழிக்கு அறிமுகமாகிறார். ‘அத்தான்.. அத்தான்..’ என்று உரிமையோடு அழைக்கும் அந்த நபரை (கார்த்தி) அவருக்குத் தெரியவே இல்லை. ஆனாலும், கல்யாண வீட்டில் அவரது மனம் கோணக்கூடாது என்று தெரிந்தது போல நடிக்கிறார்.
சுமார் இரண்டு, மூன்று மணி நேரங்களுக்குப் பின் சென்னை திரும்பிச் செல்வது தான் அருள்மொழியின் திட்டம். திருமண வீட்டில் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்போது, அந்த நபரும் அருள்மொழியுடன் வருகிறார். ஆனால், அவர்கள் செல்வதற்குள் பேருந்து சென்றுவிடுகிறது.
உறவினர்களால் ஏமாற்றத்திற்கு ஆளானதால், சொந்தங்களையே வெறுப்பவராக இருக்கிறார் அருள்மொழி.
’லாட்ஜில் தங்குகிறேன்’ என்று அவர் சொன்னாலும், அந்த நபர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
வீட்டில் அந்த நபரின் மனைவி நந்தினி (ஸ்ரீதிவ்யா) இருக்கிறார். அவருக்கு அருள்மொழியை அறிமுகம் செய்கிறார்.
குளித்து முடித்து ‘ரிப்ரெஷ்’ ஆனதும் அருள்மொழியும் அந்த நபரும் மது அருந்துகின்றனர்.
பிறகு, அந்த நபர் வளர்க்கும் ஜல்லிக்காட்டுக் காளை தோனியைப் பார்த்து வியக்கிறார் அருள்மொழி. இருவரும் அந்த ஊரைச் சுற்றி வலம் வருகின்றனர்.
அப்போதும் கூட, அந்த நபர் இன்னார்தான் என்று அருள்மொழிக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் மூலமாகச் சில காலமாக இழந்துவிட்டிருந்த தனது சுயத்தை மீட்டெடுக்கிறார். மீண்டும் அவர் சிரித்த முகமாக மாறுகிறார்.
அந்த இரவைக் கடந்தபிறகாவது, அருள்மொழி அந்த நபர் யார் என்பதைக் கண்டறிந்தாரா?
‘தன்னை அத்தானுக்குத் தெரியவில்லை’ என்பதை அறிந்து அந்த நபர் துடித்தாரா? அவர் யார் என்று நமக்குள் எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘மெய்யழகன்’ படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், இன்றும் சொந்தங்களை அரவணைக்கத் துடிக்கிற, அவர்களுக்கு உதவிகளை அள்ளியிறைக்கத் தயாராக இருக்கிற, எதிர்ப்படும் அனைவரிடமும் அன்பு பாராட்டத் தயாராக இருக்கிற, நம்மோடு வாழ்கிற, அரிதான சில ‘மெய்யழகன்’களை நினைவூட்டிச் செல்கிறது இப்படம். அதுவே அதன் யுஎஸ்பி.
‘அன்பே இறை; அன்பே மறை; அன்பே நிறை; அன்பே அருட்பெரும் மெய்’ என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது இப்படம்.
அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது. அதனைக் காண்கிற பொறுமை வாய்த்தவர்களுக்கு இப்படம் ‘அமிர்தமாக’ இனிக்கும்.
கார்த்தியின் அறிமுகம்!
‘மெய்யழகன்’ படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் வரை அர்விந்த் சுவாமி திரையில் தோன்றுவதில்லை. ஏன், அரை மணி நேரம் கழித்தே கார்த்தியின் அறிமுகம் காணக் கிடைக்கிறது.
அதுவரை அருள்மொழியாக நடிக்கும் ஷரண் சக்தி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஆண்டனி, ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பையே நாம் காண்கிறோம். ஆனால், அக்காட்சிகளே நம் கண்களில் தாரை தாரையாக நீரைப் பெருக்கெடுக்கச் செய்து விடுகிறது.
அதன்பிறகு வரும் காட்சிகளும் கூட அதே ரகம் என்பதால், கண்களில் நீர் ததும்பி நிற்கிறது. அதனால், பெரும்பாலான காட்சிகள் நமக்கு ‘மங்கலாகவே’ தெரிகின்றன. இடைவேளை வரை இதில் மாற்றமில்லை.
பின்பாதி திரைக்கதை இயக்குனருக்கும் பார்வையாளர்களுக்குமான உரையாடலாக மாறிப் போகிறது.
வெறுமனே சொந்தங்கள் என்ற பெயரில் சாதியினரைக் காட்டாமல், உலகம் முழுக்கவிருக்கும் தமிழர்களின் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்கிறது. அக்காட்சிகள் இன்னும் மெதுவாக நகர்கின்றன. ‘கிளைமேக்ஸ்’ அதற்கும் மேலே.
’தான் வாழ்ந்த வீட்டை இழந்த விரக்தியின் காரணமாக, ஒரு மனிதன் அந்த ஊரை, அங்கிருக்கும் உறவுகளை, நட்புகளை நினைவுபடுத்தக் கூடத் தயாராக இல்லை’ என்பது வேதனை தரும் உண்மை. அதனைப் பொட்டிலடித்தாற்போலப் பேசுகிறது இப்படம்.
இதே போன்ற திரைக்கதையோடு வேறு மொழிகளில் ஒரு படம் வெளியானால் நாம் தலையில் வைத்துக் கொண்டாடுவோம் என்பதே உண்மை.
இயக்குனர் பிரேம்குமார், இந்த படத்தில் நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே காட்டியிருக்கிறார். ஆனால், நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறவற்றைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
இப்படத்தில் கார்த்தி – அரவிந்த் சுவாமி இடையிலான உரையாடல்களும், கிளைமேக்ஸ் காட்சியும் ‘கொஞ்சம் நீளமாக’த் தெரிகின்றன. அதனைச் சரி செய்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, இயல்பாக நாம் கண்களால் கண்டது போன்ற உணர்வைத் திரையில் ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளில் அந்த முயற்சியைச் செவ்வனே செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், திரைக்கதையின் ஆன்மா சிதையாதவாறு காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். அதையும் மீறி, முன்பாதி அளவுக்குப் பின்பாதி இல்லை என்கிற உணர்வு எழுகிறது.
ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பானது, நகரமயமாக்கலுக்குப் பிறகும் சிதையாத ‘கிராமியத்தை’ப் படத்தில் காட்ட உதவியிருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் ‘யாரோ இவர் யாரோ’, ‘போறேன் நான் போறேன்’ பாடல் கண்ணீரைச் சுரக்கச் செய்கிறது. ’டெல்டா கல்யாணம்’ பாடல் கொண்டாட்டத் தருணங்களின்போது ‘ரீல்ஸ்’ இட ஏற்றது.
கதாபாத்திரங்களின் நடிப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள் போன்றவை கண்ணீரை வரவழைக்கிறபோது, அதனை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கிற வேலையைச் செய்கிறது அவரது பின்னணி இசை.
படம் முழுக்கவே அர்விந்த் சுவாமி தான் வருகிறார். அவரது பாத்திரமே பிரதானம். பின்பாதியில் மட்டுமே கார்த்தியின் பாத்திரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இருவருமே தங்கள் பாத்திரங்களின் முக்கியத்துவம் அறிந்து, அதற்கேற்ற நடிப்பை ‘டெய்லர் மேட்’ ஆகத் தந்திருக்கின்றனர்.
போலவே, இவர்களது நடிப்பு சிறப்பு என்று ஒருவரை மட்டுமே கைகாட்ட முடியாத அளவுக்கு இப்படத்தில் அனைவருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
இளவரசு, ராஜ்கிரண், கருணாகரன், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, ஷரண் சக்தி, ஸ்வாதி கொண்டே, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், ரேச்சல் ரெபேக்கா என்று பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
பல ஆண்டுகள் கழித்து அத்தை மகனைக் கண்டு நலம் விசாரிப்பது போன்று அர்விந்த் சுவாமி உடன் இந்துமதி மணிகண்டன் பேசுகிற காட்சொயொன்று வருகிறது.
பேசி முடித்துவிட்டு ‘வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் இந்துமதி, மீண்டும் அர்விந்தைக் கடக்கிறபோது அவர் முதுகைத் தொட்டுவிட்டுச் செல்வார். அந்த காட்சியில் காதலின் இன்னொரு கிளை முளைவிடுவதைக் காண முடியும். அதுவும் ‘96’ போன்ற ஒன்றுதான்.
அதனை உணர முடிந்தால், இத்திரைக்கதையில் இருக்கிற இதர உணர்வுகள் தானாகப் பிடிபடத் தொடங்கும்.
நீளம் அதிகம்!
’மெய்யழகன்’ படத்தில் நிச்சயமாகச் சில காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும். அது போக, இந்தப் படம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது.
குறிப்பாக, கிளைமேக்ஸில் வரும் 15 நிமிடக் காட்சிகளின் நீளம் ரொம்பவே அதிகம். அதனை மனதில் கொண்டு, அதற்கு முன்னிருந்த காட்சிகளைச் செறிவாக்கியிருக்கலாம்.
இந்தப் படத்தில் அர்விந்த் சுவாமியின் பெற்றோர் ஏன் ஊர் திரும்பவில்லை என்பதற்கான காரணம் வசனங்களில் ‘லேசாக’ சொல்லப்பட்டிருக்கிறது. அது பார்வையாளர்களுக்குப் போதுமானதாக இல்லை.
’இதுக்காக ஒருத்தர் ஊர் பக்கமே வரமாட்டாங்களா’ என்று சொல்லத்தக்க வகையில், இதன் திரைக்கதையை சிலர் அணுகலாம். ஏனென்றால், இக்கதையில் அதிர்வூட்டுகிற, ‘ட்ராமாதனமான’ சம்பவங்கள் இல்லை.
அக்குடும்பத்தை அந்நிலைக்கு ஆளாக்கிய குடும்பத்தினரைக் கூட ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அவர்களை வில்லத்தனமாகச் சித்தரிக்கவில்லை. அது சில ரசிகர்களுக்குத் திருப்தியளிக்காமல் போகலாம்.
முக்கியமாக, ‘படம் ஸ்பீடா இருக்குமா’ என்பவர்கள் இதன் திரைக்கதை நகர்வைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
அது போன்ற சில குறைகளைத் தாண்டி, ‘அன்பே எல்லாம்’ என்ற ஆன்மிகத்தைப் பிரசாரத் தொனியின்றி பேசிய வகையில் தனித்துவம் பெறுகிறது ‘மெய்யழகன்’.
ஒரு காட்சியில், மாலையிடப்பட்ட பெரியார் படத்தின் அருகே முருகன் படம் இருப்பதாகக் காட்டப்படுகிறது. அது, இம்மண்ணில் வாழ்கிற சில மனிதர்களது மனநிலையைக் காட்டுவதாகச் சமூகவலைதளங்களில் விவாதங்கள் பெருகலாம்.
இளையராஜா பிரியர்கள் கொண்டாடத்தக்க சில தருணங்களும் இதில் உண்டு. ‘எப்போதாவது மது அருந்துவேன்’ என்கிறவர்கள் சிலாகிக்கத்தக்க காட்சிகள் இதிலுண்டு.
’நம் முப்பாட்டன்கள் எப்படியிருந்தார்கள் தெரியுமா’ என்று வரலாற்றின் மறைவுப் பக்கங்களைத் தேடித் தெரிய விரும்புகிறவர்களைக் கௌரவிக்கிற இடங்களும் இதிலுண்டு.
போலவே, செண்டிமெண்ட் காட்சிகளைப் பார்த்து கண்களைக் குளமாக்கிக் கொள்பவர்கள் கட்டியணைக்கக் கூடிய வகையில் உள்ளது ‘மெய்யழகன்’. அதனால், தியேட்டரில் அழ வெட்கப்படுகிறவர்களுக்கு இப்படம் ஏற்றதல்ல.
உறவுகளும் நட்பும் வாழ்வில் அவசியம் என்பவர்கள், ஒரு நல்வைபவமொன்றில் மீண்டும் அவர்களைக் கண்டது போன்ற அனுபவங்களை இப்படத்தில் மீட்டெடுப்பார்கள். அதுவே ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றி!
– உதயசங்கரன் பாடகலிங்கம்