‘உன்னருகே நானிருந்தால்..’ படத்தில் நடிகையாக வரும் ரம்பாவை ஒரு சாதாரண ரசிகராகப் பார்த்து பூரித்துப் போகும் பாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பார்.
‘ரம்பா சார்.. பணியாரம் சார்.. சாப்பிடுது சார்..’ என்று ஒரு காட்சியில் வசனம் பேசியிருப்பார்.
அந்தக் கணத்தின் ஒவ்வொரு நொடியையும் உள்வாங்கியது போல, அவரது நடிப்பு இருந்திருக்கும்.
இன்றைய சூழலில், அதுபோன்ற ஆராதனையை வெளிப்படுத்தக்கூடிய காட்சிக்குப் பொருத்தமான நடிகை என்றால் தமன்னாவைத்தான் கை காட்ட வேண்டியிருக்கும்.
அந்த அளவுக்குத் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து ரசிகர்கள் நினைவில் கொள்ளத்தக்க இடத்தில் இருக்கிறார்.
தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்தபோதும் கூட, தமிழ் திரையுலகம் உடனான தொடர்பு அற்றுப் போகாமல் இருக்க ‘காவாலா’ மாதிரியான பாடல்களில் தலைகாட்டிவிடுவது அவரது சாமர்த்தியம். அந்த ‘டெக்னிக்’தான் பதினெட்டு ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து அவரைத் திரைத்துறையில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆம், தமிழில் ‘கேடி’ படத்தில் தமன்னா அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.
படிப்படியான வளர்ச்சி!
‘கேடி’ திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா உடன் ஜோடியாக நடித்திருந்தார் தமன்னா. அதில் இன்னொரு நாயகியாக இலியானா தோன்றியிருந்தார்.
அந்த காலகட்டத்தில் தெலுங்கில் தொடர்ந்து சில படங்களில் நடித்த இலியானா, சில ஆண்டுகளிலேயே நட்சத்திர அந்தஸ்தை எட்டினார். ஆனால், தமன்னாவுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால் கடுமையாகப் போராடி அந்த இடத்தை அடைய முனைந்தார். எந்த மொழியில் வாய்ப்புகள் வருகின்றனவோ, அதில் தனக்கு உகந்ததைத் தேர்ந்தெடுக்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது.
இத்தனைக்கும் பள்ளிப்படிப்பின் இடையிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தமன்னா. 2005இல் இந்திப் படங்களில் நடித்தவர், இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் பார்வை பட்டு தமிழில் நாயகி ஆனார்.
தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை போன்ற படங்களில் நடித்தார். இம்மூன்றில் ‘கல்லூரி’ திரைப்படம் மட்டுமே இன்றும் தமன்னாவை நினைவுகூரத்தக்கதாக இருக்கிறது.
அதில், கொஞ்சம் கர்வமும் பொறாமையும் ஏக்கமும் வருத்தமும் நிறைந்த பாத்திரத்தை வெகு இயல்பாகத் திரையில் வெளிப்படுத்தியிருந்தார் தமன்னா. அது, அப்போதே அவரைச் சிறந்த நடிகை என்பதை வெளிக்காட்டியது.
2009-இல் வெளியான ‘படிக்காதவன்’ படமே தமன்னாவின் புகழ் பரவலாகக் காரணமாக அமைந்தது. தனுஷ் உடன் அவர் நடித்த காட்சிகளில் நிரம்பி வழிந்த இளமை உடனடி ஈர்ப்பை விதைத்தது.
குறிப்பாக, ‘ஹே ரோசு ரோசு’ பாடல் சட்டென்ற கவனிப்பைக் கிடைக்கச் செய்தது. பின்னர் வந்த ‘அயன்’, ‘கண்டேன் காதலை’ படங்கள் அவரைக் கொண்டாட வைத்தன.
அதன் அடுத்தகட்டமாக, ‘பையா’வில் கார்த்தியுடன் சேர்ந்து தமன்னா ஆடிய ‘அடடா மழைடா’ பாடல் ரசிகர்களை ஆனந்த மழையில் நனையச் செய்தது.
சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை படங்களில் அவர் இடம்பெற்றவிதம், இன்றும் அவரது தீவிர ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக உள்ளது.
பின்னாட்களில் வேங்கை, வீரம், பாகுபலி: தி பிகினிங், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தேவி என்று பல படங்களில் நடித்தாலும் தமன்னாவுக்கான ‘கிராஃப்’ ஒரு புள்ளியிலேயே தேங்கி நிற்கிறதோ என்று அவரது ரசிகர்களை எண்ண வைத்தது.
தர்மதுரை, கண்ணே கலைமானே, பெட்ரோமாக்ஸ் படங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தபோதும், அந்த நிலையில் மாற்றமில்லை.
இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு, இந்தியில் தனக்கான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் பிஸியாக இருந்தார். அப்போதுதான், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ஆட்டம் போடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அதில் அவரது நடன அசைவுகள் ஆபாசத்தின் உச்சம் என்றபோதும், அந்த பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்கு முன்னரும் அது போன்று ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார் என்றபோதும், அந்த பாடல் தந்த புகழ் அபாரமானதாக இருந்தது.
இதோ ‘ஸ்திரீ2’ படத்தில் அவரது இருப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
அவரது பிலிமோகிராஃபியை பார்க்கும் எவரும், படிப்படியான வளர்ச்சி நிலையைக் கண்டவர் தமன்னா என்பார்கள்.
அது மிகப்பொருத்தமானது; ஏனென்றால், தொடர்ச்சியாக சில படங்களில் வெற்றியைச் சுவைத்துவிட்டு சத்தம் காட்டாமல் ஒதுங்கிப்போகிற நடிகையாக அவரது திரை வாழ்வு அமையவில்லை.
மெல்லப் பாயும் ஓடை, சலசலக்கும் ஆறாகப் பாய்ந்து, பெருமலையில் இருந்து அருவியாகப் பொழிவது போன்ற அனுபவத்தைத் தரவல்லது அது.
இதர மொழிகளிலும் வெற்றி!
வைர வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும், சிறு வயதிலேயே உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற பெருவிருப்பம் தமன்னாவிடம் இருந்தது.
பள்ளியில் படிக்கும்போதே மாடலிங், விளம்பரப் பட வாய்ப்புகள், பேஷன் நிகழ்ச்சிகள் என்றிருந்தவர், 2005ஆம் ஆண்டு ’சாந்த் கா ரோஷன் செஹ்ரா’ படத்தின் வழியே நாயகி ஆனார்.
‘நிலவு போன்ற பிரகாசமான முகம்’ என்பது அந்த டைட்டிலுக்கான அர்த்தம். அதற்கேற்ப, அடுத்து வந்த படங்களில் தோன்றினார் தமன்னா.
தெலுங்கில் ‘ஸ்ரீ’, ‘ஹேப்பி டேஸ்’, ‘காளிதாசு’, ‘கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’, ‘100% லவ்’, ‘ரக்ஷா’, ‘ரெபல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய புகழைப் பெற்றார்.
2013இல் வெளியான ஹிம்மத்வாலா, எண்டர்டெயின்மெண்ட், ஹம்சகல்ஸ் படங்களில் நடித்தார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்தது 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமானவராக அவரை மாற்றியது.
பால் வண்ண அழகு!
பளிங்கு சிலை போன்ற உருவம் கொண்டவர் என்று சில நடிகைகளை வர்ணிப்பது சிலரது வழக்கம். அவர்களில் ஒருவராக இடம்பெறுபவர் தமன்னா.
சிவந்த நிறம் மட்டுமல்லாமல் எடுப்பான உடல்வாகும் வியப்பைத் தருகிற நளினமும் தொடர்ந்து திரையில் வெளீப்பட வேண்டுமென்ற மெனக்கெடல் அவரிடம் உண்டு.
‘கேடி படத்தில் அறிமுகமானபோது எப்படியிருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார் தமன்னா’ என்று சொன்னால் அது பொய் என்பது பட்டவர்த்தனமாகத் தெரியும்.
அதனால், அப்போதிருந்த வனப்பையும் நடிப்புத் திறமையையும் தன் வயதுக்கு ஏற்றபடி தொடர்ந்து மெருகேற்றி வருகிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ஐம்பது, அறுபதுகளில் வெளியான இந்திப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கையில் ‘பால் வண்ண அழகு’ என்ற எண்ணம் மனதுக்குள் தோன்றும்.
அந்த காலத்து ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்திய நுட்பங்களும் ஒப்பனையாளர்களின் கைவண்ணமும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால், ரசிகர்கள் மனதில் பதிந்த அந்த நடிகைகளின் பிம்பம் அந்த காரணங்களுக்கு அப்பாற்பட்டது. அதே போன்றதொரு அழகுப் பதுமையாக இன்று விளங்குகிறார் தமன்னா.
இன்னும் சில ஆண்டுகளில் தமன்னாவின் உருவம் மாறலாம். நடிப்பதை விட்டு விலகி வேறு பல துறைகளில் அவர் ஈடுபடலாம்.
ஆனால், அப்போதும் தனது வேலையைச் செவ்வனே செய்ய வேண்டுமென்ற அவரது இயல்பு மாறாது.
கடந்த 18 ஆண்டுகளாக அக்குணத்தை தமன்னா வெளிப்படுத்தி வரும் பாங்கு, அதனை நமக்குணர்த்துகிறது.
செய்யும் வேலையில் மனதை லயிக்கச் செய்ய வேண்டுமென்ற தத்துவார்த்த சிந்தனையின் வெளிபபடு அது. அதுவே, எத்தனை வயதானாலும் அவரை அழகுறக் காட்டும். பற்கள் கொட்டி, தலை நரைத்து, உடல் தளர்ந்தபோதும் ‘பால் வண்ண அழகு’ என்று தமன்னாவைப் பார்த்துச் சொல்ல வைக்கும்..!
– மாபா