சுந்தர்.சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தைப் பார்க்காத தமிழ் ரசிகர்கள் மிகக்குறைவு. அந்த காலத்தில் மட்டுமல்ல, இப்போது அதனைத் திரையரங்குகளில் வெளியிட்டாலும், அப்படத்தைப் பார்க்கத் தயாராக இருப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.
2கே கிட்ஸ்களுக்கும் பிடிக்கும்விதமாக இப்படம் இருக்கும் என்பது அப்படக்குழுவினரின் நம்பிக்கை.
அப்படிப்பட்ட ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதனை உணர்ந்தோ என்னவோ, அந்த காலகட்டத்திலேயே கார்த்திக் – கவுண்டமணி கூட்டணியைப் பயன்படுத்தி அடுத்தடுத்து பல நகைச்சுவை படங்களைத் தந்தார் சுந்தர்.சி.
காலத்தை வென்று நிற்கும் அவர்களது நகைச்சுவை நடிப்பை நம் மனதில் நிறைத்திருக்கிறார்.
மேட்டுக்குடி, அழகான நாட்கள் என்று தொடரும் அந்த வரிசையில், ரொம்பவே சிறப்பான இடத்தைப் பிடிப்பது ‘உனக்காக எல்லாம் உனக்காக’.
‘உள்ளத்தை அள்ளித்தா’ அளவுக்கு இப்படம் வரவேற்பைப் பெறாவிட்டாலும், இது ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரம் என்பதில் எள்ளளவும் ஐயம் தேவையில்லை.
‘ஆள் மாறாட்ட’ கதை!
வேலை வெட்டி எதையும் பார்க்காமல், வெறுமனே ஊர் சுற்றுவது, தந்தை காசில் ஜாலியாக இருப்பது, எந்நேரமும் தாய்மாமனின் அறிவுரைக் கேட்பது போல பாசாங்கு செய்துவிட்டு தனக்குத் தேவையானவற்றை மட்டும் செய்வது என்றிருக்கும் ஒரு இளைஞர். அவருக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வருகிறது.
அந்த பெண்ணுடன் ஜோடி சேர்வதற்காக, கறார் பேர்வழியான தனது தந்தை ஏற்பாடு செய்த திருமணத்தைத் தாய் மாமன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து நிறுத்த முயற்சிக்கிறார் அந்த இளைஞர். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் வீணாய் போகிறது.
இந்த நிலையில், திருமண நாளன்று மணப்பெண்ணின் உறவினர்களுடன் வம்பு வளர்க்கிறார் அந்த இளைஞர். அதனால் திருமணம் நின்றுபோக, அவர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
ஆனால், அப்போதுதான் ஒரு உண்மையை உணர்கிறார். அதாகப்பட்டது, தான் காதலிக்கும் பெண் தான் மணமேடையில் மணப்பெண்ணாக அமரவிருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
‘தனக்குப் பெற்றோர் பார்த்து வைத்தது இந்தப் பெண்ணைத்தானா’ என்று அந்த இளைஞர் சுதாரிப்பதற்குள் எல்லாம் கைமீறிப் போகிறது.
அதன்பிறகு என்னவானது, மீண்டும் தனது காதலியுடன் அந்த இளைஞர் சேர்ந்தாரா, இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனைகள் தீர்ந்தனவா என்று சொல்கிறது இதன் மீதி.
வழக்கமான பாத்திர வடிவமைப்பு, பல படங்களில் இடம்பெற்ற காட்சிகள், ரொம்பவே பழைய திருப்பங்கள், இவற்றை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வார்த்தபோது நம்மைச் சிரிக்க வைத்திருந்தார் இயக்குனர் சுந்தர்.சி.
அது மட்டுமல்லாமல், என்றென்றும் ரசிக்கிற சில நகைச்சுவைக் காட்சிகளைத் தந்திருந்தார். கூர்மூக்கு முகமூடியொன்றை மாட்டிக்கொண்டு தீவிரவாதியாக ரம்பாவிடம் கவுண்டமணி அலப்பறை செய்யும் காட்சி அதிலொன்று.
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் எப்படி கவுண்டமணி, கார்த்திக் ஆள் மாறாட்டக் காட்சிகள் இடம்பெற்றதோ, அதே போன்ற சித்தரிப்பைக் கொண்டிருந்தது ‘உனக்காக எல்லாம் உனக்காக’.
முத்தான பாடல்கள்!
நகைச்சுவைக் காட்சிகளைத் தாண்டி, ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்தை இன்றளவும் நினைவு கூர வைப்பது யுவனின் இசை.
‘துனியா ஹே துனியா’ பாடலில் மும்தாஜோடு கார்த்திக் குத்தாட்டம் போடுவதில் தொடங்கி, ‘மோனாலிசா’, ‘கிளியோபாட்ரா’ பாடல்கள் என்று நம்முள் துள்ளலை விதைத்திருப்பார் யுவன்.
அது போதாதென்று ‘வெண்ணிலா வெளியே வருவாயா’, ‘துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்’ பாடல்களில் மென்மையை இழையோட விட்டிருப்பார்.
இந்த ஐந்து பாடல்களுமே சூப்பர்ஹிட் என்பதால், அன்றைய காலத்தில் இது ரசிகர்களை ‘மெஸ்மரிசம்’ செய்யும் ஆல்பமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல், யுவனின் ஆரம்பகாலத்தில் அவருக்கு ஏற்றத்தைத் தந்த படமாகவும் இருந்தது.
பல வண்ணங்களைத் திரையில் அள்ளித்தெளித்தாற் போன்று அமைந்த யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, நடித்தவர்களின் காமெடி டைமிங்குக்கு இடம்விட்டுச் செறிவாகக் காட்சிகளைத் தொகுத்த சாய் சுரேஷின் படத்தொகுப்பு என்று இதன் தொழில்நுட்பக் கூறுகளும் சிறப்பாக இருந்தன.
இந்தப் படத்தின் கதை, வசனத்தை ரசிகர்கள் சிரித்து மகிழத்தக்க வகையில் அமைத்திருந்தார் சுராஜ். அதற்கேற்ப கவுண்டமணி, விவேக், அஞ்சு, மதன்பாப்,
பாலு ஆனந்த், விச்சு விஸ்வநாத், வையாபுரி, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டு, பாலு ஆனந்த், கிரேன் மனோகர், காகா ராதாகிருஷ்ணன் என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளத்தையே இதில் நிறைத்திருந்தார் சுந்தர்.சி.
இவர்களை எல்லாம் தாண்டி ஜெய் கணேஷ், வினு சக்ரவர்த்தி வரும் காட்சிகள் கூட ரசிகர்களைச் சிரிக்க வைத்தன.
அந்த வகையில், தொடக்கம் முதல் இறுதி வரை சிரித்து ரசிக்கிற ஒரு படமாக இதனைத் தந்திருந்தார்.
ஒரு ‘மாயாஜாலம்’!
கார்த்திக் உடன் இணைந்து ‘கண்ணன் வருவான்’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படங்களையும் தந்தார் சுந்தர்.சி. ஆனால், அந்த படங்களில் அவரது பாத்திரத்திற்கு நகைச்சுவை காட்சிகளை அமைக்கவில்லை. அதனால், அவை ரசிகர்களின் கவனிப்பையும் பெறவில்லை.
மணிரத்னத்தின் ‘மௌன ராகம்’ படத்தின் தீவிர ரசிகராக சுந்தர்.சி இருந்தாரா, இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது.
ஆனால், அதில் வரும் பாத்திர வார்ப்பினைத் தனது படங்களில் பிரதிபலிக்க முயற்சித்திருந்தார்.
அதனாலோ என்னவோ, அப்படங்கள் நம்மில் அதே போன்றதொரு சித்திரத்தை உருவாக்கின.
இன்றும் கார்த்திக்கின் சிறந்த படங்களில் ஒன்றாகச் சில நகைச்சுவை படங்களைக் குறிப்பிடுவார்கள் ரசிகர்கள்.
அது தவிர்த்து, பலவிதமான பாத்திரங்களில் நடித்து அவர் தன் திறமையை நிரூபித்திருந்தாலும், ஏனோ அந்தப் படங்கள் மட்டுமே நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.
காரணம், அப்படங்களில் ஜாலி கேலி நபராக கார்த்திக் தோன்றியதே. அவ்வாறு தோன்றும்போது திரையில் ஒரு மாயாஜாலம் நிகழும்.
அது ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்திலும் இடம்பெற்றிருந்தது. கூடவே, ரம்பா உடன் அவர் ஜோடி சேர்ந்து வரும் காட்சிகள் ஈர்ப்பினை விதைத்தன.
இன்றும் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதனை ரசிக்கத் தயாராக இருக்கிறது ரசிகக் கூட்டம். இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன என்றால் அவர்கள் மலைத்துதான் போவார்கள்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்