ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அனுரா குமாராவின் வெற்றி!

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் 42.31 சதவிகித வாக்குகளைப் பெற்று, அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அனுரா குமாரா திசநாயகே. தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அவர் சார்ந்த ஜனதா விமுக்தி பெரமுனா எனும் மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

காரணம், கடந்த 2019, 2022 அதிபர் தேர்தலின்போது இரட்டை இலக்கத்தை எட்டாத இவர், தற்போது பெரும்பான்மை நிலையை எட்டியிருப்பது தான்.

மெதுவான வளர்ச்சி!

1965-ம் ஆண்டு மே 14-ம் தேதியன்று ரோஹன விஜேவீராவினால் தொடங்கப்பட்டது மக்கள் விடுதலை முன்னணி கட்சி.

சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி – பீகிங் பிரிவில் இருந்து விலகி ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி முதலில் சிறிய அளவிலேயே செயல்பட்டது.

ஆரம்ப காலத்தில் மார்க்சிய – லெனினிய கருத்தாக்கம் கொண்டதாக இருந்தது. அதன் காரணமாக, 1971-ல் 76 காவலர்களைச் சிறைபிடித்து கிளர்ச்சியில் ஈடுபட்டது.

அப்போதைய ஜெயவர்த்தனே அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை அடுத்து, இக்கட்சி தடை செய்யப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரோஹண விஜேவீரா, 1982 அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் அரசியலில் ஈடுபட்டபிறகு, அக்கட்சியின் பரிமாணம் மாறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பிறகு 1987 – 89 காலகட்டத்திலும் கிளர்ச்சியில் ஈடுபட்டது ஜனதா விமுக்தி பெரமுன. அதன் தொடர்ச்சியாக, அதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் அதன் தலைவர்களாக சமன் பியாஸ்ரீ பெர்னாண்டோ, லலித் விஜேரத்னா ஆகியோர் இருந்தனர்.

ஆனால், பிரேமதாசா அதிபராக இருந்தபோது, அக்கட்சியின் தலைவர்கள் பெருமளவில் முடக்கத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அப்போது அதன் தலைவராகப் பொறுப்பேற்றர் சோமவன்ச அமரசிங்கே.

தொண்ணூறுகளுக்குப் பிறகு அக்கட்சி தனது ‘தீவிரப் பொதுவுடைமை’ கருத்தாக்கங்களில் சிலவற்றைக் கைவிட்டது. முழுமையான தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கியது.

மீண்டும் 1994, 1999 அதிபர் தேர்தல்களில் போட்டியிட்ட ஜனதா விமுக்தி பெரமுன, சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2019 தேர்தலில் தான் போட்டியிட்டது. இடைப்பட்ட காலங்களில் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு சில இடங்களை வென்றன.

2014 பிப்ரவரி 2 முதல் ஜேவிபியின் தலைவராக இருந்து வருகிறார் அனுரா குமார திசநாயகே. அவரே அதிபர் தேர்தல்களிலும் போட்டியிட்டார்.

ஆனால், முந்தைய இரண்டு தேர்தலில் ஒற்றை இலக்க சதவிகித வாக்குகளைப் பெற்ற இவர், இப்போது தனது கூட்டணி சார்பில் 42.31 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் கடந்த அறுபதாண்டுகளில் மிக மெதுவாக வளர்ச்சி கண்டு தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஜேவிபி.

என்ன நடக்கும்?

உலகம் முழுக்க இடதுசாரி, வலதுசாரிக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் இடம்பெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் கூட சில வலதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனவை வெறுமனே இடதுசாரியாக மட்டும் கருதிவிட முடியாதபடி, வலதுசாரிச் சிந்தனைகளையும் அது தொடர்ந்து ஒலித்து வருகிறது.

குறிப்பாக, இலங்கையிலுள்ள தமிழர்கள் மாகாண சுயாட்சி அதிகாரம் பெறுவது குறித்தான எந்த அறிவிப்புகளையும் கடந்த காலத்தில் ஜனதா விமுக்தி பெரமுன வெளியிடவில்லை.

இந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூட அனுரா குமாராவின் பேச்சுகள் அந்நிலையிலேயே இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.  

தற்போது பொதுவுடைமை சிந்தனையைக் காட்டிலும், சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்துவதாகவே அக்கட்சி நோக்கப்படுகிறது. இந்த தேர்தலில், அதனாலேயே வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்கு சதவிகிதம் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், தற்போதைய இலங்கையின் பொருளாதாரச் சூழல், அங்கு மேற்கொள்ள வேண்டிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள், மாற்றங்களை முன்வைத்தே அக்கட்சி இத்தேர்தலை அணுகியதாகக் கூறப்படுகிறது.

ஆதலால், அந்த நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்திய வாக்குறுதிகளுக்கான வெற்றியாகவே இதனைக் காண வேண்டியிருக்கிறது.

தற்போதைய சூழலில், உலக அரங்கில் எந்த நாட்டுடன் அனுரா குமாரவின் அரசு நலம் பேணும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

இந்தியா, சீனா, ரஷ்யா, வடகொரியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் அதனால் அவரது அரசுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளும்.

அதேநேரத்தில், அந்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்ற கேள்விக்கு எவராலும் பதிலளிக்க முடியாது.

அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே ஒரு அரசின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், இதர விஷயங்களுக்கான முக்கியத்துவம் தானாக நீர்த்துப் போகும்.

எது என்ன ஆனாலும் அனுரா குமாராவின் தேர்தல் வெற்றி, உலகம் முழுக்கச் சிறிய நிலையிலுள்ள கட்சிகளுக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருப்பது உறுதி. தொடர்ச்சியான செயல்பாடுகள் மட்டுமே ஒரு கட்சியின் நீடித்த வளர்ச்சிக்கான அஸ்திவாரம் என்பதை ஜேவிபி நிரூபித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

– டாம் க்ரூஸ்

#இலங்கை_அதிபர்_அனுரா_குமாரா #இந்தியா #சீனா #ரஷ்யா #வடகொரியா #அமெரிக்கா #இலங்கை #இலங்கை_தமிழர்கள் #இடதுசாரி #வலதுசாரிக்_கட்சிகள் #Anura_Kumara_Dissanayake #Sri_Lanka_s_new_president #Anura_Kumara #அனுரா_குமாரா_திசநாயகே #இலங்கை #இலங்கை_அதிபர்_தேர்தல் தேசிய_மக்கள்_சக்தி_கூட்டணி #Anura_Kumara #அனுரா_குமாரா #npp

You might also like