யுத்ரா – ருசிக்காத ‘பழைய சோறு’!

ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.

மேற்குத் திசை முதல் கிழக்கு வரை, இந்த விஷயத்தில் விதிவிலக்கே கிடையாது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான ‘கில்’ படம் போன்று கொடூர வன்முறைச் செயல்பாடுகளைக் காட்டுகிற அதிரடி சண்டைக்காட்சிகளோடு உருவாகியிருக்கும் ஒரு திரைப்படமே ‘யுத்ரா’. அதே பாணியில், இதிலும் காதலுக்கு முக்கியத்துவம் உண்டு.

முந்தைய படம் போலவே, இதில் ஆக்‌ஷனும் ரொமான்ஸும் மிகச்சரியான கலவையில் அமைந்திருக்கிறதா? இந்த கேள்வியே ‘யுத்ரா’வைப் பார்க்கத் தூண்டியது.

சிறிய கதை!

மும்பை நகரத்தில் ஒரு கெடுபிடியான போலீஸ் அதிகாரி இருக்கிறார். போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குகிறார். அதனால் நல்ல பெயரைச் சம்பாதிக்கிறார்.

அந்த அதிகாரியின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். அந்த நிலையில், மனைவி சகிதம் போலீஸ் கிளப்பில் நடைபெறும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் அந்த அதிகாரி பங்கேற்கிறார்.

வீடு திரும்பும் வழியில், அவரது கார் விபத்துக்குள்ளாகிறது. ஒரு லாரி அதன் மீது மோதுகிறது.

விபத்தில் இருவரும் உயிரிழக்கின்றனர். ஆனால், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை சாகவில்லை. அதனை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கின்றனர்.

அந்த அதிகாரிக்கு கார்த்திக் (கஜராஜ் ராவ்), ரெஹ்மான் (ராம் கபூர்) என்று இரண்டு நண்பர்கள். மருத்துவமனையில், அந்த குழந்தையைத் தான் வளர்ப்பதாகக் கூறுகிறார் கார்த்திக். அந்தக் குழந்தைக்கு யுத்ரா என்று பெயரிடுகிறார்.

ரெஹ்மானுக்கு ஒரு பெண் குழந்தை. அவரது பெயர் நிக்கத்.

சிறு வயதில் யுத்ராவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல் நிக்கத் மட்டுமே. அவரே, உற்ற தோழியாக விளங்குகிறார்.

சக உயிரினங்களைத் தன்னுயிராக நினைப்பவர் யுத்ரா. அவற்றுக்குச் சிறு ஆபத்து என்றாலும், அதற்குக் காரணமானவர்களை ‘உப்புக்கண்டம்’ போட்டு விடுவார்.

தான் வளர்க்கும் ‘ஓணானை’ சக மாணவர்கள் கொன்றுவிட, அவர்களைக் கொடூரமாகத் தாக்குகிறார். அதனால், பள்ளியை விட்டு நீக்கப்படுகிறார்.

பிறகு, கார்த்திக் யுத்ராவை வேறு பள்ளியில் சேர்க்கிறார். கல்லூரி பயிலும் வயதில், புனேயிலுள்ள பாதுகாப்பு அகாடமியில் அவரைச் சேர்க்கிறார். ஆனால், அங்கும் அவரைப் பிரச்சனை துரத்துகிறது.

மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் நிக்கத்தைச் (மாளவிகா மோகனன்) சந்திக்கச் செல்கிறார் யுத்ரா. அங்கு அவரது நண்பருக்கும் இன்னொரு நபருக்கும் சண்டை ஏற்படுகிறது.

அப்போது, கும்பலாகச் சேர்ந்து சிலர் தனது நண்பரைத் தாக்குவதைக் காண்கிறார். அவர்களைத் தாக்குகிறார் யுத்ரா.

பதிலுக்கு அவர்கள் யுத்ராவை ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கின்றனர். அவ்வளவுதான். அவருக்குள் இருக்கும் கொலைவெறி பீறிட்டெழுகிறது. அனைவரையும் துவைத்துப் போட்ட சட்டையாய் ஆக்கிவிடுகிறார்.

அதற்காக பாதுகாப்பு அகாடமியில் இருந்து நீக்கப்படுவதோடு, அவருக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

சிறையில் யுத்ராவைச் சந்திக்கிறார் ரெஹ்மான். தான் ஒரு போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக ரகசிய ஆபரேஷனில் ஈடுபடுவதாகச் சொல்கிறார். அதில் யுத்ரா ஈடுபட வேண்டும் என்கிறார்.

அந்த கும்பலின் தலைவன் பெயர் ஃபெரோஸ் என்றும், அவரது கையாளான நாயுடு அதே சிறையில் இருப்பதாகவும், அவரை எப்படியாவது கவர்ந்து அந்த கும்பலோடு சேர வேண்டுமெனவும் யுத்ராவிடம் கூறுகிறார். அவரும் அவ்வாறே செய்கிறார்.

சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் யுத்ரா, நேராக ஃபெரோஸை சென்று காண்கிறார். அவர் பணம் தர, அதனை வேண்டாம் என்று மறுக்கிறார் யுத்ரா.

பதிலுக்கு, தனது உண்மையான பெற்றோரைக் கொன்ற நபரைத் தேடிப் பிடித்துக் கொல்ல ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தர வேண்டும் என்கிறார். அவ்வாறே நடக்க, வெளிநாட்டில் வாழ்ந்துவரும் அந்த நபரைக் கொல்கிறார்.

ஃபேரோஸ் உடன் கடத்தல் செயல்களில் ஈடுபட்டு நல்ல பெயரைப் பெறுகிறார் யுத்ரா.

ஒருநாள், அவரை சீனாவுக்கு அனுப்புகிறார் ஃபெரோஸ். அங்கிருந்து பெரிய அளவில் போதைப்பொருளைக் கடத்தி வருவதே திட்டம். அதனை அப்படியே செயல்படுத்த முனைகிறார் யுத்ரா.

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தபிறகு, சிலர் அவர்களது கப்பலுக்குள் ஊடுருவுகின்றனர். தாக்குதல் நடத்தி, அதிலிருந்தவர்களைக் கொல்கின்றனர்.

அப்போதுதான், அந்த கப்பலில் இருக்கும் கண்டெய்னரில் போதைப்பொருள் இல்லை என்பது யுத்ராவுக்குத் தெரிய வருகிறது. அதற்குள் அவர் மீது சில துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. அவர் கடலுக்குள் விழுகிறார்.

அதன்பிறகு என்னவானது? ஃபெரோஸ், ரெஹ்மான் தொடங்கி மற்றவர்கள் என்னவானார்கள்? இந்தக் கதையில் நிக்கத்தின் பங்கு என்ன? தவறு செய்யும்போதெல்லாம் தனது வளர்ப்பு மகனைக் காப்பாற்றத் துடிக்கும் கார்த்திக் எங்கு போனார்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விலாவாரியாகப் பதில் சொல்கிறது ‘யுத்ரா’வின் மீதி.

என்னதான் நீட்டி முழக்கினாலும், மேற்சொன்னதைப் படித்தவர்களுக்கு இந்தக் கதையின் சாராம்சம் மிகச்சிறியது என்று புரிந்திருக்கும்.

ஒரே சத்தமா இருக்கு..!

‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் ‘ஆவூன்னா கூட்டமா கொடி பிடிச்சிட்டு கிளம்பிடுறாங்க’ என்றவாறே வடிவேலுவை ஒரு காரில் அழைத்துச் செல்வார் என்னத்த கன்னையா.

எந்நேரமும் துப்பாக்கிச் சத்தம், எலும்பு முறியும் ஒலி என்று நாயகன் சித்தாந்த் சதுர்வேதியைக் காண்கையில் நாமும் அப்படித்தான் உணர்கிறோம். அவர் வரும் காட்சிகளில் நிறைந்திருக்கும் சத்தம் அத்தகையது.

குழந்தைத்தனமான முகத்துடன் அவர் சிக்ஸ் பேக்கை திரையில் காண்பிக்கும்போது, ‘தூள்’ படத்தில் வரும் ’யா.. இட்ஸ் மீ’ என்ற விவேக் காமெடி நினைவுக்கு வருகிறது.

மாளவிகா மோகனன். இதில் ஒரு சுற்று பெருத்திருக்கிறார்.

ஆனால், அந்தக் கவலை ஏதும் இல்லாமல் கவர்ச்சிகரமாக உடையணிந்து தோன்றியிருக்கிறார்.

அதுவே படத்தின் யுஎஸ்பி என்று நினைத்திருக்கிறது படக்குழு.

கஜராஜ் ராவ், ராம் கபூர், ராஜ் அர்ஜுன், ஷில்பா சுக்லா மற்றும் ‘கில்’ படத்தில் ஆசிஷ் வித்யார்த்தியின் மகனாக நடித்த ராகவ் புயால் உள்ளிட்ட சிலர் இதில் நடித்துள்ளனர்.

ஆனால், அவர்களது தேர்ந்த நடிப்பு கூடக் கிழிந்து நைந்து போன இதன் திரைக்கதையால் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெய் பினக் ஓஸா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ருபின் சுசாக், படத்தொகுப்பைக் கையாண்ட துஷார் பரேக் – ஆனந்த் சுபாயா, ஸ்டண்ட் கொரியோகிராபர்கள் பெட்ரிகோ,

சுனில் ரோட்ரிக்ஸ், ஆடை வடிவமைப்பாளர்கள் ஷலீனா நதானி, சபீனா ஹைதர் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் இப்படம் வண்ணமயமான காட்சியாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சங்கர் – இஷான் – லாய் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். திரும்பத் திரும்ப பாடல்களை டிவியில் பார்க்கையில், ஒருவேளை அவை பிடித்துப் போகலாம்.

பின்னணி இசையை சஞ்சித் & அங்கீத் பல்ஹாரா இணை அமைத்திருக்கிறது. அதில் தென்படும் மேற்கத்திய வாசனை, படம் பரபரப்பாக நகர்வதான உணர்வை உருவாக்கியிருக்கிறது.

ஸ்ரீதர் ராகவன் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். பர்ஹான் அக்தர், அக்‌ஷத் கில்டியால் வசனம் எழுதியிருக்கின்றனர்.

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் கதை பழையது. திரைக்கதையிலுள்ள பல காட்சிகள், அவை அடுக்கப்பட்ட வரிசை, அவற்றை உருவாக்கியிருக்கும் விதம், மொத்த உள்ளடக்கம் அனைத்தும் மிகப் பழையது.

ஏற்கனவே பார்த்துப் புளித்த விஷயங்களைத் திரையில் காட்டுவது தவறு என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அதுவே கூட ரசிக்கும்படியாக அமையும்.

நம்மை வேறொரு உலகத்திற்கு, உணர்ச்சி தளத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், இதிலோ அந்த ருசி கொஞ்சம் கூட இல்லை.

அதனால், முன்தயாரிப்பு பணிகளின்போது ‘யுத்ரா’வின் உள்ளடக்கம் குறித்து படக்குழு என்ன நினைத்திருந்தது என்பது நமக்குள் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.

ரவி உதய்வார் இதனை இயக்கியிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் ‘மாம்’ படம் தந்திருக்கிறார்.

’யுத்ரா’வின் மிகப்பெரிய மைனஸ், சீரியல் பாணியில் மிகச்சில பாத்திரங்களே திரையில் காட்டப்படுவது.

ஆனால், கதை நிகழும் களமோ பல ஆயிரம் உயிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. இரண்டும் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

’க்ளிஷேவாக உள்ளது’ என்று சொல்வதே ‘க்ளிஷே’வாகிப் போன சூழலில், ‘யுத்ரா’வின் உள்ளடக்கத்தை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை.

கதையொன்ற வஸ்துவை கொஞ்சம் கூடத் தயார் செய்யாமல், நேரடியாக ஒரு படத்தை உருவாக்க முயன்றால் எப்படியிருக்கும்? அப்படியொரு படமாகவே காட்சியளிக்கிறது ‘யுத்ரா’.

நாயகியின் கவர்ச்சி காட்சிகள், கூடவே நாயகனின் முரட்டுத்தனமான ஆக்‌ஷன், ஆங்காங்கே துப்பாக்கி சத்தம், நடுநடுவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பு பற்றிப் பேசும் சில பாத்திரங்கள், இவற்றைக் கொண்ட ஒரு படத்தை ‘டைம்பாஸ்’ ஆக பார்க்கலாம் என்பவர்கள் ‘யுத்ரா’வை ரசிக்கலாம்.

மற்றபடி, ‘இதுல என்ன இருக்கு’ என்பவர்கள் ‘யுத்ரா’ என்ற பெயரைக் கூட உச்சரிக்காமல் ஒதுங்கிச் சென்றுவிடுவது நல்லது!

-உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like