இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!

அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?

அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே அப்படியொரு அமைதியில் திளைக்க முடியுமா?

கிட்டத்தட்ட அப்படியொரு நோக்கோடு, அந்த கனவை நனவாக்க முடியுமென்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதியன்று ‘உலக அமைதி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

சாந்தி நிலவ வேண்டும்!

மனித மனங்களில் போர் குறித்த எண்ணங்களும் நினைவுகளும் மறைந்து, உலகம் முழுக்க அன்பு நிறைந்து, எல்லா உயிர்களும் ஆனந்தத்தில் திளைக்க வேண்டும். மிகச்சில மனிதர்கள் தங்களது தினசரி வேண்டுதலாக, விருப்பமாக, லட்சியமாக இவ்வார்த்தைகளை மனதுக்குள் உச்சரிக்கின்றனர்.

வெறுப்பையோ ஆத்திரத்தையோ கடக்காதவர் இவ்வுலகில் எவருமில்லை. ஆனால், அது மட்டுமே வாழ்வில் நிறைந்துவிட்டால் வேறு துன்பமில்லை. அது, இன்பத்தையும் கூட துன்பமாக நோக்கச் செய்யும். உண்மையைப் புரிந்துகொள்ள முடியாத அறியாமையில் தள்ளும். அமுதத்தை நஞ்சென்று நினைத்து ஒதுக்குவது எத்தகைய நட்டம்? அதனாலேயே, அமைதியின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு போதித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர் தருமர்கள் பலர்.

கடந்த நூற்றாண்டில் மனித மனங்களில் அமைதியை விதைக்கப் பாடுபட்ட மகான்களில் ஒருவர் மகாத்மா காந்தி. ஆன்மிகரீதியாக மட்டுமல்லாமல் தனிமனித சுதந்திரம் சார்ந்தும் சமத்துவமான சமூகம் சார்ந்தும் அப்படியொரு விருப்பத்தைக் கொண்டிருந்தவர். அந்த மகாத்மா வன்முறைக்குப் பலியானபோது, ‘சாந்தி நிலவ வேண்டும் ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்’ என்ற பாடலின் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தினார் இசை வித்துவான் சேதுமாதவ ராவ். இப்போதும் இப்பாடலை இசைக்கலைஞர்கள் இசைக்கும்போது, நம்முள் ஒருவித அமைதி பரவுவதை உணர முடியும்.

அமைதியோ அமைதி..!

உலகம் தழுவிய இரண்டு போர்கள் கடந்த நூற்றாண்டின் சில காலத்தைச் சிதைத்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இன்னொன்று வந்துவிடுமோ என்ற பயத்திலேயே பல்லாண்டு காலம் கழிந்துவிட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும், பாமர மனிதரின் கவனத்திற்கு உட்படாத வகையில் சன்னமாக நிகழ்ந்துவரும் சில நாடுகளின் ஆக்கிரமிப்பும் அந்த பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் நாடுகளுக்கு இடையிலான நேச உடன்படிக்கைகள் ஆண்டுதோறும் கையெழுத்தாகின்றன. போலவே, அமைதியை நிலைநிறுத்தக்கூடிய வழியாக ஆயுத பெருக்கம் முன்வைக்கப்படுகிறது.

அரசுகள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் கூட ‘முரண்களின் மூட்டை’யாக மாறிவரும் சூழல் நிலவுகிறது. ‘அமைதி என்றால்..’ என்று கேட்பவர்களும், ‘அமைதியோ அமைதி’ என்ற வார்த்தையையே கிண்டலாகவும் உச்சரிக்கும் நிலைமையும் இருந்து வருகிறது. வேகம் சார்ந்த வாழ்க்கை முறை அமைதி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்ற எண்ணத்தை ஆழ விதைக்கிறது. இந்த காலகட்டத்தில் தலைவர்கள் அமைதியை முன்மொழிவதை விட, மக்கள் ஒவ்வொருவரும் அதனை முன்னெடுப்பதே உலகில் போர் இல்லாத சூழலை உருவாக்க வழி செய்யும்.

அமைதியைக் கட்டமைப்போம்!

உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென்ற விருப்புடன், 1980-ம் ஆண்டு முதல் ‘சர்வதேச அமைதி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் உள்ள மணி இசைக்கப்படுகிறது. அப்போது எழும் பேரொலி சலனங்களை மட்டுப்படுத்தி நிசப்தத்தை தோற்றுவிக்குமென்பது நம்பிக்கை.

1980 முதல் 2000 வரை செப்டம்பர் மூன்றாம் வார செவ்வாய்கிழமையே இத்தினம் அனுசரிக்கப்பட்டது. விபத்தொன்றில் பலியான முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் ஹாமர்சீல்ட் நினைவாக அவ்வாறு பின்பற்றப்பட்டது. 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி ‘அமைதி தினம்’ கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. இத்தினத்தில் கட்டாயம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதையும் பல நாடுகள் பின்பற்றுகின்றன.

அமைதியை நிலைநாட்டுவதென்பது இடைவிடாமல் ஒரு அச்சில் சுழலும் வன்முறையின் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கு ஈடானது. குறைந்தபட்சமாக அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது மட்டுமே உலகைக் கொந்தளிப்புகளில் இருந்து காக்கும்.

குழந்தைகள் மனதில் அமைதி!

அமைதி என்பது கண்கள் உள்ளிட்ட ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதால் உருவாவதல்ல. வாழ்வின் இயல்போடு இயங்கும்போதும் உள்ளுக்குள் நிறைந்திருப்பது. காலையில் எழுவது முதல் இரவில் தூங்கச் செல்வது முதல் எத்தனை முறை அமைதியை இழந்திருப்போம் என்று எண்ணிப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும். அமைதியை இழப்பதால் உருவாகும் பதற்றமும் பாதுகாப்பின்மையும் பல்வேறு தவறுகளுக்கு வழி வகுக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்காகவாவது நாம் அமைதியை கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனைப் பயிற்சியாக அல்லாமல் வாழ்க்கை முறையாக கொள்ளும் இடம் நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

பெற்றோர்கள் அதனைச் செய்யும்போது, குழந்தைகளும் தானாக தமது கவனத்தை திருப்புவார்கள். அதேநேரத்தில் அமைதி என்பது சோம்பி இருப்பதல்ல என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அமைதி என்பது அசையாத நீர்ம நிலை. அது திட நிலையை விட உறுதிமிக்கது.

அது வாய்த்தபிறகு உங்களிடம் பெருகும் வேகமும் ஆர்ப்பரிப்பும் கூட தவறாகாது. ஏன், மாபெரும் கொண்டாட்ட மனோபாவத்தின் அடிநாதமாகவும் கூட அவ்வமைதி இருக்க முடியும். அந்நிலையை அடையும் எண்ணத்தை குழந்தைகளிடம் விதைத்துவிட்டால் போதும்; கொஞ்சம் கூட அவர்களது இயல்பை புரட்டாமல் இவ்வுலகில் அமைதியைத் தவழச் செய்ய இயலும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like