இந்த 2024-ம் ஆண்டு பல வரலாற்று சிறப்பு மிக்க நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைக் காணுகின்ற ஆண்டாக அமைந்துள்ளது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு (1924 – 2024)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு துவக்கம் (1925 – 2024)
குடி அரசு இதழின் நூற்றாண்டு துவக்கம் (1925 – 2024)
இன்றுடன் சிந்து வெளி அகழாய்வு அறிக்கையின் நூற்றாண்டு நிறைவு (20.09.1924 – 20.09.2024)
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிந்துவெளி அகழாய்வுக்கு அன்றைய இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக ஜான் மார்ஷல் இருந்தார். அப்போது இந்திய தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் சிம்லாவில் இருந்தது.
ஜான் மார்ஷல் சிந்துவெளி அகழாய்வு இடங்களான மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) என்னும் இரண்டு இடங்களில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களை நடுநிலையோடு ஆய்வு செய்தார்.
(ஜான் மார்ஷலுக்கு இந்திய மொழிகள் எதுவும் தெரியாதாம். குறிப்பாக சமஸ்கிருதம். இதை சிந்து வெளி ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் ஒரு ஆய்வரங்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் என்பது கூடுதல் தகவல்)
அகழாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். இவைகள் திராவிட மொழிக் குடும்பத்தின் நாகரிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை ஜான் மார்ஷல் அறிவித்தார்.
மேலும் வேத நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவை வேத காலத்தைவிட 1500 ஆண்டுகள் பழமையான நாகரிகம் என்பதையும் ஜான் மார்ஷல் தெரிவித்தார்.
அவ்வாறு சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமாக தனது ஆய்வு அறிக்கை மூலமாக ஜான் மார்ஷல் உலகுக்கு தெரிவித்த நாள் – செப்டம்பர் 20 1924.
வரலாற்று சிறப்புமிக்க சிந்து வெளி அகழாய்வு உண்மைகள் வெளிவந்து இன்றோடு (செப்டம்பர்-20, 2024) நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது.
இவை அத்தனையும் உள்ளடக்கிய ஒரு தெளிவான கட்டுரை பெரியார் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்ட விடுதலை மலர் 2024-ல் இடம் பெற்றுள்ளது. மலரைப் படிப்போருக்கு இது ஒரு போனஸாக அமைந்துவிட்டது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மலரில் சிந்து வெளி அகழாய்வு நூற்றாண்டு தகவலையும் சரியான நேரத்தில் வெளியிட்ட மலரின் ஆசிரியர் அய்யாவுக்கு எனது நன்றியும் வணக்கங்களும்.
– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.