சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

அதன்படி, ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. 2040க்குள் நிலவுக்கு சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து ரூ.20,193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2035க்குள் இந்தியாவிற்கென்று பிரத்யேக விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டம் ரூ.1,236 கோடியில் 2028ல் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான விண்கலம் அனுப்புவதற்கான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like