ஸ்கேம் 1992, ஸ்கேம் 2003, ஸ்கூப், லூட்டேரே, மாடர்ன் லவ் மும்பை போன்ற வெப்சீரிஸ்கள் மற்றும் சிம்ரன், ஷாகித், அலிகார், ஓமெர்டா, பாராஸ் போன்ற திரைப்படங்கள் வழியாக வித்தியாசமான கதைகளைச் சொல்லக்கூடிய இயக்குனராக அறியப்படுபவர் ஹன்சல் மேத்தா.
அவரது இயக்கத்தில், கரீனா கபூர் முதன்மை பாத்திரத்தில் நடித்த ‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
2022-ம் ஆண்டு பிரிட்டனில் இரு வேறு பிரிவினர் இடையே நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதுவே இப்படம் மீதான கவனத்தையும் ஒருங்கே குவித்தது.
உண்மையில் ‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?
பல திசைகளில் விசாரணை!
பக்கிங்ஹாம் ஷைர் பகுதிக்கு மாற்றலாகி வருகிறார் டிடெக்டிவ் ஜஸ்மித் பாம்ரா (கரீனா கபூர்). மால் ஒன்றில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானவர்களில் அவரது பத்து வயது மகனும் ஒருவர்.
தனியாக வசித்துவரும் அவருக்கு உற்ற துணையாக இருந்தது மகன் மட்டுமே. தந்தை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வார் என்பதே அவரது நிலைமையாக இருந்து வந்தது. அதனால், மகனைப் பறிகொடுத்த துக்கத்தை மறக்க இயலாமல் அவர் தவிக்கிறார்.
இந்த நிலையில், பக்கிங்ஹாம்ஷைர் பகுதியைச் சேர்ந்த இஸ்ப்ரீத் எனும் சிறுவன் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்படுகிறது. தல்ஜீத் – ப்ரீத்தி தம்பதியரின் வளர்ப்பு மகன் அச்சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.
புகார் பதிவான அன்றைய தினமே, அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அருகே கார் ஒன்றில் இஸ்ப்ரீத்தின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த கார் யாருக்குச் சொந்தமானது என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
அப்போது, அது சலீம் சௌத்ரி (அசாத் ரஜா) என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வருகிறது.
அவரது மகன் சாகுய்ப் தான் அந்த காரை அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். இமாமின் மகன் அவருடன் இருந்திருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
இஸ்ப்ரீத் கொலை வழக்கு விசாரணையை டிஐ ஹர்தீக் படேல் (ஆஷ் டாண்டன்) கையாள, அவருக்கு உதவியாளராக ஜஸ்மித் செயல்படுகிறார்.
இந்த நிலையில், சாகுய்ப் தான் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் என்று இமாமின் மகன் வாக்குமூலம் தருகிறார். அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்கிறார் ஹர்தீக்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவு வேறாக இருக்கிறது. நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இஸ்ப்ரீத் இறந்ததாக, அதில் உள்ளது.
சாகுய்ப், இஸ்ப்ரீத் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பதால், அந்த கொலை வழக்கு பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
சம்பந்தப்பட்ட இருவரது குடும்பத்தினரும் கொதிப்பில் இருக்கின்றனர். அதனைச் சாதகமாக்கிக் கொண்டு, சிலர் அசம்பாவிதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதையடுத்து, சாகுய்ப்பை நேரில் சந்தித்து முழு உண்மையையும் அறிய விரும்புகிறார் ஜஸ்மித். ஆனால், அவரோ விட்டேத்தியாகப் பேசுகிறார். ‘உண்மையைச் சொன்னால் மட்டும் என்ன வந்துவிடப் போகிறது’ என்கிறார்.
அவரது தாய், தந்தை வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, ‘என்ன நடந்தது’ என்று கேட்கிறார் ஜஸ்மித்.
இஸ்ப்ரீத் போதைப்பொருளை எடுத்து வந்ததாகவும், அவரிடம் தரப் போதுமான பணம் இல்லாததால் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவரை ஏரி நீரில் மூழ்கச் செய்ததாகவும் கூறுகிறார் சாகுய்ப்.
அச்சிறுவனைப் பயமுறுத்தவே அப்படிச் செய்ததாகக் கூறுகிறார். அங்கிருந்து கிளம்பும்போது தான் அச்சிறுவனின் சடலம் நீரில் மிதப்பதைக் கண்டதாகச் சொல்கிறார். பதற்றத்தில், பூட்டியிருந்த காரை அப்படியே விட்டுவிட்டுத் தானும் இமாமின் மகனும் ஓடி வந்ததாகச் சொல்கிறார்.
காருக்குள் இஸ்ப்ரீத்தின் சடலத்தைக் கொண்டு வந்து வைத்தது யார்? அந்த நபருக்கும் அச்சிறுவனுக்கும் என்ன விரோதம்? சிறுவன் கையில் போதைப்பொருளைத் தந்தது யார்?
அந்த கேள்விகளுக்குப் பதில்களை அறிய முற்படுகையில், பல்வேறு அதிர்ச்சிகளை எதிர்கொள்கிறார் ஜஸ்மித். இறுதியில், உண்மையான குற்றவாளியை அவர் கண்டறிந்தாரா என்பதுடன் படம் முடிவடைகிறது.
இந்தக் கதையில் விசாரணை பல்வேறு திசைகளில் திரும்புகிறது; அவற்றின் முடிவில் நமக்குப் புதிய தகவலொன்று தெரிய வருகிறது.
அது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. கூடவே, காவல் துறை விசாரணை எப்படியெல்லாம் இருக்கும் என்ற பிம்பத்தை நமக்குள் விதைக்கிறது. அதுவே இப்படத்தின் ஹைலைட்.
நேர்த்தியான படம்!
‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படத்தின் பெரும்பலம், ஒளிப்பதிவாளர் எம்மா டேல்ஸ்மேனின் பங்களிப்பு. கதையில் வரும் இருண்மைக்குப் பொருத்தமாக, பக்கிங்ஹாம்ஷைர் பகுதியை மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் படம்பிடித்திருப்பது அழகு.
படத்தொகுப்பாளர் அமிதேஷ் முகர்ஜி, ஆங்காங்கே ‘இண்டர்கட்’டில் முன்னதாக நடந்த காட்சித் துணுக்குகளை ‘மாண்டேஜ்’ ஆக காட்டி சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் மனவோட்டத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
கூடவே, குறைவான வசனங்களோடு நம்மைச் சிந்திக்க வைக்கும் கதை சொல்லலில் எந்தக் குறைபாடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்.
கேதன் சோதாவின் பின்னணி இசை மற்றும் நைட் சாங் ரிக்கார்ட்ஸின் பங்களிப்பினால், காட்சிகளின் தன்மை நமக்குள் எளிதாகக் கடத்தப்படுகிறது.
போலவே, மே டேவிஸீன் தயாரிப்பு வடிவமைப்பானது பிரிட்டனின் சிறு நகரமொன்றில் குடியேறிய இந்தியர்களின் வாழ்க்கை முறையைச் சொல்லும் விஷயங்களைக் காட்டுகிறது.
இந்தப் படத்தின் கதையை அஸீம் அரோரா எழுத, அவரோடு சேர்ந்து திரைக்கதை வசனத்தை ராகவ் ராஜ் கக்கர், காஷ்யப் கபூர் அமைத்திருக்கின்றனர்.
வழக்கமான படங்களில் நாம் காண்பவற்றை விடக் காட்சி எண்ணிக்கையைக் குறைத்து, சுருங்கச் சொல்லி விளக்கும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அது, திரைக்கதையில் நேரடியாகச் சொல்லப்படாத, அடிக்கோடிடப்படாத விஷயங்களை நமக்கு உணர்த்தவும் உதவியிருக்கிறது.
முகம் தெரியாத மனிதரொருவரின் மனக்குமுறலுக்குத் தன் மகனைப் பலி கொடுத்த துக்கம் நாயகியை வாட்டி வதைக்கிறது. அதனை முகத்தில் தேக்கி வைத்தவாறே, ஒவ்வொரு காட்சியிலும் தோன்றியிருக்கிறார் கரீனா கபூர்.
துளி கூட ‘மிகைத்தனம்’ இன்றி, காவல் துறையைச் சேர்ந்த ஒரு பிரிட்டன் இந்தியராகத் தோன்றியிருப்பது அருமை.
அவருக்கு அடுத்தபடியாக ஹர்தீக் ஆக வரும் ஆஷ் டாண்டன், தல்ஜீத் ஆக வரும் ரன்வீர் ப்ரார், ப்ரீத்தி ஆக ப்ராப்லீன் சாந்து நடித்துள்ளனர். இவர்கள் மூவரது நடிப்பு, கரீனா கபூர் அல்லாத காட்சிகளில் செறிவு மிகக் காரணமாகியிருக்கிறது.
இவர்கள் தவிர்த்து கெய்த் மில்லர், சஞ்ஜீவ் மிஸ்ரா, அசாத் ரஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஹன்சல் மேத்தா நேர்த்தியான காட்சியாக்கத்தைத் திரையில் தந்திருக்கிறார்.
குறிப்பிட்ட வண்ணங்களில் அமைந்த காகிதங்களைக் கத்தரித்து ‘கொலாஜ்’ ஓவியம் அமைத்தாற்போல, ‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படத்தை இழைத்திருக்கிறார்.
அந்த உழைப்பே, இப்படத்தைக் காணும்போது திரைக்கதையில் நிறைந்துள்ள வெறுமையையும், அதனால் உருவாகும் அயர்ச்சியையும் புறந்தள்ள செய்கிறது.
ஆங்கிலப்படமா இது?!
இந்தப் படத்தில் 80 சதவிகித வசனங்கள் ஆங்கிலத்தில் அமைந்திருக்கின்றன. ஆனால், நான் கண்டது இந்தி ‘டப்பிங்’ பதிப்பு தான். அதனால், ’ஹிங்கிலீஷ்’ பதிப்பைப் பார்த்தால் மட்டுமே இயக்குனர் உருவாக்க நினைத்த உலகத்தை நாம் முழுதாகக் காண முடியும்.
‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படத்தில் பெரும்பாலும் பிரிட்டன் வாழ் இந்தியக் கலைஞர்களே இடம்பெற்றுள்ளனர். முழுக்க அங்கேயே படம்பிடிக்கப்பட்டிருக்கிறது இப்படம்.
அனைத்தையும் மீறி, உண்மைச்சம்பவமொன்றைத் தழுவி இப்படம் உருவானதாகச் சொல்லப்படுவது இக்கதையை வேறு கோணங்களில் பார்க்கத் துணை நிற்கிறது.
வேறு நாடுகளுக்குச் சென்றாலும் மதம் சார்ந்த பிரிவினைகள் மனிதர்களுக்குள் நிலவுவதைச் சொல்கிறது இக்கதை.
கூடவே இளைய தலைமுறையினருக்கும் முந்தைய தலைமுறைக்கும் இடையே சில விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் முரண்களைச் சொல்கிறது.
ஒரு ‘போலீஸ் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்’ ஆக இப்படம் அமைந்தாலும், இதில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவு. ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் பெரிதாகக் கிடையாது.
ஆனால், வீடு திரும்பிய பிறகு இக்கதையை அசைபோட்டுப் பார்க்கத்தக்க வகையில் நிச்சயம் இப்படம் இருக்கும். காரணம், வெறுமனே ஒரு கொலை குறித்த விசாரணையாக மட்டுமே இப்படம் இல்லாதிருப்பதுதான்.
‘அது போதுமே’ என்பவர்கள் மட்டும் ‘தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படத்தைக் காணலாம். மற்றவர்களுக்கு, இது ‘தலைவலி’யாகத்தான் தெரியும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்