மது வடலரா 2 – ஒரு ‘காமெடி கலாட்டா’!

மது வடலரா எனும் தெலுங்கு படம் 2019இல் சத்தமின்றி வெளியாகிச் சில சாதனைகளைப் படைத்தது.

ஸ்ரீ சிம்ஹா என்ற புதுமுக நடிகரும், சத்யா எனும் நகைச்சுவை நடிகரும் இணைந்து நடித்த அந்த சின்ன பட்ஜெட் படம், பெரிய படங்களைத் தயாரித்தவர்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

தெலுங்கு படங்களுக்கே உரிய ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் இவற்றோடு கவர்ச்சிகரமான அம்சங்களும் அந்தப் படத்தில் தூக்கலாகவே இருந்து.

அனைத்தையும் தாண்டி ஒவ்வொரு காட்சியை எழுத்திலும் திரையிலும் வடிப்பதற்கு இயக்குனர் ரித்தேஷ் ராணாவும் படக்குழுவினரும் மெனக்கெட்டிருந்த விதம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

இதன் வெற்றிக்குப்பிறகு ஸ்ரீசிம்ஹா சில தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் அவரை புகழ் வெளிச்சம் பெற வைத்திருக்கிறது ‘மது வடலரா 2’.

சரி, இந்தப் படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது?

யாரு சாமி இவங்க..?!

பாபு (ஸ்ரீசிம்ஹா), யேசு (சத்யா) இருவரும் முதல் பாகத்தில் டெலிவரி பாய் ஆக வேலை பார்ப்பதாகக் காட்டப்பட்டிருந்தது.

அதில் தேஜஸ்வி எனும் நபர் தான் மோசடி செய்பவர் என்று இவர்கள் இருவரும் கண்டறிவதாகச் சொல்லப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகமானது, சில தகிடுதத்தங்கள் செய்து, ‘ஹி’ (HE) எனும் ஸ்பெஷல் டீமுக்கு பாபுவும் யேசுவும் செல்வதில் இருந்து தொடங்குகிறது.

ஸ்பெஷல் ஏஜெண்டான இருவரும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற விவகாரங்களை உடனடியாகப் புலனறிந்து தீர்வு காணும் வேலையைச் செய்கின்றனர்.

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் பிடித்து வைத்திருக்கும் நபர்களை மீட்டு, பிறகு கடத்தப்பட்ட நபர்கள் தரும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை லவட்டுவது இருவரது வாடிக்கை.

இந்த நிலையில், ஒருநாள் தாமினி என்ற பெண்மணி தனது மகளைக் காணவில்லை என்று பாபுவையும் யேசுவையும் வரவழைத்துச் சொல்கிறார். தனது மகள் கடத்தப்பட்டது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றும் கூறுகிறார்.

கடத்தல் கும்பலிடம் பேரத்தில் ஈடுபட்டு, அந்தப் பெண் இருக்குமித்தை முன்னதாகவே பாபுவும் யேசுவும் கண்டறிகின்றனர்.

தாமினியிடம் இருந்து 2 கோடி ரூபாயை வாங்கிவிட்டு, மகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, பணம் பறிபோய்விட்டதாகச் சொல்ல வேண்டுமென்பது இருவரது திட்டம்.

ஆனால், நடப்பதோ வேறு. இவர்கள் நாடகமாடி முடித்துவிட்டு தாமினியை அழைத்து வந்தால், அந்த இடத்தில் அவரது மகள் இல்லை. அந்த நேரத்தில் பாபுவின் மொபைலுக்கு ஒரு ‘அழைப்பு’ வருகிறது.

எதிர்முனையில் பேசும் நபர், அப்பெண்ணை மீட்க, ஒரு லாட்ஜுக்கு வருமாறு சொல்கிறார். அவர் சொன்ன லாட்ஜில், ஒரு அறைக்குள் யேசுவும் பாபுவும் நுழைகின்றனர்.

அங்கு, ஆகாஷ் என்ற பெயரில் சமூகத்தில் போதைப்பொருட்களை விற்று வரும் தேஜஸ்வியை (அஜய்) பார்க்கின்றனர். தேஜஸ்வியும் அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

உடனே, அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார் யேசு. அந்த நேரத்தில், யாரோ ஒருவர் தேஜஸ்வியைச் சுட, அவர் கீழே விழுந்து சரிகிறார்.

அடுத்த நாள் காலை. பாபுவும் யேசுவும் ஹி டீம் அலுவலகத்திற்குள் நுழைகின்றனர்.

அங்கு, ‘மகளைக் காணவில்லை’ என்று கூறி ஒரு பெண் புகார் கொடுக்க வந்திருக்கிறார். அவர், மாவட்ட மாஜிஸ்திரேட் தாமினி.

அப்படியானால் ஏற்கனவே தாங்கள் பார்த்த தாமினி, அவரது மகள் யார் என்று பாபுவும் யேசுவும் யோசிப்பதற்குள், ஒரு செய்தி சேனலில் யேசு தேஜஸ்வியை சுடுவதாக ஒரு வீடியோ ஒளிபரப்பாகிறது.

கூடவே, தாமினி சொல்லும் அடையாளத்தோடு காணாமல்போன அவரது மகளை யேசுவும் பாபுவும் அழைத்துச் செல்லும் காணொளியும் காட்டப்படுகிறது.

இருவருக்கும் மூளையே வெடித்துவிட்டது போன்ற அதிர்ச்சி. யாரோ தம்மைக் குறிவைத்து, இந்த சதி வலையில் மாட்ட வைத்திருப்பதாக உணர்கின்றனர்.

அங்கிருந்து தப்பித்து வெளியே சென்று, நடந்த குற்றத்தின் பின்னணியை அறிய முடிவு செய்கின்றனர்.

அது நிகழ்ந்ததா? பாபுவும் யேசுவும் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபணமானதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

‘யாரு சாமி இவங்க’ என்று சிரித்து வயிற்று வலி வரும் அளவுக்கு, சினிமாவில் காட்டப்பட்ட விஷயங்களையே காமெடியாக்கி வைத்திருக்கிறது பாபு – யேசு கூட்டணி.

இரண்டாம் பாகத்திலும் அவர்களது ‘அட்ராசிட்டி’ பார்க்குபடியாக அமைந்திருப்பது, அப்பாத்திரங்களை சிறப்புமிக்கதாக, ஒரு பிராண்டாக மாற்றியிருக்கிறது.

கலர்புல் ‘காமெடி’ படம்!

ஸ்ரீ சிம்ஹா தான் இதில் ஹீரோ. ஆனாலும், அவரது ஒரேமாதிரியான ‘எக்ஸ்பிரஷன்கள்’ ஒருகட்டத்தில் நமக்கு போரடிக்கின்றன.

அதனை ஈடுகட்டுவது போல, ஒவ்வொரு காட்சியிலும் இறங்கி அடிக்கிறார் சத்யா.

சுனில், பிரம்மானந்தம் உட்பட முந்தைய தலைமுறை தெலுங்கு காமெடி நடிகர்களைக் கலந்து கட்டியது போன்று நடிப்பில் வெளுத்திருக்கிறார்.

‘எலைட்’ மற்றும் ‘சில்லி’ காமெடி என்று இரண்டு முனைகளிலும் நடிக்கக்கூடிய திறனைக் கொண்டவர் வெண்ணிலா கிஷோர். இதிலும் அவரது அட்ராசிட்டி இருக்கிறது.

ஸ்ரீ சிம்ஹா, சத்யாவோடு ஹி டீமில் வேலை பார்ப்பவராக வந்து போகிறார் ஃபரியா அப்துல்லா.

தெலுங்கு படங்களில் வரும் அழகு தேவதையாக திரையில் தோன்றாவிட்டாலும், அவரை அழகுறக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்

இவர்கள் தவிர்த்து ரோகிணி, அஜய், சுனில் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

சின்ன பட்ஜெட்டில் ஒரு காமெடி படம் என்ற வகையில் முதல் பாகம் கவனம் பெற்றது. அதனால், இதில் பட்ஜெட் கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனைக் கொண்டு, காட்சியாக்கத்தில் பல வண்ணங்களை தூவியிருக்கிறது படக்குழு.

அது, நம் மனதில் அயர்வையோ, சோர்வையோ உருவாக்க அனுமதிப்பதில்லை. அது மட்டுமல்லாமல், லாஜிக் சார்ந்த கேள்விகளையும் யோசிக்க விடுவதில்லை.

சுரேஷ் சாரங்கமின் ஒளிப்பதிவு, நார்னி ஸ்ரீனிவாஸின் தயாரிப்பு வடிவமைப்பு, கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு, காலபைரவாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒன்றிணைந்து, திகட்டும் அளவுக்கு ஒரு காமெடி விருந்து படைக்கத் துணை நின்றிருக்கின்றன.

கேலி, கிண்டல் நிறைந்த நண்பர்கள் உடனான சுற்றுலா போன்று ஒரு இன்பகரமான அனுபவத்தைத் தரவல்லது ‘மது வடலரா 2’. இது ஒரு காமெடி கலாட்டா ஆக திரையில் மலர்ந்திருக்கிறது.

சமீபத்திய படங்களைப் போலவே, ‘போதை வேண்டாமே’ என்றுதான் இந்தப் படமும் சொல்கிறது.

அதற்கேற்ப போதை தபால்தலை என்றொரு விஷயத்தை இதில் காட்டியிருக்கிறார் இயக்குனர் ரித்தேஷ் ராணா.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே கதை பயணிக்கிறது.

அதனை நாம் உணரவிடாமல் தடுத்து, நம்மைச் சிரிக்க வைத்து தியேட்டரை விட்டு அனுப்பி வைக்கிறார் இயக்குனர்.

அவரது இந்த திறமை நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆம், எத்தனை பேர் அந்த திறமையை எதிர்பார்த்து தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

அப்படிப்பட்ட ரசிகர்களை மதித்து உரிய மரியாதையை இயக்குனர் ரித்தேஷ் ராணா செய்திருக்கும்போது, ‘லாஜிக்காவது.. ஒண்ணாவது..’ என்று தியேட்டரை நோக்கிப் படையெடுக்க மாட்டார்களா ரசிகர்கள்?

’அதனைச் சாதித்திருக்கிறது மது வடலரா 2’ என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like