போராட்டக் களத்தில் காந்தியின் மானுடம்!

காந்தி அரசியல் களத்தில் கால் பதிப்பதற்கு முன்னர், இந்த உலகத்திற்கு மாற்றத்தை கொண்டு வர இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. அவை தோட்டா அல்லது வாக்குச் சீட்டு.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஒரு முறை கூறினார்;

“தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.” – இதை காந்தி முழுமையாக நம்பினார்.

காந்தி மனிதத்துவம் நிறைந்த புதிய போராட்ட யுத்தியை உலகிற்கு அறிமுகம் செய்தார். தேசப்பற்று உள்ள அனைவரையும் காந்தி நேசித்தார்.

“தேச பக்தியின் காரணமாக ஒரு தீவிரவாதி குண்டு வீசினார் என்றாலும்கூட அவர் துணிவுள்ளவர் தான்” என்றார் காந்தி.

“தேச பக்தியினால் இயக்கப்பட்டாலும் ஓர் தீவிரவாதி மக்களிடமிருந்து விலகி பதுங்கியே இருக்கிறான். ஆனால் என்னுடைய ஆயுதம் எப்படிபட்டது என்றால், ஒளிந்து இருந்து மற்றவர்களை நீங்கள் கொல்ல வேண்டியதில்லை, மாறாக வெளிப்படையான அகிம்சைப் போராட்டத்தில் தன்னுயிரையும் இழக்க தயாராக இருக்க வேண்டும்.” என்றார் காந்தி.

ஒரு முறை அகிம்சை போராட்டத்திற்கும் வன்முறை போராட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார், “வன்முறை போரில், ராணுவ தலைமை வகிக்கும் ஜெனரல் பாதுகாப்பாக டாங்கிக்குள் கடைசியாக இருப்பார்.

ஆனால் எனது அகிம்சைப் போராட்டத்தில், போராட்டத்தை வழிநடத்துபவர் மக்கள் கூட்டத்தில் முதல் ஆளாக நிற்பார். ஒருவேளை சுடப்பட்டால் முதல் குண்டைத் தாங்குபவராக இருப்பார்.

அந்த போராட்டத்தில் அதன் தலைவர் ஒருகால் கொல்லப்பட்டால், அவருடைய உயிர்த் தியாகம் அவருடைய மக்களை விழிப்படையச் செய்து போராட்டத்தை உத்வேகப்படுத்தலாம்.”

நன்றி: முகநூல் பதிவு

You might also like