எல்லாத் துயரங்களும் கரையக் கூடியவையே!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தவிர்ப்பு தினம்

‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்று ஒரு சொலவடை உண்டு. துன்பத்தால் வாடுபவர்களிடம் ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று அறிவுரை கூறத் தொடங்கினால் இதனைக் கேட்க வேண்டியிருக்கும். அதிலிருக்கும் உண்மையை மறுக்க முடியாது.

அதே நேரத்தில், துன்பங்களைக் கண்டு அஞ்சி மிரள்வதோ, அது தரும் அழுத்தங்களில் இருந்து தப்பி ஓடுவதோ, அவற்றிலிருந்து விடுபட போதைப் பழக்கம் உள்ளிட்ட தவறான வழிகளை நாடுவதோ மாபெரும் நகரத்தில் நம்மை தள்ளும். அதையெல்லாம் விட கொடியது தற்கொலை முடிவைத் தேடுவது.

தினசரிகளைப் புரட்டினால் தற்கொலை குறித்த செய்தியைக் காணாமல் அதனைக் கீழே வைக்க முடியாது எனும் நிலைமையே இன்றிருக்கிறது.

பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களுக்கு செய்திகளைத் தெரிந்து கொள்ளவே அச்சப்பட வேண்டியிருக்கிறது.

இளைய தலைமுறையினர் என்றில்லை, நடுத்தர வயதுக்காரர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு வயதினரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதைக் கேள்விப்படும்போது சொல்லமுடியாத துக்கம் தலை முதல் கால் வரை படர்கிறது.

ஒவ்வொருவரும் இந்த எண்ணத்தை எதிர்கொள்ளாமல் வாழ்வைக் கடக்க முடியாது எனும் அளவுக்கு இவ்விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.

தொலைந்த அமைதி!

இருசக்கர வாகனமொன்றில் சென்று கொண்டிருக்கும்போது, இன்னொரு வாகனம் நம்மைக் கடந்து சென்றால் நம் அமைதி குலைந்துவிடுகிறது. அதை முந்திச் செல்லும் வேட்கை தொடங்கிவிடுகிறது.

போட்டி பொறாமை இல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் கடக்க முடியாது என்ற எண்ணம் வேர் பிடித்துவிட்டது.

வெற்றி என்ற ஒன்று இருந்தால் தோல்வியும் இருந்துதானே ஆக வேண்டும். ஆனால், இங்கு எல்லாருமே வெற்றியைக் குறி வைக்கின்றனர்.

நேர்மறை சிந்தனை என்ற பெயரில், எதிர்பக்கத்தை நோக்கவே தயாராக இல்லை. இதனால் வெற்றி நழுவும்போது கால்களுக்கு கீழிருக்கும் தரையே உடைந்து பாதாளத்திற்குள் சென்றது போலத் துடிக்கிறது மனம்.

இவ்வளவு ஏன், ‘மிகநாகரிகமாக இருக்கிறேன் பேர்வழி’ என்று எந்தவொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளாமலிருக்கும் வழக்கம் பெருகியிருக்கிறது.

உறவுகள் என்றில்லை நெருக்கமான நட்பு வட்டத்திலும் கூட எதையும் மனம்விட்டுப் பேசத் தயாரக இல்லை.

முன்பெல்லாம் எவ்வளவு அவமானகரமான, கேலிக்குரிய விஷயங்களாக இருந்தாலும் நண்பர்களுக்குள், தோழியருக்குள் பகிரும் வழக்கம் இருந்தது.

இன்று ‘சுயமரியாதை’ என்ற பெயரில் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வேலி அமைதியை தொலைந்துபோகச் செய்திருக்கிறது.

பணி சார்ந்த இடங்களில் மட்டுமல்லாமல் அன்றாடம் பேசிப் பழகுபவர்களிடமும் உறவுக்காரர்களிடமும் குடும்பத்தினரிடமும் கூட ‘அரசியல்’ செய்யும் வழக்கம் நம்மை மன அழுத்தங்களில் தள்ளுகிறது.

‘நான் தான் பெரிய ஆள்’ என்று காட்டுவது மட்டுமே இந்த அரசியலின் பின்னிருப்பது. அப்புறம் என்ன, இரும்பு மனிதனாக எந்நேரமும் இருப்பேன் என்ற நம்பிக்கை நசுங்கும்போது உருவாகும் வேதனை எழவே முடியாத மனநிலைக்கு ஆளாக்குகிறது.

அதுவே தற்கொலை முடிவை மேற்கொள்ளச் செய்து நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்தையே சூன்யமாக ஆக்கிவிடுகிறது.

கருகும் பால்யம்!

இன்று, எங்கும் எதிலும் முதலிடம் என்ற தாரக மந்திரமே குழந்தைகளிடம் விதைக்கப்படுகிறது. படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு, கலைகள் என்று எல்லாவற்றிலும் இதே கதைதான். அது நிச்சயம் சாத்தியமில்லாதது.

குழந்தைகளுக்கு அனைத்தையும் கற்றுத் தந்துவிடும் வேட்கை வேறு பெற்றோர்களை ஆட்டிப் படைக்கிறது.

அது, எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்காமல் எரிச்சலின் ஆழத்தில் முடங்கச் செய்யும் அபாயத்தையும் அடக்கிக் கொண்டிருக்கிறது.

இது போதாதென்று ‘இல்லை’ என்று சொல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்ற ஆவல் வேறு பெற்றோர்களிடம் நிறைந்திருக்கிறது.

உங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு ‘இருக்கிறது’ என்ற ஒற்றைப் பதிலைச் சொல்வது எத்தனை காலத்திற்குச் செல்லுபடியாகும்?

ஒரே கோணத்தில் தொடர்ந்து பார்த்தாலே கழுத்து வலிக்கும்; அப்படியிருக்க, ஒற்றை நோக்கோடு வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுத் தருவது எப்படிப்பட்ட முட்டாள்தனம்?

இது எல்லாமே சிறு தோல்விகளுக்கு கூட கூனிக் குறுகும் மனப்பான்மையையே இளந்தளிர்களிடம் வளர்க்கச் செய்கிறது. முடிந்தவரை அதனைத் தவிர்ப்பது நலம்.

வெறுமை மட்டும்தானா..?!

பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள், தொடர் வறுமை, பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் சிக்குதல், சமூக அந்தஸ்து குறித்த பயம், ஆரோக்கியமின்மை, மன அழுத்தங்களில் இருந்து விடுபடும் வழிகள் தெரியாமை என்று பல காரணங்கள் தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன.

கடன் சுமையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல என்று தெரிந்தும் சிலர் அந்த முடிவை மேற்கொள்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வெறுமை பொதுவானது. அவமானங்கள் சாதாரணமானது.

நமக்கு மட்டுமே அவை நிகழ்கின்றன என்று கருதுவதே தற்கொலை போன்ற கொடிய முடிவை நாடுவதற்கான முக்கியக் காரணம்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து ஒவ்வொரு மனிதரும் தனித்தீவு என்றான நிலையில், தோளோடு தோள் நிற்கும் பாங்கும் குறைந்து வருகிறது.

அடிப்படை ஆதார வேரை முழுமையாக அறுத்தபின்னர், விண் உயர வளர்வது எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும்?

ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சாவி உண்டு என்ற உண்மை புரிந்தும்கூட, அதனைத் தேடுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இல்லை.

அந்த உழைப்பு நம் முன்னோர்களிடம் இருந்தது.

அதனாலேயே, அன்று குறைவாக இருந்த தற்கொலை விகிதம் இன்று அதிகரித்திருக்கிறது.

அதனைச் சரிக்கும் வேகம் நம்மிடம் பெருக வேண்டும்.

இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஓராண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கின்றனர்;

இவர்களில் 15 முதல் 39 வயதிற்குட்பட்டோர் எண்ணிக்கை அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த காலகட்டமே மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாட்களாக வரையறை செய்யப்பட்டிருந்தது.

ஓரிரு தலைமுறைகளில் எப்படி அது மாறிப்போனது? இதற்கான பதில் மிக எளியது.

தனிமனிதர்கள் மட்டுமே அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது;

சில நேரங்களில் அரசின் முடிவுகளும் பொருளாதார மந்த நிலையும் தொழில்கள் தொடர்பான நடைமுறைச் சூழல் மாற்றங்களும் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றன;

அவற்றைப் பற்றி விவாதிப்பதைவிட, தனிமனிதர்களின் மன்ங்களில் மாற்றங்களை உருவாக்குவதே சரியானதாகவும் யதார்த்தமானதாகவும் தீர்வளிக்கும்.

உண்மையைச் சொன்னால், எளிமையைத் தொலைத்ததுதான் இப்பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. எத்தனை வயதானாலும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று எண்ணும் முதியோர்களிடம் அந்த எளிமையைக் காண முடியும்.

அதுவே மலை போன்ற பிரச்சனைகளையும் தலைக்கு மேல் தூக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் நிறைத்திருக்கிறது. அதனை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் கூட தற்கொலை எண்ணம் தலை தூக்கலாம்.

மிகச்சிறியதாக அந்த சந்தேகம் எழுந்தால் கூட, அதனைப் புறந்தள்ளாமல் உரிய தீர்வை தர தயாராக இருக்க வேண்டும்.

அறிவுரைகளை அள்ளி விளாசுவதற்குப் பதிலாக, அவர்கள் மனம் விட்டுப் பேச வழியுண்டாக்க வேண்டும்.

அவர்கள் தலை சாய்க்க விரும்பினால் தோள் தர வேண்டும். சுவாசத்தின்போது உள்ளிருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவது போல, அவர்களுக்குள் இருக்கும் நச்சு எண்ணங்கள் அகல வழிவிட வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், மனிதர்களின் துயரங்கள் எல்லாமே கண்ணீரில் கரையக்கூடியவை; ஒரு சமூகமாக இயங்கத் தேவையானதை செய்தாலே தற்கொலை எனும் அரக்கனை எளிதாக வீழ்த்தலாம். நீண்டகாலமாக அதனை விட்டு விலகி வந்திருக்கிறோம்.

மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு; கூட்டு சேர்ந்து வாழ்வது மட்டுமே அவனை இந்த பூமியில் நிலைக்கச் செய்யும்.

இந்த உண்மையை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது நம் கடமை!

– உதய் பாடகலிங்கம்

You might also like